Monday, November 26, 2018

1.திருப்புகழ்-92 வயலூர்.

1.திருப்புகழ்- 92.வயலூர்
 [அருணகிரிநாதர் தரிசித்துப்பாடிய க்ஷேத்திரங்களை  அதே வரிசையில் நாம் பார்த்துவருகிறோம். இதுவரை 91 க்ஷேத்திரங்களை -திரிசிராப்பள்ளிவரை- "அருணகிரியின் அருள் அலை" என்ற தொடரில் 97கட்டுரைகளில்கண்டோம்( https://ramankumaran.blogspot.com/2017/10/97-91.html) இறையருளால் இனித்தொடர்ந்து மீதி இடங்களையும் காண்போம்.]
தலமும் கோவிலும்

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே
எனப் பாடினார் ஸ்ரீ தாயுமான ஸ்வாமிகள். இறையருள் பெற குருவருள் வேண்டும். ஆனால் குருவருளுக்கும் காரணமாய் நிற்பது இறையருள்! அப்படி இறைவன் அருளைப்பெறும் சாதனங்களில் புண்யத் தலங்களில் உள்ள கோயில்களில் ஸ்வாமிதரிசனம் செய்வது முதலிடத்தைப் பெறுகிறது.  "ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே முருகன்  உருவைக் காணும் "பேற்றையும், "எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே" என்று பாடக்கூடிய அருள் நிலையையும் பெற்ற அருணகிரிநாதர் தலம் தொறும் சென்று முருகனை  வழிபட்டார். நம் தமிழ்நாட்டில்  நாயன்மார்களும் ஆழ்வார்களும் இப்படியே பல தலங்களுக்கும் சென்று , தரிசித்துப் பாடினார்கள். இப்படித் தல யாத்திரையும் ஸ்வாமி தரிசனமும் நம் நாட்டுக்கே உரிய சிறப்பம்சமாகத் திகழ்கிறது.

இன்று எந்தத் தலமும் முந்தைய தூய நிலையில் இல்லை. எல்லாம் வியாபாரமயமாகிவிட்டது.  கோவிலின் புனிதத்தைப் பாதிக்காத வகையில் நடந்துகொள்ளும் பக்குவமும் மக்களிடையே இல்லை.அரசினர்  ஹிந்துக் கோவில் நிர்வாகத்தில் புகுந்து  செய்யும் அக்ரமங்கள்  எழுத்தில் அடங்காதவை.  இருந்தாலும்  கோவிலுக்குப் போகாமல் இருக்க முடியவில்லை!.

ஒரு கோவிலின் பெருமை அதன் அளவில் இல்லை. பஞ்சபூத க்ஷேத்ரம், அறுபடைவீடு எனச் சில கோவில்கள் பிரசித்தி பெற்றிருந்தாலும். ஒவ்வொரு புராதனக் கோவிலும் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஒவ்வொரு வகையில் பெருமை பெற்றதே. நாயன்மார்கள், அருணகிரிநாதர் ஆகியோர் பாடிய கோவில்களில் பெரும்பாலானவை இன்றும் சிறியதாகவே இருக்கின்றன.  ஆனால் இன்று நாம் வலிந்து கட்டும் கோயில்களில் அந்தப் பழைய கோவில்களில் உள்ள அமைதியும், சான்னித்தியமும் இல்லை. அதனால் நாம் பழைய கோவில்களின் பராமரிப்பையும்  வழிபாட்டையும் விடாது தொடரவேண்டும். ஹிந்துக் கோவில்களை அரசின் அசுரப்பிடியிலிருந்து மீட்கவேண்டும்.

நமது புராதனக் கோவில்களின் மஹிமையை, அங்கு நிகழ்ந்த அற்புதங்களை புராணத்தில் படிக்கிறோம். ஆனால் இத்தகைய அற்புதங்கள் இன்றும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  அதனால் ஒவ்வொரு சமயத்தில் ஒரு கோவில் பிரசித்தமாகிறது. ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரால்  தக்ஷிணேஶ்வரம் காளி கோவில் பிரசித்திபெற்றது. சென்ற 70,80 ஆண்டுகளில் ஸ்ரீசேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், செம்பை வைத்யநாத பாகவதர் ஆகிய வர்களால் குருவாயூர் புகழ் எங்கும் பரவியது! திருப்புகழ் பரப்பிய  ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகளால் வள்ளிமலை பெருமை எங்கும் பரவியது. இவ்வாறு அடியார்களின் வாயிலாக  தலங்கள், கோவில்களின் பெருமையை நாம் மீண்டும்  மீண்டும் தெரிந்துகொள்கிறோம்.

