16.திருப்புகழ் 119. சிங்கை (காங்கேயம்)
Anamalai, Coimbatore
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற ...... கழலோனே
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த ...... திருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.
யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி ...... வரவேணும்
(சஞ்சரி யுகந்து)
தாமரை,கொன்றை, தும்பை, மகிழம் ஆகிய மலர்கள் நிறைந்து மணம் கமழும் கழல்களை உடையவனே !
அழுகிய பிணங்களைத் தின்னும் பேய், நாய், நரி, காக்கை, பருந்து முதலியவற்றின் கூட்டம் காணும்படி போர்க்களத்தில் வீசும் ஒளியுடைய வேலை உடையவனே !
இனிய சொல்லுடைய எங்கள் குறமகள் வள்ளியை அணைந்த மார்பனே !
செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் மிகுந்த சிறப்புமிக்க சிங்கை நகரில் அமர்ந்து அருளும் பெருமாளே !
என்னுடைய தீய வினைகள் இன்றே அழியுமாறு நன்மை தரும் மயில் மீதில் வரவேணும்.
தொங்குசடை மீது திங்களணி நாதர்
மங்கைரண காளி தலைசாயத்
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
என்றுநட மாடு மவர்பாலா
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
மங்களம தாக அணைவோனே
கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
அந்தமுனை வேல்கொ டெறிவோனே
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
சிங்கைநகர் மேவு பெருமாளே.
சந்திதொறு நாண மின்றியகம் வாடி
உந்திபொரு ளாக அலைவேனோ
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
தங்கள்வச மாகி அலையாமற்
சுந்தரம தாக எந்தன்வினை யேக
சிந்தைகளி கூர அருள்வாயே
தொங்கும் சடையின்மேல் சந்திரனைச் சூடிய பெருமான், மங்கையும் போருக்கு எழுந்தவளுமாகிய காளி நாணமடைந்து தலைகுனியுமாறு நடனம் ஆடிய சிவபெருமானின் குமாரனே !
பெருமை பொருந்திய வேடர்களின் குலத்தில் வந்த வள்ளியை அணைந்தவனே!
கந்தனே ! முருகேசனே ! போரிட நெருங்கி வந்த அசுரர்கள் மடிய கூரியவேலை எறிந்தவனே !
காஞ்சி ஏகாம்பரநாதர், கைலாசபதி, ஆகிய சிவனது மைந்தனே ! கூரிய வேலாயுதத்தை உடையவனே ! சிங்கைப் பதியில் அமர்ந்த பெருமாளே !
காலையும் மாலையு,ம் வெட்கமில்லாமல் உள்ளம் சோர்வடைய, வயிறே காரியமாக அலைச்சல் படுவேனோ !
தினமும் மாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், அழகுபெற என்னுடைய வினைகள் தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி பெற அருள்புரிவாயாக.
இருவினையும் அகலவேண்டும்
முதல் பாடலில் கெட்ட வினைகள் ( நன்று இல் வினை ) அழியவேண்டும் என்றார். இரண்டாவது பாடலில் பொதுவாக "எந்தன் வினையேக " என்கிறார். நல்வினை, தீவினை ஆகிய இரண்டுமே பிறவிக்குக் காரணமாகின்றன. ஆகவே இருவகை வினைகளும் அழியவேண்டும். இதற்கு முருகன் அருள் வேண்டும். "வினை யோட விடுங்கதிர் வேல் " என்பார். "வினைப்பகை யறுத்து நினைத்தது முடித்து மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக் கடலே " என்று வேண்டுவார். இந்த வினை நீக்க வேண்டுகோள் ஜீவர்களுக்கு முக்கியமானது. திருஞான சம்பந்தரும் பல பாடல்களில் வினை நீக்கம் பற்றியே பாடியிருக்கிறார்.
120. ஊதிமலை
அருணகிரிநாதர் தரிசித்த 120 வது தலம் ஊதிமலை. இது தாராபுரம்-காங்கேயம் வழியில் இருக்கிறது. இதற்கான இரு பாடல்கள் இருக்கின்றன.
வணங்க அருள் வேண்டல்
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த பெருமாளே.
