Thursday, December 6, 2018

13.திருப்புகழ் 111.அவிநாசி 112. திருப்புக்கொளியூர்


13.திருப்புகழ் 111.அவிநாசி
112. திருப்புக்கொளியூர்

அவிநாசி

ருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 111வது தலம் அவிநாசி. இது  முன்பு திருப்புக்கொளியூர் அவிநாசி என்று வழங்கியது. சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி ஒரு முதலை தான் உண்ட பிள்ளையை திருப்பித் தரச்செய்த தலம். கலியின் பொய்ம்மையை விலக்கி, இறைவன் திருவருளின் மெய்ம்மையை நிலைநாட்டிய நிகழ்ச்சியாக இதைப் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

இத்தலத்தின் பெருமையை கொங்கு மண்டல சதகப் பாடல் ஒன்று போற்றுகிறது:

பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போங்கொளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை  யன்றுகொண்டு
வாவென்றழைத்த அவிநாசி சூழ்கொங்கு மண்டலமே.







இங்கு ஸ்வாமிபெயர் அவிநாசியப்பர், அவிநாசி ஈஶ்வரர், அவிநாசி நாதர், பெருங்கேடிலியப்பர். அம்பாள் கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.  புராண வரலாறு உள்ள தலம். சுந்தரர் பாடல் பெற்றது.





By Cnu at English Wikipedia, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=7176442







சுந்தரர் தேவாரம் (7ம் திருமுறை )


எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
    எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் 
    உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
    யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
    யேபர மேட்டியே


உரைப்பார் உரைஉகந் துள்கவல்
    லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
    அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
    யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
    தரச்சொல்லு காலனையே

நீரேற ஏறு நிமிர்புன்சடை
    நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
    யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ
    ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
    லார்க்கில்லை துன்பமே.


இங்கு அருணகிரிநாதர் பாடிய மூன்று  பாடல்கள் இருக்கின்றன.

இறவாமல் பிறவாமல்  எனையாள் சற்குருவாகிப்
பிறவாகித் திரமான  பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குஹனே சொற்குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.

எத்தனை எளிய, அரிய பாடல் !
இறவாமல் பிறவாமல் பெருவாழ்வு =  மோக்ஷ வீடு.
திரமான = ஸ்திரமான, நிலையான
எனையாள் சற்குருவாகி பிறவாகி  =  சற்குருவாகியும் வேறு துணையாகியும்
குஹன்  = பக்தர்களின் இதய குகையில் இருப்பவன்
அறநாலைப் புகல்வோன் = அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களை உபதேசிப்பவன்.

திருவடி மறவாமை

அந்தத்தொக் காதியு மாதியும்
  வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
  அண்டத்துப் பாலுற மாமணி             யொளிவீசி

அங்கத்தைப் பாவைசெய் தாமென
  சங்கத்துற் றார்தமி ழோதவு
  வந்துக்கிட் டார்கழு வேறிட             வொருகோடிச்

சந்தச்செக் காளநி சாசரர்
  வெந்துக்கத் தூளிப டாமெழ
  சண்டைக்கெய்த் தாரம ராபதி          குடியேறத்

தங்கச்செக் கோலசை சேவக
  கொங்கிற்றொக் காரவி நாசியில்
  தண்டைச்சிக் காரயில் வேல்விடு           பெருமாளே.


மண்டிச்செச் சேயென வானவர்
  கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை            மறவேனே


(பந்தப்பொற்பார )

