Tuesday, December 11, 2018

15.திருப்புகழ் 116.எழுகரைநாடு.117.தென்சேரிகிரி 118.பட்டாலி-சிவமலை

15.திருப்புகழ் 116.எழுகரைநாடு

இது இடம் விளங்காத ஸ்தலம் என்றாலும் வட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தது என்று தணிகைமணி யவர்கள் எழுதியிருக்கிறார். சிலர்  இது இலங்கையில் இருக்கிறதென்றும் குடகில் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள். அருணகிரிநாதர் தரிசித்த 116வது ஸ்தலமான இதில் பாடிய மிக உருக்கமான பாடல் ஒன்று இருக்கிறது.

பரம்பொருளைப்பெற

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
  விழிபுனல் தேக்கிட       அன்புமேன்மேல்

மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
  விழைவுகு ராப்புனை        யுங்குமார


முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
  முலைநுகர் பார்த்திப        என்றுபாடி

மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
  முழுதும லாப்பொருள்       தந்திடாயோ


பரகதி காட்டிய விரகசி லோச்சய
  பரமப ராக்ரம        சம்பராரி

படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
  பகவதி பார்ப்பதி        தந்தவாழ்வே

இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
  எழுகிரி யார்ப்பெழ        வென்றவேலா

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
  எழுகரை நாட்டவர்         தம்பிரானே.


விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் =  தந்திரம் இல்லாத நேரான புத்தியுடன் உன்னைக் கருதியும், உன்னை நினைத்து மனம் உருகியும், உன்னை வாழ்த்தியும்.
அன்பு மேன்மேல் மிகவும்  = உன்னிடம் பக்தி  மேன்மேலும் வளரவும்,
ராப்பகல் பிறிது பராக்கற  == இரவும் பகலும்  பிறவிஷயங்களைச் சிறிதும்  நினைக்காமல்,
விழைவு குராப்புனையும் குமார ==  குராமலரை விரும்பி அணியும் குமரனே !
முருக, ஷடாக்ஷர  சரவணபவனே!
கார்த்திகை முலை நுகர் பார்த்திப  =  கார்த்திகை மாதர்களின் முலைப்பால் அருந்திய அரசனே !
என்று  பாடி
மொழி குழறாத் தொழுது = மொழி குழறும்படி  உன்னைத் தொழுது,
அழுதழுது ஆட்பட  =  மனம் உருகி அழுது உனக்காட்பட்டு
முழுதும் அலாப்பொருள் = இந்த  உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த அந்த மெய்ப்பொருளை  (ஞானத்தை )
தந்திடாயோ 
பரகதி காட்டிய விரக = (சம்பந்தராக வந்து தேவாரம் மூலமாக ) உலகத்தவருக்கு  மோக்ஷவீட்டைக் காட்டிய  சாமர்த்யசாலியே
சிலோச்சய = மலைகளுக்கு அரசே
பரம பராக்ரம
சம்பராரி பட விழியாற் பொரு  = மன்மதன் சாம்பலாய் அழிய,  நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த
பசுபதி போற்றிய பகவதி  பார்ப்பதி தந்த வாழ்வே = பசுபதியாகிய சிவபிரான் போற்றிய   செல்வமே !பகவதி  பார்வதி  தந்த பெருவாழ்வே !
இரைகடல் தீப்பட = அலை ஓசையுடன் கூடிய கடல் தீப்பற்றி எரியவும்.
நிசிசரர் கூப்பிட  = அசுரர்கள் அலறிக் கூப்பாடு போடவும்,
எழுகிரி ஆர்ப்பெழ =  ஏழு மலைகளும்  பெருஞ்சப்தத்துடன்  நொறுங்கியழியவும்,
வென்ற வேலா-
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய = தேவர்கள் அனைவரையும் மீண்டும் அவர்கள் நாட்டில் குடியேற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே !
மெய்ப்பொருளை  அருள்வாயே !
இந்தப்பாடலில் அரிய பெரிய விஷயங்களை அனாயாசமாகச் சொல்கிறார்.

