Friday, November 30, 2018

7.திருப்புகழ். 101.விராலிமலை

7.திருப்புகழ். 101- விராலிமலை
பொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்
 புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்

ருணகிரி நாதர் தரிசித்த 101வது தலம் விராலிமலை. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. இதற்கு சொர்ணவிராலியங்கிரி என்ற பெயரும் உண்டு. இது பழந்தமிழ் நாட்டில் 'கோனாடு' என்ற பகுதியைச் சார்ந்தது.  இது சீலம் மிக்க பெரியவர்கள் வாழும் ஊர் என்பார் அருணகிரியார்.

கோடாச் சிவ பூஜை பௌருஷம்
ஆறாக்கொடை நாளும் மருவிய
கோனாட்டு விராலிமலை.


ஷண்முகநாதர் வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலிக்கும் இடம். ஒரு காலத்தில் மயில்கள் மிகுந்திருந்த இந்த இடத்தில் இன்று மயில்களின் தொகை வெகுவாகக் குறைந்து வருகிறது.

முருகன் விராலிமலைக்கு அழைத்தது !

அருணகிரிநாதர்  வயலூரில் இருந்தபோது முருகப்பெருமான் அவரது கனவில் வந்து அவரை விராலிமலைக்கு வரும்படிச் சொன்னார். இதை நாதரே பல பாடல்களில் பாடியிருக்கிறார்.

சோலைபுடை சுற்று வயலூரா!
தானரியில் மட்டு வாசமலரொத்த
தாளிணை நினைப்பில் அடியேனை........
விராலி மலையில் நிற்பம் நீ கருதியுற்று
வா வா என அழைத்து என் மனதாசை
மாசினை யறுத்து ஞானமுதளித்த
வாரம் இனி நித்தம் மறவேனே

என்று வயலூர் பாடல் ஒன்றில் கூறினார்.

இந்தத் தலத்தில் 16 அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார்.

திருவுருவத்யானம்

சீரான கோல கால நவமணி
     மாலாபி ஷேக பார வெகுவித
     தேவாதி தேவர் சேவை செயுமுக        மலராறும்

சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளு நீளும் வரியளி
    சீராக மோது நீப பரிமள             இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
     ஜீமூத மூர்வ லாரி மடமகள்
    ஆதார பூத மாக வலமிட                முறைவாழ்வும்


ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
     ஞானாபி ராம தாப வடிவமும்
     ஆபாத னேனு நாளு நினைவது          பெறவேணும்


இப்பாடலில் தான் எத்தகைய உருவத்தை தியானம் செய்யவேண்டும் என்கிறார்.
சீரானதும், நவமணிகள் பதிக்கப்பெற்று கம்பீரமாயுள்ளதும், பெருமை பொருந்தியதுமான  கம்பீரமான கிரீடங்களின் பாரம் தாங்கப்பெற்றதும், பல தேவாதிதேவர்கள் சேவிக்கின்றதுமான ஆறு முகமலர்களையும்,
சிறப்புற்று ஓங்கும் வீரலக்ஷ்மி விளங்கும் பன்னிரு தோள்களையும், நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள்  ஸ்ரீராகம் பாடும் கடப்ப மலரின் வாசனை வீசும் இரு திருவடிகளையும்,
முடிவிலாத ஆசைகொண்ட வேடர் மடமகள் வள்ளியும்,  மேகத்தை வாகனமாகக் கொண்டுள்ள இந்த்ரன் மடமகள் தேவசேனையும் பக்தர்களின் பற்றுக்கோடாக முறையே உனது வலது, இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,
ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும், மயிலையும், மெய்ஞான சொரூபமான  அழகிய கீர்த்தி பெற்ற  உனது திருவடிவையும், மிகவும் கீழ்ப்பட்டவனான நானும் தினமும் தியானம் செய்யும்படியான  பேற்றைப் பெறவேண்டும் என வேண்டுகிறேன்! 
இது மிக அருமையான தியானப் பாடலாகும்.

இந்தப்பாடலில் மஹாபாரத நிகழ்ச்சியொன்றைச் சொல்கிறார்.

கூராழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மாறு பானு மறைவுசெய்
கோபால ராயன்.......