ஶ்ருஷ்டித் தொழிலுடைய பிரம்மாவும், ஆதிமூலம் என்னும் திருமாலும் வணங்கித்  துகிக்கின்ற படி, அவரவர்களின் இடங்களில் சேர்ந்து வாழவும், 
அழகிய ரத்ன மாலையின் ஒளிவீச, எலும்பிலிருந்து பெண்ணைப் படைக்கிறோம் என்று சங்ககாலத்துப் புலவர்களின் தமிழ்போன்ற செந்தமிழ்ப்பாடலை நீ ஓதவும், உன்னுடைய பெருமை தெரிந்து மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய  சமணர்கள் கழுவிலேறவும்,
ஒருகோடிக்கணக்கான ரத்தம் ஒழுகுவதால் சிவந்த நிறத்தைக் கொண்டவர்களும், விஷகுணம் கொண்டவர்களுமாகிய அசுரர்கள் பாணங்களால் வெந்து சிதறவும், போர்க்களத்தில் திரைச்சீலை போல தூசி கிளம்பி எழவும், போரில் இளைத்தவர்களான தேவர்கள் அவர்கள் ஊராகிய அமராவதியில் குடியேறவும்,
தங்கமயமான செங்கோல் ஆட்சியை நடத்திய பராக்ரமசாலியே ! கொங்கு நாட்டின் அவிநாசித் தலத்தில் அமர்ந்த பெருமாளே ! தண்டையணிந்த பெருமாளே ! கூரிய வேலைச்செலுத்தும்  பெருமாளே !
தேவர்கள் உன்னை நெருங்கி ஜே ஜே என்று வாழ்த்தி வணங்குகின்ற உன் பாத தாமரையை மறவேன்!

இந்தப் பாடலில் திருஞான சம்பந்தரின் செயல்களை முருகன் செய்ததாகச் சொல்கிறார். இதனால் முருகனே சம்பந்தராக வந்தார் என்னும் கருத்தை  மீண்டும் வலியுறுத்துகிறார் அருணகிரிநாதர்.

யம பயம் அகல

கனத்த செந்தமி ழால்நினை யேதின
  நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
  கருத்தி ருந்துறை வாயென தாருயிர்           துணையாகக்

கடற்ச லந்தனி லேயொளி சூரனை
  யுடற்ப குந்திரு கூறென வேயது
  கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில்          விடும்வேலா

அனத்த னுங்கம லாலய மீதுறை
  திருக்க லந்திடு மாலடி நேடிய
  அரற்க ரும்பொருள் தானுரை கூறிய           குமரேசா


அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
  நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
  யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய              பெருமாளே.


மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
  கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
  மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை           தடுமாறி

வருத்த முந்தர தாய்மனை யாள்மக
  வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
  வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின          நகையாட

எனைக்க டந்திடு பாசமு மேகொடு
  சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
  லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய          முறவேதான்

இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
  பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
  இணைப்ப தந்தர வேமயில் மீதினில்                  வரவேணும்.


சிறந்த பொருளுள்ள செந்தமிழால் உன்னையே தினமும் நினைக்க உன்னுடைய அருளைத் தரவேணும். என்னுடைய அருமை உயிருக்குத் துணையாக நீ என் கருத்திலே நிலைத்திருக்க வேண்டும்.
கடல் நீரில் ஒளிந்திருந்த சூரனுடைய உடல் பிளந்து, அது இரண்டு கூறாக எழ, ஒப்பற்ற சேவலும் அழகிய மயிலுமாக ஆகும்படி செலுத்திய வேலாயுதத்தை உடையவனே !
அன்னவாகனமேறும் பிரம்மனும், செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மி சேர்ந்த திருமாலும் ஆகிய இருவரும் அடி முடி தேடிய சிவபெருமானுக்கு அரிய பொருளை விளக்கி உபதேசித்த  குமரேசனே !
அறத்தை உபதேசிப்பவரும், பெருமை பொருந்திய வர்களுமான அந்தணர்கள்  உன்னை தினமும் தொழுபவர்களாய்  அமர்ந்திருப்பதை விரும்பியுள்ள , அடியார்களுக்கு அருள்செய்யும் அவிநாசியில் வீற்றிருக்கும்பெருமாளே !

