Saturday, December 1, 2018

8.திருப்புகழ். 102.கொடும்பாளூர் 103. கடம்பந்துறை

8.திருப்புகழ் 102.கொடும்பாளூர்
103.கடம்பந்துறை

த்தலம் விராலிமலைக்கு அருகிலுள்ளது. "கோனாட்டுக் கொடும்பாளூர் " என்று  கொங்குமண்டல சதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொடும்பை எனவும் சொல்வார்கள். சரித்திரச்சிறப்புமிக்க இடம். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்தவர்கள் இதை மறந்திருக்க மாட்டார்கள்! இங்கு  மூவர்கோவில். ஐவர் கோவில். முசுகுந்தேஶ்வரர் கோவில் என பல கோவில்கள் இருந்திருக்கின்றன. 


மூவர் கோவில் 
Kasiarunachalam [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

இது அருணகிரி நாதர் தரிசித்த 102வது தலம். இவர் பாடிய  கோவில் எதுவெனத் தெரியவில்லை. இத் தலத்திற்குரிய  ஒரு திருப்புகழ்ப் பாடல் இருக்கிறது.

உபதேசம் பெற

கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
  கடனபயம் பட்டுக்                  கசடாகுங்

கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
  கலகலெனுங் கொட்புற்                  றுடன்மோதும்

அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
  றரவியிடந் தப்பிக்                             குறியாத

அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
  றருள்வசனங் கிட்டப்           பெறலாமோ


கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
  கொடிமருவுஞ் செச்சைப்                 புயமார்பா

கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
  குரைகடல்செம் பச்சக்                           கரவாளச்

சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
  திசைகளினுந் தத்தச்                           செகமேழுந்

திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
  திறல கொடும் பைக்குட்                       பெருமாளே.


முதல் நான்கு அடிகளில் சமய வாதிகள்  செய்யும் வீண் தர்க்கவாதங்களில் ஈடுபடக்கூடாது என்று சொல்கிறார்.

கலையில் வல்லவர்கள்  மதிக்கும் கல்வியிலும் [ கற்பு என்பது இங்கு கல்வி என்னும் பொருள் படும்] கலியுக  சம்பந்தமான  கட்டுக்களிலும் அடிமைப்பட்டு, கடமைகள் சம்பந்தமாய் அச்சம் அடைந்து,
பயனில்லாத சடங்குகளைக்கூறும் ஆறு சமயத்தார்களும்  வாதத்தில் ஈடுபட்டு தங்களுக்குள்  கூச்சலிட்டுப் பேசி, மனம் கழன்று அலைந்து ஒருவடோருவரைத் தாக்கி 
 கணக்கில்லாத தர்க்கத்திற்கு இடந்தரும் பல கலை நூல்களிலும் ஆசையை விட்டொழித்து, அந்த தர்க்கவாதங்கள் நடக்கும் இடத்திலிருந்து தப்பிப்பிழைத்து,
சுட்டிக்காட்ட முடியாத அறிவு இன்னதென்பதை அறிந்து, அத்துடன் சிலகாலம் நிலைத்திருந்து, உனது திருவருள் உபதேசம் கிடைக்கப்பெறுவேனோ !

"குறியாத அறிவை அறிந்து " என்கிறார், இது மிக முக்கியமான கருத்து. பரம்பொருளைப் பற்றி "இதுதான்அது " என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. 
'எனக்குத் தெரியும் '  என்று சொல்பவன் அதை அறியமாட்டான், அது மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத பொருள் என்று உபனிஷதம் அடித்துச்  சொல்லும்.

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்

அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?


என்று நம் அடிகள் கந்தரனுபூதியில் சொல்வார். 
"அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே " என்று வேறு ஒரு இடத்தில் சொல்வார். 

சமயவாதிகள் சண்டை: ஆரவாரமும் அனுபவமும்

மெய்ப்பொருளை அவரவரும்  அனுபவத்தில் உணரவேண்டுமே தவிர, வாதப் பிரதிவாதங்களால் விளக்க முடியாது. "கண்டவர் விண்டதில்லை" என்பர் பெரியோர். உண்மையான ஆன்மீக அனுபவம் இல்லாதவர்கள்தான் வார்த்தை ஜாலத்திலும் வாக்குவாதத்திலும் ஈடுபடுவர். Empty vessels make the most noise!