இது பாரதப்போரில் 14ம் நாளன்று சூரியனைத் தன் சக்கரத்தால் மறைத்து, அஸ்தமனம் போலாக்கி, அர்ஜுனன் தன் சபதப்படி ஜயத்ரதனை மாய்க்கச்செய்து, அர்ஜுனன் உயிரைக் காத்ததைச் சொல்கிறது. இதையே முதல் திருப்புகழான முத்தைத்தருவிலும் ,
"பட்டப் பகல் வட்டத்திகிரியில் இரவாகப் 
பத்தர்க்கு ரதத்தைக் கடவிய  பச்சைப் புயல்"
என்று சொன்னார்.





மனோலயம் பெற்று சமாதி நிலை அடைய 

இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
   ரியாவரு மிராவுபக        லடியேனை

இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
   மிலானிவ னுமாபுருஷ            னெனஏய

சலாபவ மலாகர சசீதர விதாரண
   சதாசிவ மயேசுரச              கலலோக

சராசர வியாபக பராபர மநோலய
   சமாதிய நுபூதிபெற          நினைவாயே


வீணான, பொல்லாத உரைகளைச் சொல்லாத மனமுடைய தபோதனர்கள்  யாவரும்,  இரவும் பகலும் அடியேனைக் குறித்து,
'இவன் ஆசை இல்லாதவன்,களியாட்டங்களில் ஈடுபடாதவன், உலோபக்குணமும் மோகமும் இல்லாதவன், இவனும் ஒரு சத் புருஷன்' என்று சொல்லும்படியாக,
இனிய குணத்துடன், பரிசுத்தமான, சந்திரனைத் தரித்த, கருணை நிறைந்த, சதாசிவ மகேஶ்வர நிலையதாய்,
சகல உலகத்திலும்  சரம்-அசரமாக உள்ள அனைத்திலும் கலந்ததாக, பரம்பொருளாக உள்ள  மனம் ஒடுங்கிய சமாதி அநுபூதி நிலையை  அடியேன் பெற நீ  நினைக்குமாறு  வேண்டுகிறேன்.

முக்தி நெறி  தெரிய

உனதருள் கைவர
உயர் பக்தி வழியும் பரம முக்தி நெறியும்
தெரிவ தொரு நாளே !

இங்கு மயிலின் பராக்ரமத்தை விவரிக்கிறார்:

வெளி முகடுருவ  உயர்தரு சக்ரகிரியுங் குலைய
விக்ரம நடம்புரியும் மரகத கலப எரிவிடு மயில்

இது மயில் விருத்தத்தில் வரும் பாடலை நினைவுபடுத்துகிறது.

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
   பட்டுக் ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
   தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
   சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
   திடுக்கிட நடிக்கு மயிலாம்


இந்தப் பாடலில் வயலூரில்  தான் திருப்புகழ் பாடும்போது முருகன் தந்த அதிசய தரிசனத்தைப் பற்றிச் சொல்கிறார்.

திருவயலியில் அடிமைய குடிமையினலற
மயலொடு மல மற  அரிய பெரிய 
திருப்புகழ் விளம்பு  என்றழனற்புத  மெழுந்தருள் குக
விராலி மலையுறை குரவ நலிறைவ  

யார் உண்மையான குரு?

உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
 யுடனாக ஆக மத்து              கந்துபேணி

உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
 யொழியாது வூதை விட்டி           ருந்துநாளும்

தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
 தருவார்கள் ஞான வித்தை          தஞ்சமாமோ

தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
 தருமாகி லாகு மத்தை             கண்டிலேனே


குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
 குடிமாள மாய விட்டு                குந்திபாலர்

குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
 குறளாக னூறில் நெட்டை        கொண்டஆதி

மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
 மலைமே லுலாவு சித்த         அங்கைவேலா

மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
 வளைகூனை யேநி மிர்த்த                 தம்பிரானே.



அதிக ஜபம் செய்து, கோடிக்கணக்கில் ஹோமம் செய்து சித்திகள் வரப்பெற்று, ஆகம விதிகளை மகிழ்ச்சியுடன் அனுசரித்து, யாரிடத்திலும் அறிதலும் ஆசையும்  பொருந்த வைக்காமல், ப்ரணவத்தை எப்போதும் ஓதி,  முறைப்படி பிராணாயாமம் செய்தவராயினும், நிலைத்த ஞானமில்லாத சிலர் குரு வெனும் ஸ்தானத்தில் இருந்து ஞானோபதேசமும் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யும்  உபதேசம்  புகலாகுமா ? ஆகாது..
நெற்றியில் புருவமத்ய ஸ்தானம்  ஒளிமிக்க  பெரு ஞான சித்தியைக் கொடுக்குமென்றால் அதை நான் காணவில்லையே!