நெஞ்சில் இரைந்து கோழை அதிகரிக்கவும், கரிய தலைமயிர் வெளுத்துப் போகவும், தாமரை மலர்போன்ற கண் பஞ்சடையவும், நடை தடுமாற்றம் அடைந்தும்,
துன்பத்தைத்தர, தாய், மனையாள், குழந்தைகள் , வெறுப்புக்கொள்ளும் சுற்றத்தார் ஆகியோருடன் எல்லோரும் சேர்ந்து பழித்து, பரிகசித்துப் பேசிச் சிரிக்க,
என்னை  அடக்கி வெற்றிகொள்ளும் பாசக்கயிறுடன் வந்து, கோபத்துடன் சூலத்தை என்மேல் வீசியெறிய, வாயில்  நெருப்பைக் கக்க, நான் பயம் அடையும்படி,
என்னை இழுக்க வரும் எமதூதர்கள் என்னைப் பிடிப்பதற்கு முன்பாக, நீ உன் இரு தாமரைத் திருவடிகளையும் எனக்குத் தரும்பொருட்டு மயில்மேல் வந்தருளவேண்டும். 
பிறந்த உயிர்களுக்கு நேரும் பெரிய பயம் மரணம் பற்றியது. இதைப் பல பாடல்களில் சொல்லும் அருணகிரிநாதர் அதற்கு மாற்றையும் தவறாது சொல்கிறார். அது முருகன் திருவடிகளை நினைப்பதே. "கா கா நமனார் கலகம் செயு நாள் " என வேண்டுவார்.

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே.

(கந்தரலங்காரம் )



Pic from www.shivatemples.com



112. திருப்புக்கொளியூர்
அருணகிரிநாதர் தரிசித்துப் பாடிய 112 வது தலம் அவிநாசியுடன் சேர்த்தே பேசப்பட்ட திருப்புக்கொளியூராகும். இன்று வெட்டவெளியாக இருக்கிறது.  இங்கும் மூன்று பாடல்கள் இருக்கின்றன.

உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
  வுற்பல வீராசி              மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
  யுற்பல ராசீவ           வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
  பொற்ப்ரபை யாகார       அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
  புக்கொளி யூர்மேவு         பெருமாளே.

பக்குவ வாசார லட்சண சாகாதி
  பட்சண மாமோன         சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
  பற்றுநி ராதார                       நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக

  அப்படை யேஞான            வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு

  னற்புத சீர்பாத              மறவேனே


அடியார்களுக்கு மெய்த்துணையாகிய  வீரம் மிக்க பன்னிரு புயங்களை உடையவனே !
நீலோத்பல மலர்களின் நறுமணம் வீசுவதும். நிலவொளி வீசுவதும், முத்தைப்போல தெளிந்த நீருள்ள குளங்களில் குவளைகளும் தாமரைகளும் பூத்திருக்கும் வயலூரின் நாதனே !
பொய்யே இல்லாத மெய்யான வீரம் மிக்கவனே ! ஒளிவீசும்  அழகிய பொன்மேனி கொண்டவனே !
 அவிநாசித் தலத்தில் கலியின் பொய்ம்மை நீங்கும்படி இறைவனுடைய திருவருளின் மெய்ம்மையின் புகழ் ஓங்கி நிலைக்கும் படி திருப்புக்கொளியூரில் வீற்றிருக்கும் பெருமாளே !
சரியான ஆசார நிலையில் நின்று, பச்சிலை, மூலிகைகள்  போன்றவற்றையே உணவாகக் கொண்டு, சிறந்த மோன நிலையில் நிற்கும் சிவயோகிகள்,
தங்களது பக்தி வாயிலாக முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேலான மோக்ஷ வீட்டைப்  பற்றுவதும், எந்தவிதமான பற்றும் இல்லாத நிலையை நான் அடைவதற்காகவும்,
அந்த க்ஷணமே, மாயமாகவந்து என்னைப்பற்றியுள்ள துர்க்குணங்கள்  எல்லாம் என்னைவிட்டு நீங்க, அந்த ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாகி,
பாசம் எல்லாம் என்னை விட்டுப்போக உபதேச மொழியை வாய்விட்டுச் சொன்ன சற்குரு நாதனே ! உன் அற்புதமான அழகிய  திருவடிகளை நான் மறவேன் !