சமயத்தினருக்குள் தர்க்கவாதங்கள் தமிழ்நாட்டில் பல காலமாகவே நடந்துவந்திருக்கின்றன.
 "சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் " என்று மாணிக்கவாசக ஸ்வாமிகள் அருணகிரிநாதருக்கு 500 வருஷங்களுக்கு முன்பே சொன்னார் !

உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன பரசமய கலையாரவாரம் அற
உரை அவிழ உணர்வவிழ உளம் அவிழ உயிர் அவிழ
உளபடியை உணருமவர் அநுபூதி  ஆனதுவும்  ....மணநாறு சீரடியே
என்று சீர்பாத வகுப்பில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் நம் நாதர்.


ஆகையினால் உண்மையான ஆன்மீக சிந்தை உள்ளவர்கள் சமயவாதிகளின் சழக்குகளில் ஈடுபடக்கூடாது.

அடுத்த நான்கு அடிகளில் முருகனின் பெருமையை விளக்குகிறார்.
கொலைஞர்கள் எனப்பட்ட கொச்சைக் குறவர்கள் இனத்தில் வந்த வள்ளியை மணந்தவன் முருகன்.
கொடிய அசுரனாகிய சூரன் நெடிய மாமரமாகி அழிய. ஒலிக்கும் கடல் கலங்க, சக்ரவாளகிரி பிளவுபட, எட்டுத் திக்கிலும்  உள்ள மலைகள் பத்துத் திசைகளிலும் சிதற,
ஏழு உலகங்களிலும் முறுக்கிவிடப்பட்ட மயிலாகிய குதிரையைச் செலுத்தும் செட்டியாகிய  பராக்ரமசாலியே! கொடும்பை என்னும் தலத்தில் வீற்றிருக்கும்  பெருமாளே !
உன்னிடம் உபதேசம் பெறுவேனோ என்கிறார் அருணகிரியார்.


முசுகுந்தேஶ்வரர் கோவில்
R.K.Lakshmi [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

சமயவதிகளின் தர்க்கக் கூச்சலை பிற பாடல்களிலும் சொல்லியிருக்கிறார்.
பட்டாலியூர் என்னும் தலத்தில் (118 ) பாடிய பாடலிலும் இதைச் சொல்கிறார்.

சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
 சங்கற்பித் தோதும் வெகுவித  கலைஞானச்
சண்டைக்குட் கேள்வி யலமல ம்


அண்டற்குப் பூசை யிடுமவர்
  சம்பத்துக் கேள்வி யலமல ம்

 இமவானின்மங்கைக்குப் பாக னிருடிகள்
 எங்கட்குச் சாமி யெனவடி வந்திக்கப் பேசியருளிய   சிவநூலின்
மந்த்ரப்ரஸ்த்தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்


     வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே


அலம் அலம் = போதும், போதும்.

காஞ்சித் திருப்புகழ் ஒன்றிலும் இவ்வாறே சொல்கிறார்.

வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
  யத்துக் கத்துத்        திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
  னத்திற் பற்றற்          றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
  கிப்பொற் பத்மக்         கழல்சேர்வார்

தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
  வைக்கச் சற்றுக்          கருதாதோ


தீய வார்த்தைகள் சொல்லி, கடலலைபோல் கத்திக் கூச்சலிடும் சமயவாதிகளின் இடத்திலிருந்து நீங்கி, உன் அடியவர்களுடைய திருக்கூட்டத்தில் என்னையும் சேர்த்துவைக்க அருள்புரிவாயே என்று கூறுகிறார்.
இப்படி இன்னும் பல பாடல்களில் சொல்லியிருக்கிறார்.

103.கடம்பந்துறை

இது அருணகிரி நாதர் தரிசித்துப் பாடிய 103வது தலம்.கடம்பர்கோயில் எனவும் சொல்கிறார்கள். புராணப்பெயர் கடம்பவனம். சதுர்வேதபுரி என்றும் சொல்வார்கள்.இன்றைய குளித்தலையின் ஒரு பகுதி. பல புராண வரலாறுகள்  உடைய தலம்.ஸ்வாமி பெயர் கடம்பவனநாதர், கடம்பவனேஶ்வரர். அம்பாள் திருநாமம் பாலகுசாம்பிகை- முற்றாமுலையம்மை. அப்பரின் தேவாரப்பாடல் பெற்ற தலம்.

ஆரி யந்தமி ழோடிசை யானவன்
   கூரி யகுணத் தார்குறி நின்றவன்
   காரி கையுடை யான்கடம் பந்துறைச்
   சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.


