Saturday, December 8, 2018

14.திருப்புகழ் .113.குருடிமலை 114.ஞானமலை115.பேரூர்

14.திருப்புகழ். 113.குருடிமலை 114.ஞானமலை 115. பேரூர்

அருணகிரிநாதர் அடுத்து தரிசித்துப்பாடிய 113வது தலம் குருடிமலை. இது கோயமுத்தூர் அருகே உள்ள துடியலூருக்கு சமீபத்தில் உள்ள  இடம். இங்கு பாடிய ஒரு பாடல் இருக்கிறது. முற்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் பொதுவாக வறுமையில் வாடினர். செல்வந்தர்களைப்  புகழ்ந்துபாடி பரிசில்பெற முனைந்தனர். இது தகாது என்று அருணகிரியார் பாடுகிறார்.

உலகோரைப் பாடுதல் தகாது

கருடன் மிசைவரு கரிய புயலென
  கமல மணியென        வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
  கருதி முதுமொழி       களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
  செவியில் நுழைவன      கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
  சிறிது முணர்வகை         யறியேனே

வருடை யினமது முருடு படுமகில்
  மரமு மருதமு                 மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
  வழிய வகைவகை       குதிபாயுங்

குருடி மலையுறை முருக குலவட
  குவடு தவிடெழ        மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர
  குறைவி லிமையவர்        பெருமாளே.


கருடன் மேல்வரும்  கரியமேகம் போன்ற திருமால் நீ என்றும், பத்ம நிதி, சிந்தாமணி நீ என்றும் 
இரைந்துபாடி, பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மிகவும் யோசித்து  பழைய  செஞ்சொற்களைத் தேடி,
அவற்றைத் திருடியும் ஓரளவு திரித்தும் தம் பாடலில் அமைத்து, அறிவில்லாதவர்களுடைய செவியில் புகும்படிப் பாடல்களைப் பாடித்,
திரிகின்ற சில புலவர்கள் கூறும் வழியை நான் அறிந்திலேன்.
மலையாடுகளின் கூட்டமும், கரடுமுரடான அகிலும் மருத மரமும் அடிபெயர்ந்து சாயும்படி,
'மதுரம்' என்னும் ஆறு பெருகி இருகரைகளும் வழிய பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற  குருடி மலையி,ல் அமர்ந்த முருகனே ! சிறந்த மலையான க்ரௌஞ்சம் தவிடுபொடியாகித்   தூளெழ  மயிலில் ஏறும் குமரனே ! குருபரனே ! அஞ்ஞான இருளை விலக்கும் ஞான சூர்யனே! குறைவிலாத தேவர் பெருமாளே !
உலகத்தவரைப் பாடிப்பிழைப்பதை நான் அறியவில்லை.
இந்த நதியை மருத நதி என்றும் சொல்கிறார்கள்.
இதே கருத்தில் வேறு சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.

114. ஞானமலை
அடுத்த தலம் ஞானமலை. இது எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லை.
தணிகைமணி யவர்கள் இதைக்குறிப்பிடவில்லை. இது  ஷோளிங்கருக்கு அருகில் இருக்கிறது என்று இப்போது சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது சரியெனத்  தோன்றவில்லை.ஏனெனில் அருணகிரிநாதர் இப்போது  பார்த்துவரும் தலங்கள் கொங்கு நாட்டில் இருக்கின்றன.



இங்கு பாடிய இரண்டு பாடல்கள் இருக்கின்றன.

பொது மகளிர் உறவு கூடாது

வேத முனிவோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூசல்         எனஏகி
வீறசுரர் பாறி  வீழ அலையேழு
வேலை அளறாக விடும்      வேலா
நாதரிடமேவு  மாது சிவகாமி
நாரி அபிராமி      அருள்பாலா
நாரணசுவாமி ஈனுமகளோடு
ஞானமலைமேவு    பெருமாளே !
ஆக தாடியிடுவோர்கள் உறவாமோ 

எளிய பாடல். இதில் முதல் இரண்டு அடிகளில் பண்டைக்காலப் போரில் பின்பற்றப்பட்ட வழக்கம் ஒன்றைச் சொல்கிறார். போர் தொடங்கும் போது,  அந்த ஊரில் இருந்த அந்தணர், பெண்கள், நோயாளிகள், பசுக்கள்  ஆகியவை  துன்பம் அடையாதவாறு அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குப் போகச்சொல்லி பறை அறிவிப்பார்கள். இச் செய்தியை புற நானூறு  9ம்பாடலும் தெரிவிக்கிறது. 

ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்.

அசுரர்களுடன் நடந்த போரில் முருகனும் இப்படிச் செய்தான் எனச் சொல்கிறார்.

அடுத்த பாடல் திருவடி தீக்ஷை பற்றியது.

மனையவள் நகைக்க வூரி ல் அனைவரு நகைக்க லோக
  மகளிரு நகைக்க தாதை        தமரோடும்
மனமது சலிப்ப நாய ன் உளமது சலிப்ப யாரும்
  வசைமொழி பிதற்றி நாளும்         அடியேனை
அனைவரும் இழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடின்
  அகமதை யெடுத்த சேமம் இதுவோவென்று
அடியனு நினைத்து நாளும்  உடலுயிர் விடுத்த போதும்
  அணுகிமுன் அளித்த பாதம்     அருள்வாயே


தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
  தமருகம் மறைக்கு ழாமும்   அலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்கள் இறக்கு மாறு
  சமரிடை விடுத்த சோதி           முருகோனே
எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத
  எழுதரிய பச்சை மேனி         யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
  இலகிய சசிப்பெண் மேவு         பெருமாளே.


இதுவும் எளிய பாடல். இது அருணகிரிநாதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் காட்டுகிறது எனச் சொல்கின்றனர்.  மக்களின் வசைமொழியும் உறவினரின் பரிகாசமும் தாங்காமல் உயிர்விடத் துணிந்தபோது முருகன்  பாத தரிசனம் தந்து ஆட்கொண்டதை  (முன்  அளித்த பாதம் ) விவரிக்கிறார். மீண்டும் அதை வேண்டுகிறார்.

115.பேரூர்.

இவ்வாறு அருணகிரியார்  கொங்கு நாட்டில் காடு, மலைகளைத்தாண்டி பேரூரை அடைந்தார். இது இவர் தரிசித்துப் பாடிய 115வது தலம். இது கோயமுத்தூருக்கு அருகில் உள்ளது. புராணச் சிறப்பும் சரித்திரச் சிறப்பும் உள்ள தலம். இதன் புராணப்பெயர் பிப்பலாரண்யம். காமதேனுபுரி, ஆதிபுரி, பட்டிபுரம், தக்ஷிண கைலாசம், தவச்சித்திபுரம்  என்றெல்லாம்  பெயர்கள் இருக்கின்றன. ஸ்தல புராணப்படி இங்கு திருமாலுக்கும் ப்ரம்மாவுக்கும் சிவபெருமான நடன தரிசனம் அளித்தார். அதனால் இது மேலைச் சிதம்பரம் எனப்படுகிறது.



By Balajijagadesh - சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=16989670

இங்குள்ள பட்டீஶ்வரர் கோவில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது.
ஸ்வாமிபெயர் பட்டீஶ்வரர், அம்பாள் பச்சை நாயகி.
 இங்கு இரு பாடல்கள் இருக்கின்றன.








தீராப் பிணிதீர ஜீவாத்தும     ஞான
ஊராட்சியதான   ஓர்வாக்    கருள்வாயே
பாரோர்க்கிறைசேயே பாலாக்கிரி ராசே
பேராற் பெரியோனே  பேரூர்ப்பெருமாளே 

முடிவில்லாது தொடர்ந்துவரும் பிறவிப்பிணி  ஆத்மஞானத்தால்தான் அழியும். இதை முருகனிடம் ஒப்பற்ற உபதேசமாக அருணகிரிநாதர்
வேண்டுகிறார்.

பேரூர் கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள்  நிறைந்த ஒரு கல் தூண். பழைய படம்.