 மெய் புயம்= நமக்கு உண்மையான துணையாக இருப்பது. "முன்பு செய்த பழிக்குத்துணை அவன் பன்னிரு தோளும்" என அலங்காரத்தில் வருகிறது.
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் = இது சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்  முதலை விழுங்கிய பிள்ளையை வரவழைத்த அற்புத செயலைக் குறிக்கும். இந்த இறையருட் செயல் கலியின் பொய்ம்மையை விலக்கிவிட்டது. இறைவனின்  மெய்யருளே ஓங்கி நிற்கிறது !
ஆறாறு தத்துவம்  = தத்துவவாதிகள்  36 , 96 என தத்துவத்தின் எண்ணிக்கையைப் பலபடி சொல்வார்கள். இறைவன் இதற்கெல்லாம் அடங்கியவர் அல்ல! அவர் பக்தி வலையில் படுவோன்!  
"ஆறாறையும் நீத் ததன் மேல் நிலை " என்று அநுபூதியில் சொல்வார்.
"ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே" என்று இன்னொரு பாடலில் சொல்வார்.

சுந்தரர் வரலாறு சொல்லும் துதி

மதப்பட்டவி சாலக போலமு
  முகப்பிற்சன வாடையு மோடையு
  மருக்கற்புர லேபல லாடமு         மஞ்சையாரி

வயிற்றுக்கிடு சீகர பாணியு
  மிதற்செக்கர்வி லோசன வேகமு
 மணிச்சத்தக டோரபு ரோசமு        மொன்றுகோல

விதப்பட்டவெ ளானையி லேறியு
  நிறைக்கற்பக நீழலி லாறியும்
 விஷத்துர்க்கன சூளிகை மாளிகை        யிந்த்ரலோகம்

விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு
  பிரப்புத்வகு மாரசொ ரூபக
  வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி       ருந்தவாழ்வே


இதப்பட்டிட வேகம லாலய
  வொருத்திக்கிசை வானபொ னாயிர
  மியற்றப்பதி தோறுமு லாவிய           தொண்டர்தாள

இசைக்கொக்கவி ராசத பாவனை
  யுளப்பெற்றொடு பாடிட வேடையி
  லிளைப்புக்கிட வார்மறை யோனென        வந்துகா
னிற்

றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
  யவிழ்த்திட்டவி நாசியி லேவரு
  திசைக்குற்றச காயனு மாகிம              றைந்துபோமுன்

செறிப்பித்த கராவதின் வாய்மக
  வழைப்பித்தபு ராணக்ரு பாகர
  திருப்புக்கொளி யூருடை யார்புகழ்            தம்பிரானே


மத நீர் பெருகுவதும் விசாலமான தாடையும், முன்புறத்தில்  நுண்மையான முகபடாமும் நெற்றிப் பட்டமும், பச்சைக்கற்பூரத்தின் வாசனையுடன் கூடிய  பூச்சுக்கலவை கொண்ட நெற்றியும் கொண்ட யானையின் முதுகில் அம்பாரி பொருந்த, வயிற்றில் இடுகின்ற வெகு அழகான தும்பிக்கையும், நன்கு சிவந்த கண்களும், அதிவேகமாகச் செல்லும் நடையும், மணிகளின் சப்தம் பலமாகக் கேட்கும்படி கழுத்தில் கட்டப்பட்ட கயிறும் கொண்டு,
அழகு மிகுந்த வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மீது ஏறி பவனி வந்தும், செழிப்புற்ற  கற்பகத்தருவின்  நிழலில் அமைதியாகக் களைப்பாறியும்,
மலைக்கோட்டை போன்றனவும் நிலாமுற்றங்களும் உள்ளனவான  அரண்மனைகள் உள்ள  இந்த்ர லோகத்தில் புகழ்கொண்ட தேவர்கள்  சூழ்ந்து பணியும் ப்ரபுத்தன்மை கொண்டு ஆட்சி செய்யும் இளமையான உருவம் உள்ளவரே,
என்முன்னே  பிரத்யக்ஷமாகவந்து  ஆண்டருளிய வயலூரில் வீற்றிருக்கும் செல்வனே,
இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த காதலி பரவை நாச்சியாருக்கு வேண்டி ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலம்தோறும் சென்று தரிசித்த அடியாராகிய சுந்தரர்,
பொருந்திய தாளத்துடன்,  தெளிந்த முயற்சியுடனும் ஊக்கத்துடனும் அவர் பதிகம் பாடி வருகையில் கோடை வெப்பத்தால் அவருக்கு உண்டான களைப்பு நீங்க,  நேர்மையான  மறையவர் கோலத்தில்   காட்டில் சுந்தரருக்கு எதிரே தோன்றி,
தாம் கொண்டுவந்திருந்த  சோற்றுக்கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசிக்கு வரும்போது சுந்தரர் திசைதவறிப்போனபோது அவருக்கு திசையைக்காட்டி உதவி,மறைந்து போனவரும்,
முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து சுந்தரர் பாட்டுக்கு இரங்கி  பிள்ளையை வரச்செய்த பழையவராகிய கருணாமூர்த்தியும், திருப்புக்கொளியூர்
உடைய  சிவபெருமான்  புகழும் தம்பிரானே !