எளிய பாடல். கடவுளை வணங்கவும் அவன் அருள் வேண்டும். "அவனருளாலே அவன் தாள் வணங்கி " என்பார் மாணிக்கவாசகர். " ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த " என்று முதல் பதிகத்தின் முதல் பாடலிலேயே பாடுகிறார் சம்பந்தர். அதனால் இங்கே முருகனை வணங்க அவன் அருளையே வேண்டுகிறார்.
பக்தி என்று சொன்னாலும் நமது வழிபாடு, சாதனை முறைகள் மரபு வழியில் பெரியோர் உபதேசித்த படி இருக்கவேண்டும். நமது வழி வேத மரபில் வந்தது. அதனால் "ஓதுமறை ஆகமம் சொல் யோகமதுவே புரிந்து " என்று சொல்கிறார்.
இப்படிப் பல பாடல்களில் அருளை வேண்டுகிறார்.
இன்சொல் விசாகா க்ருபாகரா !
நாளும் உன் புகழே பாடி
நான் இனி அன்புடன் ஆசார பூஜை செய்து
உய்ந்திட வீணாள் படாது அருள் புரிவாயே !
ஆவினன்குடி மீதிலங்கிய பெருமாளே !
கங்கையின் நீர் சொரிந்து
இரு பாத பங்கயமே வணங்கி
பூஜையும் சிலவே புரிந்திட அருள்வாயே !
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே !
விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே !
வெகுமலரது கொடு வேண்டியாகிலும்
ஒருமலர் இலை கொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே.
(கூந்தலூர் பாடல் )
ஒரு மலர், இலை என்பது கீதையில் வரும்
"பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஶ்னாமி "
என்ற சுலோகத்தை நினைவூட்டுகிறது. [ பக்தியுடன் அர்ப்பணிக்கப்படும் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை நான் அருந்துகிறேன் ]
"புண்ணீயம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும் " என்பார் திருமூலர்.
இவ்வாறு நாம் செய்யும் வழிபாடு மரபுவழியில் வந்ததாக இருக்கவேண்டும்.
இப்படி மறை ஆகம வழியில் பக்தியோகம் செய்பவர்களின் வினை தீரும்
என்கிறார் !
அடுத்த பாடலிலும் அருளையே வேண்டுகிறார்.
நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
போதக மற்றெச் சகத்தை யுந்தரு
நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் மருகோனே
நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் வடிவேலா
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்தவெ னிசையோடே
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் புரிவோனே
ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
காரண பத்தர்க் கிரக்க முந்தகு
ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட ரொளியோனே
ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
காபர ணத்திற் பொருட் பயன்றரு
ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் பெருமாளே.
கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் புரிவாயே
(கோதி முடித்து )
நாத நிலையில் (சிவ தத்துவத்தில் ) மனது நிலைக்கும்படி மகிழ்ந்து அருள்புரியும் ஞான குருவே! எல்லா உலகங்களையும் படைக்கும் பிரம்மனுக்குத் தந்தை என்று சொல்லப்பட்ட திருமாலின் மருகனே !
உன்னை நாடும் அடியேனுக்கு வந்த துன்பம் தீரும்படி திருவடியைத் தந்த கூரிய வேலனே ! நாதராம் சிவபிரான் "தகப்பன் சாமியே " என்று அன்புடன் அழைத்த வடிவேலனே !
தோதிமி தித்தி...என பூத கணங்கள் நடனம் செய்து, நான் உயிரை விடும்போது என்மீது இரக்கம் கொண்டு,என்னை சுப மங்கள வாழ்த்து நிலையில் சேர்ப்பிக்கத் திருவுள்ளம் கூடி, வந்து எனக்கு அருள்புரிந்தவனே!
ஓதப்படும் மந்திரங்களுக்கு உட்பொருள் என்றும், சிவ பக்தரிகளிடம் இரக்கமுள்ளவனென்றும், உயர்ந்த ப்ரணவ எழுத்துக்கு உயிர் நாடி என்றும்
சொல்லநின்ற பேரொளியானவனே !
ஒதியமரம் பூத்துக் குகையில் உதிர்க்கின்ற பொன் ஆபரணம்போல அருமையான மோக்ஷ பலனைத்தரும் பெருமாளே ! ஊதிமலையில் மனம் உகந்து அமர்ந்தருளும் பெருமாளே !
திடம் இல்லாத மனதை ஒழித்து,, திடமுள்ள கூரிய மதியும் ஞானமும் கொண்ட குணத்தைப் பெற்று, உனது திருவிளையாடல்களைப் பேசும் இடத்தில் இன்பமுடன் நான் நிற்கும்படி அருள் புரிவாயாக.