இங்கு  குருவைக்கொள்ளும் விஷயத்தில் ஜாக்ரதையாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்.  இதை திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்:

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.







இந்தப் பாடலின் பின் பகுதியில் மஹாபாரத, பாகவத  நிகழ்ச்சிகளை ரசமாகச் சொல்கிறார்.

குரு நாட்டை ஆண்ட துரியோதனாதியர் கூட்டத்தின் குடி அழியும்படி மாயச்செயல்களைச் செய்து, குன்தி தேவியின் குழந்தைகள் அழியாமல் காத்து, நீதிமுறையை நெறிப்படுத்தி, ஏழு உலகங்களையும் அவர்கள் ஆளும்படிச் செய்தவனும்,
குட்டை தேக வடிவினனாக  (வாமனன்)வந்து, கெடுதலிலாத நெடிய ( திரிவிக்ரம) உருவத்தைக்கொண்ட ஆதி மூர்த்தியாம் திருமால்.
அந்தத் திருமாலின்  மருகன் முருகன்!
[ குன்திபால் ஸ்ரீ க்ருஷ்ணர் காட்டிய கருணை  அபாரமானது. தன் அன்னையைவிட குன்திக்கே அதிக அருள் செய்தார். தன் அன்னையை  கம்சனிடமிருந்து காப்பாற்றினார், ஆனால் தனக்குமுன் பிறந்த அவர் குழந்தைகளைக் காப்பாற்றவில்லை. இங்கு குன்தியைக் காப்பாற்றியதுடன் அவருடைய குழந்தைகளையும் ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் காப்பாற்றினார். இதை குன்தியே  பின்னாளில் நினைவுகூறுகிறாள்.]

இப்பாடலின் கடைசி அடியில்  மதுரையில் பாண்டியனின் வெப்பு நோயை ஒழித்ததையும், அவன் கூனை நிமிர்த்தியதையும் சொல்கிறார். முருகனே சம்பந்தராக வந்தார் என்பதை இங்கும் தெளிவாக்குகிறார்.

விதுரர் போர்செய்யாமல் நீங்கியது

இன்னொரு பாடலில் மற்றொரு அரிய மஹாபாரத நிகழ்ச்சியைச் சொல்கிறார்.
துரியோதனனிடம் தூது சென்ற க்ருஷ்ணர், அவனுடைய   மாளிகையில்  விருந்தினராகத் தங்காது விதுரருடைய குடிலில் தங்கினார், இதைக்கண்டு பொறாத துரியோதனன் அடுத்த நாள் சபையில் விதுரரை  'என்ன இருந்தாலும் நீ  தாசி மகன் தானே, என் சோற்றை  உண்டும் க்ருஷ்ணன் பக்கமே இருக்கிறாயே' என்று ஏசினான். இதைப் பொறுக்காத விதுரர், மிக்க கோபம் கொண்டு, 'நான் போரில் அம்பைத் தொடேன்' என்று சொல்லி தன்னிடமிருந்த மிகச்சிறந்த வில்லை இரண்டாக உடைத்தெறிந்து, சபையிலிருந்து நீங்கினார். இந்தச் செய்தியை நாதர் பாடுகிறார்.

விதுர னெடுந்த்ரோணமேற்று எதிர்பொருமம் பாதியேற்றி
விரகினெழுந்தோய நூற்று      வருமாள
விரவுஜெயன் காளி  நாட்டில் வருதருமன் தூத னீற்ற
விஜய நெடும் பாக தீர்த்தன்

விதுரன் தனது பெரிய வில்லை எடுத்து, எதிரியுடன் போர்புரிய அதில் அம்பு முதலிய பாணங்களை ஏற்றி சாமர்த்தியத்துடன் போர்புரிதல்  இல்லாமல் போகவும், துரியோதனன் ஆகிய நூற்றுவரும் இறந்து போகவும்,
உபாயம் செய்த ஜெயவீரன்,  காளி நாடாகிய துர்க்கை வனத்தில்  வாசஞ்செய்துவந்த  தர்மபுத்திரனுடைய தூதன், திருநீறிட்டு  தவம் செய்தவனாகிய அர்ஜுனனுடைய பெரிய தேர்ப்பாகனாகிய பரிசுத்த மூர்த்தியாகிய திருமால் 
.
எவ்வளவு பொருட் செறிவுடன் பாடுகிறார்!