வயலூர் மஹிமை


வயலூர் முருகன் கோவில்.

 திரிசிராப்பள்ளிக்கு வந்த அருணகிரிநாதர்  அங்கிருந்து அருகிலுள்ள தலங்களுக்குச் சென்று வழிபட்டார். அதில் மிக முக்கியமானது வயலூர். மேலைவயலூர் என முன்பு வழங்கியது. இன்று குமார வயலூர் எனவும் சொல்கின்றனர்.  இது உள்ள பகுதி பழைய காலத்தில் ராஜகம்பீர வளநாடு என்னும் பெயரில் வழங்கியது."ராஜ கம்பீர நாடாளும் நாயக வயலூரா" என்று பாடுகிறார். இது  அருணகிரி நாதரின் வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற தலமாகும். 

வயலூர் புகழ் பரப்பிய வாரியார்!


Pic. from variyarswamigal.com

 சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில்  வயலூர் மீண்டும் பிரசித்திபெற்றது இதற்குக் காரணமாக அமைந்தது ஸ்ரீ க்ருபானந்த வாரியாரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி, அவர் 1934ல் இந்தக் கோயிலில் தரிசித்துவிட்டு அர்ச்சகருக்கு  8 அணா காணிக்கை  தந்தார். ( இது அக்காலத்தில் பெரிய தொகை- இதில் 5 கிலோ அரிசி வாங்கலாம் ) அன்று இரவு அர்ச்சகர்  (அல்லது தர்மகர்த்தா )கனவில் ஒரு சன்யாசி வடிவில் வந்த முருகன் " என் அடியவரிடம் எட்டணா வாங்கினாயே, அதில் கோபுரம் கட்டிவிடுவாயா?" என்று கேட்டாராம்.  அந்த 8 அணாவை மணியார்டரில்  வாரியாருக்கே அனுப்பிவிட்டனர். விஷயத்தை அறிந்த வாரியார் முன்னின்று கோயில்கோபுரத்தைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார், அதிலிருந்து அவருடைய உபன்யாசத்தை வயலூர் முருகன் நினைவுடனேயே  தொடங்குவார். இப்படி வயலூர் பெருமை எங்கும் பரவியது!

திருப்புகழ் பாட அருள்

அருணகிரிநாதருக்குத் திருப்புகழ் பாடும் அருள் கிடைத்த இடம் வயலூர். இவர் திருமண்ணிப்படிக்கரையில்  ( 23வது தலம்)தங்கி இருந்தபோது அவருக்கு  ஏதேனும் கனவு வந்தது போலும்! வயலூரில் வந்து தரிசித்து, திருப்புகழ் பாட வேண்டும் என்று பாடுகிறார்!
செய்ப்பதித்  தலத்தி  னைத்துதித்
துனைத்  திருப்புகழ்ப்           பகர்வேனோ
என "அருக்கி மெத்தெனச் சிரித்து" என வரும் பாடலில் பாடுகிறார்! செய்ப்பதி என்பது வயலூர்.
பொய்யாக் கணபதி அருள்!
வயலூர் வந்த அருணகிரியார் முருகனைத் தரிசித்து அங்குள்ள பொய்யாக் கணபதியின் அருளை நாடுகிறார். கணபதி  "அக்குற மகளுடன் அச்சிறு  முருகனை அக்கணம் " மணம்முடித்து வைத்தவரல்லவா!  கணபதியை முறைப்படி பூஜித்து அவர் அருள் பெறுகிறார். அவர் எதை எதைப் பாடவேண்டும் என்பதையும் கணபதியே சொல்கிறார்.