   மறைகொண் டமனத் தானை மனத்துளே
   நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
   கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
   சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.


(5ம் திருமுறை )

[ஆரியம், ஆரியன் என்று சொல்லி அரசியல்   நடத்தும் ஆசாமிகள் இங்கு அப்பர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்,]


http://www.thevaaram.org/thirumurai
இங்கு அருணகிரிநாதர் பாடிய ஒரு பாடல் இருக்கிறது.

திருவடியைச் சேற

துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்
     புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்
    தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத்        திருதோளுந்

தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்
    பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்
    துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப்         பதிவாழ்வாய்


கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்
     குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்
     கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக்            குருநாதா

கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்
     குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்
    கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப்         பெருமாளே.


த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்
     குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற்      றமைவேனோ


விரிந்த கடம்பமலர்களால் ஆன  மென்மையான மாலையும், நிறைந்த புனுகும், பொதியமலையில் விளையும் பசுஞ்சந்தனமும், குங்குமச் சாந்தும் ஒன்று சேர்ந்து பொதிந்துள்ளனவும், எப்பொழுதும் நன்மையே தரும் பன்னிரு தோள்களையும்,

சோர்விலாத உனது ஆறு திருமுகங்களையும், உனது பூஜைக்குரிய முறைகளையும் மந்திரங்களையும், பழநி மலையையும் திருப்பரங்குன்றத்தையும்,
திருச்செந்தூரையும் துதிசெய்து போற்றுகின்ற  பக்தர்களின் சிந்தையிலும் வயலூர் தலத்திலும்  வாழ்பவனே !

கூட்டமான படங்களுடைய பாம்பும், கங்கையும், சந்த்ரனும், குராமலரும் அருகம்புல்லும், கொன்றை மலரும் நறுமணம் வீசும் சடையை உடைய சிவபிரானும்  தொழும் பெருமையை உடைய குரு
நாதனே !

பெருமை தங்கிய குடகில் உள்ள மலையில் தோன்றி வரும் சிவபிரானுக்கு இணையான சிவனை வழிபடும் குறுமுனி அகஸ்தியர் கொண்டுவந்த கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளிவந்த நதியாகிய காவிரி, வந்து பாயும் தென்கடம்பந்துறை தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

என்னுடைய  (மனம், வாக்கு, காயம் என்னும் ) திரிகரணங்களும் உன்னுடைய செம்மையான திருவடிகளை அணுகுவதற்கு உண்டான வழியை  உலகத் தொடர்பு அற்று காலையும் மாலையும்  அமைதியாக ஒருமையுடன் சிந்தித் திருக்கமாட்டேனா!

உள்ளமே பெருங்கோயில் !

கடவுள்  அடியார்களின் உள்ளத்தில் இருக்கிறார். அதனால்தான் அடியார்களின் வரலாற்றை "பெரிய புராணம்" என்று சொல்கிறோம்.
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.

என்றார் ஔவையார்.
"சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான ....பெருமாளே " என்று ஒரு பாடலில் சொல்வார் அருணகிரியார். அதையே இங்கும் சொல்கிறார்.

காவிரி தோன்றிய வரலாறு



கடம்பமரம் நிறைந்திருந்ததால் இது கடம்பவனம் எனப் பெயர்பெற்றது  >>>
இந்தப்பாடலில் காவிரி தோன்றிய வரலாற்றைச் சொல்கிறார். காவிரி குடகில் பிறந்தாலும் ஒரு சோழமன்னன் செய்த தவத்தால் தமிழ்நாட்டுக்கே அதிக நன்மை புரிந்தது. காவிரியின் இரு கரையிலும் உள்ள கோவில்கள்  அந்த நதியுடன் நமக்கிருக்கும் தெய்வீகத் தொடர்பை  பறைசாற்றுகின்றன. இது உலகத்தில் வேறு எந்த இடத்திலும்,  வேறு எந்த நதிக்கரையிலும் நிகழாத அதிசயம், கங்கைக் கரையிலும் இது நிகழவில்லை. இந்த நிலை இன்று மாறிவருகிறது. இன்றைய நாத்திக அரசியல் வாதிகள் கோவிலையும் சுரண்டுகிறார்கள், காவிரியையும் அரசியலாக்கிவிட்டார்கள்.




No comments:

Post a Comment