நரகத்தில் விழாது காக்க

வேதாள ஞான ஹீனன் விதரண
நாதானிலாத பாவி யனிஜவன்
வீணாள் படாத போத தவமிலி        பசுபாச

வ்யாபார மூடன் யானும் உனதிரு
சீர்பாத தூளியாகி  நரகிடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே

இங்கே சுவாமிகள் எல்லாவிதமான குற்றங்களையும் தன்மேல் ஏற்றிச் சொல்கிறார்.
வேதாளம் = பேய்
ஞான ஹீனன் = ஞானமே இல்லாதவன்
விதரண நா தான் இலாத பாவி + விவேக முள்ள நாக்கே இல்லாத பாவி
வீணாள் படாத போத தவமிலி  =  பயனில்லாத  நாட்கள் இல்லாமல் செய்துகொள்ளும் அறிவும் தவமும் இல்லாதவன்
அனிஜவன்  == நிஜமே இல்லாதவன்
பசு பாச வ்யாபார மூடன்= பசு, பாசமாகிய உலக விவகாரத்திலேயே உழலும் மூடன்[ பதி ஞானம்- கடவுளைப்பற்றி எண்ணாதவன்]
இப்படியெல்லாம் அருணகிரியார் சொல்லிக்கொள்வது நாம் இப்படிஎல்லாம் இருக்கக்கூடாது என்பதைக் காட்டவே. அவர் இப்படி உண்மையாகவே இருந்திருந்தால் தெய்வ அருள் கிடைத்திருக்குமா ?

இந்தப் பாடலில் ஒரு ரசமான விஷயத்தைச் சொல்கிறார்.

கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம்  அடர்சோலை

அங்குள்ள சோலைகளில் கூதாளம்,  கடம்பம், சுரபுன்னை ஆகிய மலர்களில்  வண்டுகள்  சாதாரி,(பந்துவராளி) தேசி, நாதநாமக்ரியை ஆகிய ராகங்களில்  ஆரவாரமாக  இசையுடன்  ஒலி எழுப்புகின்றனவாம்! (முன் ஒரு பாடலில் ஸ்ரீராகம்  பாடும் வண்டைப் பற்றிச் சொன்னார்,)

சம்பிரதாயமான  நெறி வேண்டும்!

ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும்         வெகுரூப

அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு         வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது           சிவயோகம்


தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது     பெறுவேனோ




பஞ்ச பூதங்களும், ஆறு சமயங்களும், மந்திரம் , வேதம், புராணங்கள், கலைகள். ஆகியவையும், 51 அக்ஷரங்களூம்,
பல உருவுடைய தேவர்முதலானவர்களும், அசையும் அசையாப் பொருளானவைகளும், உயர்ந்த பிரம்மன், மேக நிறத்துத் திருமால், அந்திவர்ண ருத்ரன் ,
சந்த்ர சூர்யர்களும், அஜபா என்னும் ஹம்ஸ மந்திரமும், விந்துவும், நாதமும் ஆகிய இவை எல்லாவற்றின் ஏக வடிவமே அந்தப் பரம்பொருளின் சொருபம் (அல்லது தன்  நிஜ சொருபம்) எனப் பாவித்து, இருத்தலே சிவயோகம்..
இதை அடைய, அவரவர்களும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கப்பெற்று,, பரம்பரையாய் வந்த குருமூர்த்தியின்  உபதேசத்தில் பொருந்தும் நெறியைப் பெறுவேனோ !




இது மிக முக்கியமான கருத்து, சாதகரின்  தகுதிக்கு ஏற்ப பல சாதனைமுறைகள் வழிவழியாக வந்திருக்கின்றன. இதில் எதைப் பின்பற்றினாலும் அது இறுதியில் ஒரே பரம்பொருளிடம் கொண்டுசேர்க்கும் என்பதே உண்மையான ஆன்மீகம். இப்படிச் சம்பிரதாயமான வழியிலேயே சாதகன் போகவேண்டும்.