விரகற நோக்கியும் என்பது முக்கியமான உபதேசம். பகவானை வஞ்சமில்லாமல், வக்ரபுத்தி, தந்திர எண்ணம் எதுமில்லாமல் அணுகவேண்டும். "விமல ஹ்ருதய " என ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் சொல்வார்.  "அனஸூயவே " என்று கீதையில் வரும்.
பிறிது பராக்கர = பக்தி வழியைப் பற்றுவோர் பிற விஷயங்கள் எதிலும் நாட்டம் கொள்ளலாகாது. இந்த நிலையை " அனன்ய சிந்தை", "அனன்ய சேதா" என்று பகவான் கீதையில் சொல்வார்.
அழுதழுது - அழுதால் உன்னைப் பெறலாமே என்பார் மாணிக்கவாசகர்.
"மொழி குழற  அழுது தொழுது உருகுமவர் விழி அருவி முழுகுவதும் " என்று சீர்பாத வகுப்பில் சொல்வார்.
முழுதும் அலாப் பொருள் = மெய்ப்பொருளை- கடவுளை 'இதுதான் அது' என்று சுட்டிக்காட்ட முடியாது. ப்ரஹ்மத்தை இதுதான் என்று சொல்லமுடியாது. தெரியும் என்று சொல்பவன் அறியமாட்டான், அறிந்தவன்  சொல்லித்திரிய மாட்டான் ,  உலகத்தவர் சொல்லும் எதுவும் அதுவல்ல  என்பது உபனிஷதம். எல்லாவற்றையும் கடந்தது கடவுள்.
"உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென நின்றதுவே " என்பார் கந்தர் அநுபூதியில்.
பரகதி காட்டிய  விரகன் - இதை அருணகிரிநாதருக்கு முருகன் செய்த அருளாகவும் கொள்ளலாம். ஆனால் தேவாரம் பாடி உலகத்தவர் அனைவருக்கும் முக்திக்கு வழிகாட்டிய  திருஞானசம்பந்தர் எனக்கொள்வதே சிறப்பு.





 117.தென்சேரிகிரி
இது பல்லடத்திற்கு அருகே உள்ள இடம். செஞ்சேரி என்று சொல்கிறார்கள். அருணகிரிநாதர்  தரிசித்துப்பாடிய 117 வது தலமான இதற்கான இரண்டு பாடல்கள் இருக்கின்றன. இரண்டும் அருள் வேண்டுவதாக அமைந்த பாடல்.

சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
  சந்தாரும் வெதிருகுழ            லதுவூதித்

தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
  தங்கூறை கொடுமரமி        லதுவேறுஞ்

சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
  சென்றேயும் அமரருடை        சிறைமீளச்

செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
  தென்சேரி கிரியில்வரு            பெருமாளே.


தண்பாரு முனதருளை              யருள்வாயே.

(எங்கேனும் ஒருவர் )

சங்குடன் சக்கரமும்  ஏந்தி,  பசு மந்தைகளின் பின் சென்று, தொளையிட்ட மூங்கில் குழலை ஊதியவனும்,
தன்மேல் கொண்ட ஆசையைக் கடக்க மன எழுச்சிபெற்ற பெண்களின்  ஆடையை எடுத்துக்கொண்டு குருந்த மரத்தில் ஏறியவனும், அழகிய உருவம் கொண்டவனுமான   திருமாலின் மருகனே !
தாமரை மலரில் வாழும்  பிரம்மனும் மருண்டுபோக, சென்று முறையிட்ட தேவர்களின் சிறையை நீக்கி, தேவர்களைப் பந்துபோல் சிதற அடித்து,
ஒன்றுகூடி அடியார்கள் அனைவரும் தொழும் தென்சேரிகிரியில் அமர்ந்த பெருமாளே !
குளிர்ச்சி பொருந்திய உன் திருவருளைத் தருவாயாக. 

உபதேசம் அருள


வண்டாடத் தென்றல் தடமிசை
  தண்டாதப் புண்ட ரிகமலர்
  மங்காமற் சென்று மதுவைசெய்          வயலூரா

வன்காளக் கொண்டல் வடிவொரு
  சங்க்ராமக் கஞ்சன் விழவுதை
  மன்றாடிக் கன்பு தருதிரு             மருகோனே

திண்டாடச் சிந்து நிசிசரர்
  தொண்டாடக் கண்ட வமர்பொரு
  செஞ்சேவற் செங்கை யுடையசண்         முகதேவே


சிங்காரச் செம்பொன் மதிளத
  லங்காரச் சந்த்ர கலைதவழ்
  தென்சேரிக் குன்றி லினிதுறை           பெருமாளே.