இது அருமையான உருக்கமான பாடல். பல அரிய கருத்துக்களைச் சொல்கிறார். பக்தியோக வழியில் பொதுவாக ஒன்பது படிகளைச் சொல்வார்கள். அதில் முதலில் வருவது "ஶ்ரவணம் ". பகவானது பெயரையும் புகழையும் அருட்செயல்களையும் காதாரக் கேட்டு கருத்தில் வாங்கி இருத்துவது, இது பக்தர்களுக்கு மிக மகிழ்ச்சி தரும் செயல். இப்படிப் பட்ட இடத்தில் தான் நிற்கவேண்டும் என்கிறார் அருணகிரி நாதர்.
இனிமை தரும் உன தடியவர் உடனுற
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ தொருநாளே
என திருமயிலைப் பாடலிலும் வேண்டுவார்.
பக்தர்களின் செயல்
இந்த நிலையை பாகவதம் வெகுவாகப் புகழ்கிறது.
तव कथामृतं तप्तजीवनं
कविभिरीडितं कल्मषापहम् ।
श्रवणमङ्गलं श्रीमदाततं
भुवि गृणन्ति ते भूरिदा जनाः
தவ கதாம்ருதம் தப்த ஜீவனம்
கவி பிரீடிதம் கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்களம் ஸ்ரீமதாததம்
புவி க்ருணந்தி தே பூரிதாஜனா :
ஹே க்ருஷ்ணா ! தங்களுடைய கதையாகிற அமிர்தம் தாபத்தை அடைந்தவர்களுக்கு உயிர் அளிப்பது. (வ்யாஸர், ஶுகர் போன்ற ) ஞானிகளால் கொண்டாடப்பட்டது. காம கர்மங்களைப் போக்கக்கூடியது. கேட்ட மாத்திரத்தில் மங்களங்களைக் கொடுக்கக்கூடியது. ஸகல ஐஶ்வர்யத்தையும் அளிக்கக்கூடியது. இக்கதையாகிற அமிர்தத்தை யார் சொல்கிறார்களோ அல்லது அனுபவிக்கிறார்களோ அவர்களே மஹாபாக்யசாலிகள். (புண்யம் செய்தவர்கள்.)இதை கோபிகைகள் சொல்கிறார்கள்.
பகவான் விஷயம் சொல்பவர்கள், கேட்பவர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் மங்களம் தரக்கூடியது. அதனால் பக்தர்கள் கூடும் இடத்தில் பகவானைப்பற்றிய பேச்சுதான் இருக்கும். கீதையிலும் பகவான் இதைச் சொல்கிறார் :
सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते।।9.14।।
ஸததம் கீர்த்தயன் தோமாம் யதன்தஶ்ச த்ருடவ்ரதா :
நமஸ்யன் தஶ்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே . 9.14
உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள் இடைவிடாது என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்துகொண்டும், என்னை அடையும் முயற்சியில் ஈடுபட்டும், என்னைத் திரும்பத் திரும்ப வணங்கிக்கொண்டும், எப்பொழுதும் என்னுடைய தியானத்திலேயே நிலைத்திருந்தும் வேறு ஒன்றிலும் நாட்டமில்லத அன்புடன் என்னை வழிபடுகிறார்கள்.
मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।।10.9।।
மத் சித்தா மத் கதப்ராணா போதயன்த : பரஸ்பரம்
கதயன்தஶ்ச மாம் நித்யம் துஷ்யன் திச ரமன் தி ச 10.9
என்னிடமே மனதைச் செலுத்தியவர்களும், என்னிடமே உயிரை அர்ப்பணித்தவர்களுமான பக்தர்கள் , தங்களுக்குள்ளே என்னுடைய ப்ரபாவத்தை விளக்கிக்கொண்டும், என் குணங்களையும் ப்ரபாவத்தையும் பேசிக்கொண்டும் எப்பொழுதும் மகிழ்கிறார்கள். என்னிடமே இன்புறுகிறார்கள்.
இப்படிப்பட்ட இடத்தில் தான் நிற்கவேண்டும் என்கிறார் அருணகிரியார்.
நாட்டு ரோஜா, http://thooddam.blogspot.com/
No comments:
Post a Comment