Edmund David Lyon [Public domain], via Wikimedia Commons




ஞானோபதேசம் பெற




Edmund David Lyon [Public domain], via Wikimedia Commons

மைச்ச ரோருக நச்சு வாள்விழி
   மானா ரோடே நானார் நீயா         ரெனுமாறு

வைத்த போதக சித்த யோகியர்
   வாணாள் கோணாள் வீணாள் காணா  ரதுபோலே



நிச்ச மாகவு மிச்சை யானவை
   நேரே தீரா யூரே பேரே         பிறவேயென்


நிட்க ராதிகண் முற்பு காதினி
   நீயே தாயாய் நாயேன் மாயா        தருள்வாயே








மிச்ச ரோருக வச்ர பாணியன்
   வேதா வாழ்வே நாதா தீதா          வயலூரா

வெற்பை யூடுரு வப்ப டாவரு
   வேலா சீலா பாலா காலா             யுதமாளி

பச்சை மாமயில் மெச்ச வேறிய
   பாகா சூரா வாகா போகா        தெனும்வீரா

பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
  பாரூ ராசூழ் பேரூ ராள்வார்        பெருமாளே.


மை பூசி யுள்ளதும் தாமரை, விஷம், வாள்  போன்றதுமான கண்களையுடைய பெண்களுடன்,
 நான் யார், நீ யார் எனச் சிறிதும் மயங்காதவராகிய மன நிலையில் உள்ள   ஞானத்துடன் கூடிய சித்தர்களும் யோகிகளும்,
தமது வாழ்நாளாலும் கிரஹங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போவதைக் காணமாட்டார்.
அது போல (மண், பெண், பொன் ஆகிய ) மூவாசைகளும் உறுதியாக முடிவுபெறுவதில்லை.
அதனால் எனக்குச் சொந்த ஊர் போல , பேர் போலஇனியவனே,, எனக்கு  இனிய இன்னும்  பிற பொருட்கள் ஆனவனே !
என்னை நிச்சயமாகப் பற்றும் மூன்றாகிய எவையும்  [மூவாசைகள், முக்குணங்கள். மும்மலங்கள்,  (பொய் களவு கொலை  என்னும்) முக்குற்றங்கள், (ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதி  தெய்விகம் என்னும் ) முத்தாபங்கள்  போன்றவை] என்னைத் தாக்காமல், நீயே இனி தாய் போலிருந்து நான்  (வீணில்) இறந்து போகாமல்  அருள்புரிவாயாக.
தாமரை போன்ற கண்கள் உடல்முழுதும் கொண்டவனும் வஜ்ராயுதன் தாங்கியவனுமான  இந்த்ரனும் ப்ரம்மாவும் போற்றும் செல்வமே ! நாத ஒலிக்கு அப்பாற்பட்டவனே ! வயலூரானே !
க்ரௌஞ்ச மலையைத் துளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவனே ! நற்குணங்கள் நிறைந்தவனே!, பாலனே ! காலை ஆயுதமாகக் கொண்ட சேவலை கொடியாக உடையவனே !
அழகிய பச்சை மயில்மீது தேவரும் மெச்சும்படி ஏறிய பாகனே !
அடேய்  சூரனே ! ஆஹா, விலகிப் போகாதே என்று கூறி ( போருக்கு அழைத்த ) வீரனே ! 
பட்டி என்ற முனிவராக வந்த ப்ரம்மனுக்கு கொடுகொட்டி என்னும் நடனத்தை ஆடி அருள்செய்தவரும், பூமியில் சிறந்த தலமும் காமதேனுவாக  வந்த திருமால் வலம் செய்த தலமும் ஆகிய பேரூரை  ஆண்டு அருள்பவராகிய சிவபெருமானுக்குக் குருவாக வந்த  பெருமாளே ! 
நான் வீணே இறந்து போகாமல்  அருள்வாயாக.

மிக  அருமையான பாடல்.. 
பிறந்தவர்கள் எல்லாம் இறப்பது நியதி. வீணில் இறப்பது என்பது என்ன? தெய்வத்தை உணராமல் மரிப்பது வீணில் இறப்பதாகும். கடவுளை உணர்வதுதான் வாழ்வின் பயன். இதை அடையாமல்  மரிப்பது  விணில் மரிப்பதாகும். இவ்வாறு தனக்கு நேராமல் இருக்க முருகன் அருளை வேண்டுகிறார். ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய பாடல்.
இந்தப் பாடலில்  திருமாலுக்கும் ப்ரம்மாவுக்கும் நடன தரிசனம் அருளிய  ஸ்தலபுராணச் செய்தியைச் சொல்கிறார்.




No comments:

Post a Comment