பண்டேசொற் றந்த பழமறை
  கொண்டேதர்க் கங்க ளறவுமை
  பங்காளர்க் கன்று பகர்பொருள்           அருள்வாயே


(கொண்டாடிக் கொஞ்சு )

தென்றல் தவழும் குளத்தை விட்டு நீங்காமல், அங்கு உள்ள தாமரை மலர்கள் மங்காது  அவற்றின் தேனை  வண்டுகள் ஆடிப்பருகும் வயலூரில் உறைபவனே !
கருத்த மேகம் போன்ற நிறமுடைய , போர் செய்யும் எண்ணமுடைய வலிய கம்சன் மடிந்து விழும்படி தாக்கி உதைத்துப் போராடிய  க்ருஷ்ணரிடம் அன்புகொண்ட  லக்ஷ்மியின் மருகனே !
அசுரர்கள்  சிதறித் திண்டாடும் படியாகவும், அடிமைப்படும் படியாகவும் செய்து, அவர்களுடன் சண்டையிட்ட  ஷண்முக தேவே !செந்நிறமான  சேவலைச் செங்
கையில் தாங்கியவனே!
செம்பொன்னின் அலங்காரம் கொண்ட அழகிய மதில்களைச்   சந்திரன் கதிர்கள்  தழுவுவதான தென்சேரிகிரியில் இனிதே வீற்றிருக்கும் பெருமாளே!
 தொன்மையான வேத மொழியைக் கொண்டு, தர்க்க வாதங்களுக்கு இடமில்லாதபடி, இடது பாகத்தில் உமையைக்கொண்ட சிவபிரானுக்கு முன்பு உபதேசித்த பிரணவப் பொருளை எனக்கும்  உபதேசித்து அருள்வாயாக.

இந்த இரண்டு பாடல்களிலும் பாகவத நிகழ்ச்சிகளைச் சொல்லியிருக்கிறார்.





118.பட்டாலி-சிவமலை
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த  118வது தலமான பட்டாலி-சிவமலை கொங்குநாட்டில் காங்கேயத்துக்கு அருகில் உள்ளது. இதற்கு ஸ்தலபுராணம் இருக்கிறது, அருணகிரியார் பாடிய மூன்று பாடல்கள் இத்தலத்திற்கு இருக்கின்றன.

திருவடி பெற

முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
  மரகத கிரணப் பீலி மாமயில்
  முதுரவி கிரணச் சோதி போல்வய          லியில்வாழ்வே

முரண்முடி யிரணச் சூலி மாலினி
  சரணெனு மவர்பற் றான சாதகி
  முடுகிய கடினத் தாளி வாகினி          மதுபானம்

பருகினர் பரமப் போக மோகினி
  அரகர வெனும்வித் தாரி யாமளி
  பரிபுர சரணக் காளி கூளிகள்          நடமாடும்


பறையறை சுடலைக் கோயில் நாயகி
  இறையொடு மிடமிட் டாடு காரணி
  பயிரவி யருள்பட் டாலி யூர்வரு         பெருமாளே.


 உனதடி நிழலிற் சேர வாழ்வது          மொருநாளே

(இருகுழை இடறி )

நறுமணம் வீசும் மாலையைச் சூடி உனக்கு வாகனமாக விரும்பிய  பச்சை நிறமுள்ள தோகையைகொண்ட  சிறந்த மயில்மீது, சூரியனுடைய ஒளியைப்போல் விளங்கி வயலூரில் வாழ்பவரே !
வலிமை வாய்ந்த முடியையுடைய, போருக்கான சூலாயுத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், தன்னைப் புகலாக அடைந்த சாதகர்களுக்குப் பற்றாக இருப்பவள்,  விரைவாகச் செல்லும்  யாளி அல்லது  சிங்க வாஹனத்தை யுடையவள்., 
 (வாமாசாரம்  பின்பற்றி )கள்ளுண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி,,அரகர என அதிக ஒலி செய்பவள், சியாமள நிறம் உடையவள், சிலம்பணிந்த கால்களை உடைய காளி, 
பேய்கள் நடனமாடுவதும் பறைகள் ஒலிப்பதுமான   சுடுகாட்டுக் கோயிலின் தலைவி, சிவபிரானுடன் இருந்துகொண்டே காரணமாக நடனம் செய்பவள், பயிரவி தேவி பெற்றருளியவனும், பாட்டாலியூரில்  அமர்ந்திருப்பவனுமான பெருமாளே !
உனது திருவடியில்  பொருந்தி வாழும்படியான வாழ்க்கை ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா !ட்
அம்பாளுக்கு  லலிதா, புவனேஶ்வரி போன்ற சௌம்ய ரூபமும் உண்டு; அசுரர்களை வதைக்க எடுத்த துர்கை, காளி  போன்ற பயம்தரும் ரூபங்களும் உண்டு.  சிங்கம், புலியைக்கண்டு அதன் குட்டிகள் பயப்படுவதில்லை. அதுபோல் அம்பாளின் பயங்கர ரூபங்களைக் கண்டு பக்தர்கள் பயப்படத் தேவையில்லை!இரண்டையும் பல இடங்களில் அருணகிரிநாதர்  பாடியிருக்கிறார். தேவேந்திர சங்க வகுப்பிலுள்ள 16 அடிகளில் முதல் 12 அடிகளில் அம்பாளின் பலரூப வர்ணனைதான்!  இத்தகைய வாக்கை வேறு எங்கும் காணமுடியாது.