இப்போதெல்லாம் திடீர் காஃபி போன்று குருமார்களும்  முளைக்கிறார்கள். புதிது புதிதான வழிகளைச் சொல்கிறார்கள். இந்த வழிகளின் விளைவுகள் யாருக்கும் தெரியாது. சம்பிரதாய வழிகளோ, பலரால் பரீக்ஷித்துப் பார்க்கப்பட்டவை. [ Tried and Tested. They have stood the test of time.] அதனால் சம்பிரதாய வழியே சிறந்தது. சமீப காலத்தில் இதை வலியுறுத்தியவர் ஹரே க்ருஷ்ணா இயக்கத்தை உலக அளவில் பரப்பிய பக்திவேதாந்த ஸ்வாமி  ப்ரபுபாதா. He stressed that a Guru should have  come in Disciplic Succession.

கிழம்படுமுன் பதம் பெற

இளமை கிழம்படுமுன் பதம் பெறுவேனோ 

இதுவும் மிக முக்கியமான கருத்து. சமயம், ஆன்மீகம் என்றால் பலர் 'பிறகு, வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளலாம்' என்பார்கள்.  இளமையில் பசு-பாச (உலக)விஷயங்களில் ஈடுபட்டு பதிஞானம் (தெய்வ சிந்தனை)  இல்லாமல் இருக்கிறார்கள்.  இதை பகவத் பாத சங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார்.

बालस्तावत् क्रीडासक्तः,              பாலஸ்தாவத் க்ரீடாஸக்த:
तरुणस्तावत् तरुणीसक्तः।           தருணஸ்தாவத் தருணீ ஸக்த:   
वृद्धस्तावच्चिन्तासक्तः,                வருத்தஸ்தாவத் சின்தா ஸக்த:
परे ब्रह्मणि कोऽपि न सक्तः            பரே ப்ரஹ்மணி கோஅபின ஸக்த:


குழந்தை விளையாட்டில்  காலம் கழிக்கிறது,
இளமையில் பெண்களிடம் ஈடுபாடு வருகிறது
வயதான காலத்தில் பலவித கவலைகள்
யாரும் கடவுளைப்பற்றி நினைப்பதில்லை!

அதனால் மூப்பு வருமுன் உன் பதத்தைப் பெறவேண்டும் என்கிறார்.

வழிவழி அன்புசெய்  தொண்டு கொண்டருள் பெருமாளே

என்று வேண்டுகிறார்.  இது பக்தர்களின்   நிலை. "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் " என்பார் ஆண்டாள்.

இந்தப்பாடலிலும் ராமாயண, பாகவத நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்.


வரிமுக எண்கினு டன் குரங்கணி
பணிவிடை சென்று முயன்ற  குன்றணி யிடையேபோய்ப்

பகடி இலங்கை கலங்க அம்பொனின்
மகுட சிரம் தசமும் துணிந்தெழு
படியு நடுங்க விழும் பனம் பழம்    எனவாகும்

மருதம் உதைந்த முகுந்தன்
வரிகள் கொண்ட முகமுடைய  ஜாம்பவான்  முதலான கரடிப் படையும் குரங்கும் படையும் பணிபுரிய , போருக்குச் சென்று முயற்சியுடன் மலைவரிசைகளின் இடையே போய் மோசக்காரனான ராவணனுடைய இலங்கை கலங்கும்படி அவனுடைய பொற்கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தும் துண்டிக்கபட்டு , ஏழுலகும் நடுங்க , பனம் பழம்போல் விழச்செய்தவரும்,
மருத மரங்களை  ஒடிந்துவிழ வைத்தவருமான முகுந்தன்.
(  சாபத்தினால் மருத மரங்களாகி நின்ற நள-கூபர்களுக்கு க்ருஷ்ணர் விமோசன மளித்த வரலாறு பாகவதத்தில் வருகிறது.)

யமனைத் தடுத்து  நிறுத்து !

கெடாத தவமே மறைந்து கிலேசமதுவே மிகுந்து
கிலாத உடல் ஆவி நொந்து  மடியாமுன்
தொடாய் மறலியே நீ என்ற  சொலாகியனாவருங்கொல்

கெடுதலில்லாத தவ நெறியும் மறைந்துபோக, துக்கமே பெருக, உடல் ஆற்றலில்லாமல் போக , ஆவி நொந்து நான் இறந்துபடும் முன்பாக,
"எமனே, நீ இவனைத் தொடாதே " என்ற சொல்லானது உன் நாவில் வருமோ!

