12.திருப்புகழ் 108A.சென்னிமலை
அருணகிரிநாதர் புகழிமலையை விட்டு சென்னிமலைக்கு வந்ததாகத் தெரிகிறது. ஆனால் சென்னிமலைக்குரிய தனிப்பாடல் எதுவும் கிடைக்கவில்லை. திரிசிராப்பள்ளிக்குரிய ஒரு பாடலில் "சிரகிரி" எனறு வருகிறது. சிரகிரி என்பது சென்னிமலையின் பெயராக இலக்கியத்தில் வருகிறது. ஆகவே இப்பாடலை சென்னிமலைக்குரியதாகக் கொள்ளலாம்.
சென்னிமலைக்கு அருணகிரியார் வாழ்வில் ஒரு சிறப்புண்டு. சம்பந்தருக்கும் அப்பருக்கும் சிவபெருமான் திருவீழிமிழலையில் படிக்காசு அளித்தார். அதுபோல சென்னிமலையில் முருகன் அருணகிரிநாதருக்கு படிக்காசு அளித்தார் என்ற செய்தி சென்னிமலை ஆண்டவன் காதல் என்ற நூலில் வருகிறது.
நாட்டில் அருணகிரி நாதன் சொல் திருப்புகழ்
பாட்டில் மகிழ்ந்து படிக்காசளித்த பிரான்
தாலமிகுஞ் சென்னிமலை தன்னில் வளர் கல்யாண
வாலசுப்ப ராயனென்று வாணர்புகழ் வாசலினான்......
அதனால் சிரிகிரி என்னும் பாடலை சென்னிமலைக்குரியதாகக் கொள்ளலாம். இங்கு பழநி மலை போன்று முருகன் தண்டாயுதபாணியாக இருக்கிறார். பக்தர்களிடையே பிரசித்தமான ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் இங்குதான் அரங்கேறியது.
By பா.ஜம்புலிங்கம் - சொந்த முயற்சி, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=66553082
அநுபூதி நிலைபெற
பகலிறவினில் தடுமாறா
பதிகுருவெனத் தெளிபோத
ரகசியமுறைத் தநுபூதி
ரத நிலைதனைத் தருவாயே
இகபரமதற் கிறையோனே
இயலிசையின் முத்தமிழோனே
சகசிரகிரிப் பதிவேளே
சரவணபவப் பெருமாளே.
எளிய பாடல் தான். ஆனால் இங்கே "பகலிரவு" என்பது நினைவும் மறப்பும் என்பதைக் குறிக்கும். இந்த இரண்டும் அற்ற நிலையே யோக அநுபூதி நிலை. "இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே " என கந்தரலங்காரத்தில் வருகிறது. பிற திருப்புகழ் பாடல்களிலும் வருகிறது.
இரவுபகல் அற்ற இடத்தே ஏகாந்த யோகம்
வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே.
கங்குல்பகல் அற்ற திருக் காட்சியர்கள் கண்டவழி
எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே.
என்று தாயுமானவர் பாடுகிறார்.
இந்த அநுபூதி நிலையையே இங்கே வேண்டுகிறார்.
109.விஜயமங்கலம்
இது அருணகிரிநாதர் தரிசித்துப் பாடிய 109வது தலம்.ஈரோட்டிற்கும் திருப்பூருக்கும் இடையே உள்ளது. இது பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் இருந்தபோது அர்ஜுனன் (விஜயன்) தங்கி தரிசித்த நாகேஶ்வரர் , கோவர்த்தனாம்பிகை கோவில் உள்ள இடம், அதனால் விஜயபுரம், விஜயமங்கலம் எனப்பெயர் பெற்றது.
https://kavithaimathesu.blogspot.com
இங்கு பாடிய ஒரு திருப்புகழ் இருக்கிறது.
உலக கண்டமிட் டாகாச மேல்விரி
சலதி கண்டிடச் சேராய மாமவ
ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் மகவாயும்
உணர்சி றந்தசக் ராதார நாரணன்
மருக மந்திரக் காபாலி யாகிய
உரக கங்கணப் பூதேசர் பாலக வயலூரா
விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய இளையோனே
விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய
விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் பெருமாளே.
சலதி கண்டிடச் சேராய மாமவ
ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் மகவாயும்
உணர்சி றந்தசக் ராதார நாரணன்
மருக மந்திரக் காபாலி யாகிய
உரக கங்கணப் பூதேசர் பாலக வயலூரா
விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய இளையோனே
விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய
விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் பெருமாளே.