இளமையிலேயே  பக்தி

அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
  லச்சான வயலி நகரியி               லுறைவேலா

அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
  டக்காகி விரக பரிபவ              மறவேபார்

பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
  பற்றாய பரம பவுருஷ            குருநாதா

பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
  பட்டாலி மருவு மமரர்கள்          பெருமாளே.


கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
  குற்றேவல் அடிமை செயும்வகை         யருளாதோ


(கத்தூரி யகரு )

தூரத்தில் வரும்போதே நிச்சயம் தரிசனத்தைத் தரும்  நெடிய பொன் மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூரில் அமர்ந்திருக்கும் பெருமாளே !
இது என்ன அதிசயம் என  பரவை நாச்சியார்  மகிழ்ந்து தன்வசமிழக்க, அவர்மீது கண்ணும் கருத்துமாயிருந்த  சுந்தரரின்  கவலை அறவே நீங்குவதற்கு,
இந்தப் பூமியில் பத்து இலக்கணங்களும் பொருந்தியிருந்த சுந்தரர் தம்மைப் பரவிப் போற்ற,  (அவருக்காக)  வேகமாக தூது சென்ற உண்மைத் தூதுவரும், தம்முடன் உள்ளம் கலக்கத் திருவருள் செய்பவரும் உற்ற துணையாக இருப்பவருமான சிவபிரானுக்கு பவுருஷம் நிறைந்த குருமூர்த்தியே !
பசிய ஓலைகள் நிறைந்து விளங்கும் பனைமரங்கள்  வளர்ந்துள்ள  இருண்ட சோலைகளில்  மயில்கள் நடனம் செய்கின்ற பட்டாலியூரில் அமர்ந்த பெருமாளே!
தேவர்கள் பெருமாளே !
கொக்குப்போல் வெண்ணிறமான நரைகள் வருமுன்பு, இந்த உடல் இளமையாக இருக்கும்போதே , முயற்சியுடன் உனக்கு  அடிமைபூண்டு  பணிவிடை செய்யும்படி அருள் தரலாகாதா !

சுந்தரருக்காக சிவபிரான் பரவை நாச்சியாரிடம் தூது சென்ற  லீலையை இங்கு நினைவு கூர்கிறார். 
இங்கு அருணகிரியாசான் ஒரு முக்கிய உபதேசம் செய்கிறார். தெய்வ, ஆன்மீக ஈடுபாடு வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்பதே பொதுவான  கருத்தாக இருக்கிறது. ஆனால் யாருக்கு எத்தனை வயது என்று யார் சொல்ல முடியும்? 
நீநாளும்  நன்னெஞ்சே நினைகண்டாய்  யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும்  சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளும்  தலைசுமப்பப் புகழ்நாமம்  செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.


என்று  பாடுகிறார் சம்பந்தர்.  அதனால் இளமையிலேயே இறை சிந்தனையைப் பெறவேண்டும்.




வம்பில்லாத முக்தி !

வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
  வென்றிச்சக் ரேசன் மிகமகிழ்          மருகோனே

வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
  விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை          வயலூரா

கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
  கொண்டைக்கொப் பாகு முகிலென          வனமாதைக்

கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
  கொங்கிற்பட் டாலி நகருறை                    பெருமாளே.


சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
  சங்கற்பித் தோதும் வெகுவித          கலைஞானச்

சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
  சம்பத்துக் கேள்வி யலமல               மிமவானின்

மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
 வந்திக்கப் பேசி யருளிய             சிவநூலின்

மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
  வம்பிற்சுற் றாது பரகதி           யருள்வாயே



பராக்ரமம் மிக்க சுக்ரீவருடைய  சேனையை  கடல்கடந்து இலங்கைக்குப் போகச் செய்தவனும்,  ஜெயத்தையே தரும் சக்கரத்தை ஏந்தியவனுமான  திருமால்  மிகவும் மனம் மகிழும் மருகனே !