க்ருஷ்ண லீலை !

காயாத  பால்நெய் தயிர்க்கு டத்தினை
ஏயா வெணாம லெடுத்  திடைச்சிகள்
காணாதவாறு குடிக்கு மப்பொழு                துரலோடே

கார்போ லுமேனி தனைப்  பிணித்தொரு

போர்போ  லசோதை பிடித்த டித்திட
காதோ டுகாது கையிற்  பிடித்தழு            தினிதூதும்

வேயா லநேக விதப்ப சுத்திரள்
சாயாமல்  மீள அழைக்கு மச்சுதன்


ஸ்ரீ க்ருஷ்ணர்  பால், நெய் தயிர்க்குடங்களை இடைச்சியர்களுக்குத் தெரியாமல் குடிக்கும்போது,  யசோதை அவரைக் கட்டி அடிக்குபோது, இரண்டு  காதுகளையும் கையால் பிடித்துக்கொண்டு அழுதவரும். இனிமையான  புல்லாங்குழலுடன் அனேக பசுக்கூட்டங்களைத் தவறாமல் அழைத்துவருபவரும் ஆகிய அச்சுதன்.
என்ன அருமையான காட்சியை விளக்குகிறார்!

சிவனுக்கு உபதேசித்தது என்ன ?
இதை ஒரு பாடலில் சொல்கிறார்,

வடதிசைக் கயிலாசக்
கோமாற்கு உபதேசம் உபநிடத
வேதார்த்த மெய்ஞ்ஞான நெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி

வேத, உபநிஷதங்களின்  மெய்ப்பொருளை உணர்த்தினாராம்.
அவரிடமே ஞானோபதேசம் வேண்டுகிறார் அருணகிரிநாதர் !


ஞானோபதேசம் பெற


மாலாசை கோபம்  ஓயாதெ நாளு
 மாயா விகார               வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு          மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
 நானோதி னேனு          மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
 ஞானோப தேச ம்             அருள்வாயே


பாலா கலார ஆமோத லேப
 பாடீர வாக          அணிமீதே

பாதாள பூமி யாதார மீன
 பானீய மேலை          வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
 வேதாள பூத          பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
 வேளே சுரேசர்         பெருமாளே.


மயக்கம், ஆசை, கோபம்  மிகுந்து எந்த நாளும் பிரபஞ்ச மாயாவிகாரங்களின் வழியே போகின்ற நான்,
பெரிய பாவி, விஷ குணம் உள்ளவன்தான் என்ற போதிலும், நாதனே நீதான் இனி எனக்குத் தாயும் தந்தையும் ஆவாய்!
நான்கு வேதங்களையும், ஆகமம் முதலிய பிற நூல்களையும் நான் கற்றதில்லை.

என் வாழ்நாள் வீணாகப் போய்விடாமல். முப்பத்தாறு தத்துவங்களுக்கும்  அப்பாற்பட்ட நிலையதான  ஞானத்தை நீயே உபதேசித்து அருள்வாயாக !
பாலனே! செங்குவளை மலர்ப்பிரியனே! சந்தனப் பூச்சுடன் ஆபரணங்களை அணிந்துள்ள அழகனே!
பாதாளம் பூமி  இவற்றுக்கு ஆதாரமானவனே! மீன் நிறைந்த ஜலம் சூழ்ந்த வயலூரனே !
வேலனே ! விராலிமலையின் வாழ்வானவனே! பூத, வேதாள கணங்களுக்குத் தலைவரான சிவபிரான் குமாரனே !
வீரனே ! கொடுமையான சூரனுக்குப் பகைவனே! செவ்வேளே ! தேவேசப் பெருமாளே ! ஞானோபதேசம் அருள்வாயே !

எத்தனை அருமையான பாடல்! குரு நாதரிடம் நேரடி உபதேசம் வேண்டுவது! மனப்பாடம் செய்யத்தக்கது !
இப்படி அருமையான பாடல்கள் கொண்ட தலம் விராலிமலை!

https://www.indianholiday.com/wildlife-india/viralimalai-wildlife-parks.html



No comments:

Post a Comment