நின்கழற் சீர்பாத நானினி மறவேனே
(கலக சமப்ரம )
உலக்கையைத் துண்டு துண்டாக்கி, ராவிப் பொடி செய்து, ஆகாயம் மேலே விரிந்துள்ள கடலில் அப்பொடியைத் தூவி(யும்) ஆயர் கூட்டம் அனைவரும் ஒருசேர மடிய, கோபாலர் இடைச்சேரியில் குழந்தையாக வளர்ந்தும்,
ஞானம் மிக்க சக்ராயுதத்தை ஏந்தியவரும், காப்பவருமான நாராயண மூர்த்தியின் மருகனே! பஞ்சாக்ஷரத்தின் மூலப்பொருளானவரும், பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தினவரும், பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவரும், பூத கணங்களுக்குத் தலைவனான ஈசனுடைய பிள்ளையே ! வயலூரானே !
வீரக் கழலணிந்த பெருமைகிக்க உன் பாதத்தை நான் இனி மறக்கமாட்டேன்.!
கொலைசெய்யும் வில்லைக்கொண்டு போர்செய்யும் வேடர்கள், பேரொலிசெய்து கூவி நெருங்க , அதைக்கண்டு வருந்திய வள்ளியிடம் " நீ கவலையைவிடு " என்றுசொல்லி கையிலிருந்த கூரிய வேலைச் செலுத்திய இளையோனே !
வீரமிக்க வண்டுகள் முயற்சியுடன் நல்ல தேசி ராகத்தைப் பாடிடும் நறுமணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே ! தேவாதி தேவர்களின் பெருமாளே ! உன் பாதத்தை நான் இனி மறக்கமாட்டேன்.
இதில் சாபத்தினால் இடையர் கூட்டம் அழிந்த பாகவதச் செய்தியை விளக்குகிறார்.
காட்டில் வேடர்மீது முருகன் வேல்விட்ட நிகழ்ச்சியையும் சொல்கிறார்.
வண்டுகள் தேசி ராகம் பாடுகின்றன என்பதைச் சொல்கிறார் !
110.திருமுருகன்பூண்டி
இது அவிநாசிக்கு அருகில் உள்ள தலம். சிவபிரான் தன் பூதகணங்களை ஏவி சுந்தரரின் செல்வத்தைப் பறித்துக்கொண்டு பின் அருளிய இடம். ஸ்வாமியின் திருநாமம் முருகநாதேஶ்வரர், முருகநாத ஸ்வாமி. அம்பாள் ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை, முயங்கு பூண்முலையம்மை, மங்களாம்பிகை, ஆவுடைநாயகி. சுந்தரரின் பாடல் பெற்ற ஸ்தலம். புராண வரலாறு உள்ளது.
http://kavitamilan.blogspot.com
சுந்தரர் பாடல் (7ம் திருமுறை)
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
ரொன்றுந் தாமிலரே.
இங்கு அருணகிரிநாதரின் அருமையான பாடலொன்று இருக்கிறது.
ஆண்டுக் கொரு நாளில் !
அவசிய முன்வேண்டிப் பலகாலும்
அறிவில் உணர்ந்து ஆண்டுக்கொரு நாளில்
தவ ஜெபமும் தீண்டிக் கனிவாகிச்
சரணமதும் பூண்டற்கு அருள்வாயே
சவதமொடும் தாண்டித் தகரூர்வாய்
சடுசமயம் காண்டற்கு அரியானே
சிவகுமரன் பீண்டிற் பெரியானே
திருமுருகன்பூண்டிப் பெருமாளே
எளிய பாடல்.
சவதமொடும் தாண்டித் தகரூர்வாய் = நாரதர் செய்த யாகத்தில் வந்த ஆட்டுக்கிடாவை அடக்கி அதை முருகன் வாகனமாகக் கொண்டது.
சடு சமயம் = ஷட் சமயம் == ஆறு சமயங்கள். சமய வாதங்களினால் முருகனை அறிய முடியாது.
இதில் வருஷத்திற்கு ஒரு நாளாவது ஜப, தவ நியமத்துடன் முருகனை அன்புடன் வழிபட்டு (தரிசித்து) மனதில் நினைக்கவேண்டியது அவசியம் என்று அறிவுறுத்துகிறார்.
இன்று ஆண்டுதோறும் டிசம்பர் 31, ஜனவரி முதல் தேதியில் முருகபக்தர்கள் திருத்தணியில் ஒன்றுகூடி திருப்புகழ்பாடலுடன் படியேறி ஸ்வாமி தரிசனம் செய்கிறார்கள்.! 1918 முதல் வள்ளிமலை திருப்புகழ் ஸச்சிதானந்த ஸ்வாமிகள் தொடங்கி வைக்க, இது திருத்தணித் திருப்படித் திருவிழாவாகவே நடந்து வருகிறது ! "திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே" (வினைக்கின மாகும் )என்று 600 வருஷங்களுக்கு முன்பு பாடியது இன்று நிறைவேறிவிட்டது!
No comments:
Post a Comment