வெண்பட்டு அணிந்தது போல் நல்ல பாக்கு மரங்கள்  பாளைகளை விரிக்கின்ற  சோலைகள் சூழ்ந்து வெய்யிலை மறைக்கின்ற  வயலூரில் உறைபவனே !
வள்ளியைப் பலவாறு புகழ்ந்து ஆசையுடன் கொஞ்சிப்பேசி இனிய சொற்களால் பாடிப்பரவிய இளையோனே ! கொங்கு நாட்டுப் பட்டாலியில் அமர்ந்த பெருமாளே !
சந்தேகக் கூச்சலோடு  வாதம் செய்யகூடிய ஆறுவித சமயிகளும், தாங்கள்  உறுதிசெய்துகொண்டு பேசுகின்ற  பலவிதமான சண்டைக்கு வேண்டிய  சாத்திர ஞானம் போதும், போதும்.
இமவான் புதல்வியான பார்வதிக்குப்  பாகர் என்றும், ரிஷிகள் எல்லாம் எங்களுக்குச் சுவாமி என்றும்,  திருவடியைத் துதிக்க சிவ நூல்களில் சொல்லப்பட்ட மந்திர-தந்திர  (சக்கர ) விளக்க ஆராய்ச்சி அறிவும் போதும், போதும்.
இங்கனம் வீணான வழிகளில் நான் சுற்றியலையாமல் மோக்ஷத்தை நீ தந்தருள்வாயாக.

இதுவும் மிக முக்கியமான பாடல். சமய விளக்கம் என்ற பெயரில் வீணான தர்க்கவாதங்கள் மிகுந்துள்ளன. ஒவ்வொரு சமயத்தினரும், அதற்குள் ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்குள் ஓயாது சச்சரவிட்டு வருகின்றனர். "சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் " என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். அருணகிரிநாதர்  எளிய,  நேரடியான பக்தி வழியையே போதிப்பவர். அதி தீவிர மந்திர-தந்திரங்கள் அவருக்குப் பிடித்தமில்லை.
"காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதல் மிக எளிதே " என்று அலங்காரத்தில் சொல்வார்.
"ஆன பய பக்தி வழிபாடு பெறு முக்தி " என  திருவேளைக்காரன் வகுப்பில் சொல்வார்.  அதுபோல் இங்கும்  "வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே " என்று வேண்டுகிறார். பக்தியே  நேர்வழி. வீணான சுற்றுவழிகள் தேவையில்லை. 
இதையே கீதையும் போதிக்கிறது.

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः।।9.34।।

மன் மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்யைவம் ஆத்மானம் மத் பராயணம்.
என்னிடமே மனதை நிலைக்கச்செய்தவனாக ஆகிவிடு. என் பக்தனாக ஆகிவிடு,
என்னை பூஜிப்பவனாக ஆகிவிடு. என்னையே நமஸ்கரி. இவ்விதம்  மனம், புலன் களை  என்னிடம் ஈடுபடுத்தி, (ஆத்ம சமர்ப்பணம் செய்து ) என்னையே அடையத்தக்க ஒரே புகலாகக் கொண்டு என்னையே அடைவாய்.

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे।।18.65।।

மன் மனாபவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே.
என்னிடமே  மனதை நிலைக்கச்செய்தவனாக ஆகிவிடு. என் பக்தனாக ஆகிவிடு. என்னை பூஜிப்பவனாக ஆகிவிடு. என்னையே நமஸ்கரி. இவ்விதம் நீ என்னையே அடைவாய். இது சத்தியம் என பிரதிக்ஞை செய்கிறேன். ஏனெனில் நீ என் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.

பகவான் கீதையில் இவ்விதம் இருமுறை சொல்லி சத்யப் பிரதிக்ஞை செய்கிறார் எனில், இது எவ்வளவு உயர்ந்த உபதேசம் ! எனவே பக்திக்கு மீறிய முக்தி சாதனம் இல்லை. இதுவே அருணகிரிநாதர்  நமக்குச் சொல்லும் உபதேசம். 

வயலூர் பாடல் ஒன்றில் ( தலம் 92, குருதி கிருமிகள் ) "சுருதி வழிமொழி சிவகலை அலதினி அலம் அலம் "  =வேத மரபில் வந்த சிவஞானத்தைத் தவிர பிற கலைகள் போதும்,போதும் என்றார் இங்கு அந்த சிவ கலையிலும் மந்திரப் பிரஸ்தாரம் போன்ற வம்பில் சுற்றாத பரகதி வேணும் என்கிறார். அதாவது, முக்திக்கு நேர் சாதனமான  எளிய பக்தி தவிர பிற விஷய ஆராய்ச்சிகள் அவசியமில்லை என்கிறார். இதுவே அருணகிரிநாதரின் தலையாய  கோட்பாடு.









No comments:

Post a Comment