இந்தப் பாடலில் பல விஷயங்கள்  சொல்கிறார்.
வயலூரில் பெற்ற அருளைச் சொல்கிறார்.
சுந்தரர்  பரவை நாச்சியாருக்காக பொன் வேண்டியதைச் சொல்கிறார். இது தான் சுகப்பட வேண்டிக் கேட்ட பொருளல்ல. திருவிழாக் காண வருபவர்களுக்கு  பொன், துணி மணி உணவு ஆகியவை அளிப்பது பரவையார் வழக்கம். அதற்காகவே பொருள் வேண்டினார். இன்றும் கூட சிதம்பரம் போன்ற  க்ஷேத்ரங்களில் இருப்பவர்கள் தேர் திருவிழாக் காலங்களில் யாத்ரீகர்களுக்கு உணவு  அளிப்பதைக் காணலாம்.
சுந்தரருக்கு சிவபிரான் பொதி சோறு அளித்ததையும் அவருக்கு வழிகாட்டி உதவியதையும் சொல்கிறார்.
சுந்தரர் பாடலுக்கு இரங்கி முதலை விழுங்கிய பிள்ளையை திரும்பிவருமாறு
 செய்ததைச் சொல்கிறார்.




அவி நாசி-திருப்புக்கொளியூர் முருகன்
https://arunagiritemples.wordpress.com/




ஞானம் உற

மூன்றாவது பாடலில் ஞானத்தை வேண்டுகிறார்.

புனத்திற்றினை காவ லான காரிகை
  தனப்பொற்குவ டேயு மோக சாதக
 குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர்        நன்குமாரா

பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்
  சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்
 புயத்துற்றணி பாவ சூர னாருயிர்          கொண்டவேலா

சினத்துக்கடி வீசி மோது மாகட
  லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி
  தெறிக்கக்கணை யேவு வீர மாமனும்        உந்திமீதே

செனித்துச்சதுர் வேத மோது நாமனு
  மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி
  திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள்         தம்பிரானே.


நாம மான ஞானம                  தென்றுசேர்வேன்


தினைப்புனத்தில் காவல் இருந்த வள்ளியின் மீது ஆசைகொண்ட ஜாதகத்தை உடையவனே, பிறைச் சந்திரனைச் சூடியுள்ள சடையைக்கொண்ட சிவபிரானின் நல்ல  புதல்வனே !
பொறுமைக்குப் பூமியைப்போலிருந்து தர்ம நெறியில் நின்ற  பெரிய தவசிகள் சிறந்து வாழ, நெருங்கிய பசுமையான சோலைகளில் உள்ள மலர்களின் மாலைகளை  புயத்தில் அணிந்தவனும், பாவியாகிய சூரனது உயிரைக்கவர்ந்தவனுமான வேலனே !
அலைகள் வீசுகின்ற பெரிய கடலை அடைத்து, மாமிசம் உண்ணும் அரக்கர் முதல்வனான ராவணனுடைய  சிறந்த முடிகள் அற்று விழும்படி பாணம் விட்ட வீர மாமனாகிய  திருமாலும்,
அத்திருமாலின் உந்தியில் தோன்றி   நான்மறைகள் ஓதும் பெருமை வாய்ந்த பிரம்மனும் நன்மதிப்பு வைத்துப் புகழ்கின்ற வலிமைமிக்கவனே!
திருவிழாக்கள் நிறைந்து விளங்கும் திருப்புக்கொளியூரில்  வீற்றிருக்கும் தேவர்கள் தம்பிரானே !
பெருமை பொருந்தியதான ஞான நிலையை என்று நான் அடைவேன் !

.


No comments:

Post a Comment