விக்கிநச மர்த்தனெனும்       அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய            பெருமாளே.
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர                                          கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை                          வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப                           னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
 செப்பெனஎ னக்கருள்கை                   மறவேனே
அழகிய மயில், கடம்பமலர் மாலை, க்ரௌஞ்ச மலையைத் துளைத்த வேல், எட்டுத் திக்குகளும் மதிக்கும்  கொடியிலுள்ள சேவல், உயிர்களுக்கு ரக்ஷைதரும் திருவடிகள், பன்னிரு தோள்கள், வயலூர் ஆகியவற்றை வைத்து உயர்ந்த திருப்புகழைப் பாடு என அருள் செய்தார் விக்கின சமர்த்தனெனும் கருணைக்கடலும் கருணை மலையுமாகிய  பொய்யாக் கணபதி என்று பாடுகிறார்.

இவருக்கு வயலூர் தலத்திலுள்ள அக்னீஶ்வரரும்  திருப்புகழ் பாடஅருள்புரிந்ததை  சக்கரப்பள்ளித் திருப்புகழில் சொல்கிறார்!
தட்டறச் சமயத்தை வளர்ப்பவள்
அத்தன்  முற்புகழ் செப்ப அனுக்ரஹ
சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி
முன்பு திருப்புகழைப் பாடும் திறனை (சத்துவத்தை) சிவபிரான் அளித்த செய்ப்பதி.எனப் பாடுகிறார். இருவரையும் மறவாது பாடுகிறார்:
அருளில் சீர் பொயாத கணபதி
திருவக்கீசன் வாழும் வயலி
என ஒருபாடலில் பாடுகிறார். வயலூர் தலத்தில் உள்ள  சிவபிரான் 
திருநாமம் அக்னீஶ்வரர்.

இப்படி அருள்பெற்றுப் பாடியதாலல்லவோ எத்திசையிலுள்ளவர்களும் திருப்புகழை "அற்புதம், " என வியந்து பாராட்டுகிறார்கள்!
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
  பட்சிந டத்திய           குகபூர்வ

பச்சிம தட்சிண வுத்தர திக்குள
  பத்தர்க ளற்புத      மெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
  ருப்புக ழைச்சிறி      தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
  சித்தவ நுக்ரக    மறவேனே
திருச்செங்கோடு திருப்புகழ்.
இப்படித் தனக்கு திருப்புகழ் பாடும் திறத்தைத் தந்ததை மறவாமல் நன்றி பாராட்டுகிறார்:
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் அன்பது செய்ப்பதியில் தந்தவனீயே
[கோல குங்கும- திருவாவினன்குடிப் பாடல்]



அருணகிரிநாதர் வேண்டுவது






இத்தலத்தில்  முருகப் பெருமான் ஒரு முகத்துடன் இருதேவியருடன் காட்சி தருகிறார், இங்கு அருணகிரியார் 18 அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார்.



உபதேசம் பெறவேண்டும், மெய்ம்மையை உணரவேண்டும், ஞானம்  பெறவேண்டும் என்றெல்லாம் பாடுகிறார்,



அரிமருகோனே நமோவென் றறுதியிலானே நமோ வென்
றறுமுகவேளே  நமோவென் றுனபாதம்
அரஹரசேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
றருணசொரூப நமோவென் றுளதாசை
பரிபுரபாதா சுரேசன் றருமக ணாதாவராவின்
பகைமயில் வேலா யுதாடம்      பர நாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம்      பெறவேணும்.

வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி
     சித்ரப்ர சித்தமுறு
அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி
     தத்வத்தி றச்சிகர
வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி
     தப்பற்று ரைக்கவல         தம்பிரானே.
திருப்புகழை
     யுற்றுத்து திக்கும்வகை
அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில்
     ரக்ஷித்த ளித்தருள்வ        தெந்தநாளோ
(இகல் கடின முக படவி)
இங்கு"அப்பர்க்கு முத்தி நெறி தப்பற்று உரைக்கவல தம்பிரானே" என்றது  நம் அப்பனகிய சிவபெருமானை அடையும்  சரியான வழியை  தேவாரப் பாடல்களின் மூலம் சொன்ன திருஞான சம்பந்தரைக் குறிக்கும்.
சமயத்தை மீறிய ஞானம்!
நாம் சமயம் என்று போனால். பற்பல சமயவாதிகளும் தர்க்கவாதத்தினால் நம்மைக் குழப்புகிறார்கள். "சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மாணிக்கவாசக ஸ்வாமிகள். இங்கு நம் அருணகிரி நாத ஸ்வாமிகள் சொல்கிறார் :
கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
     களையுற்று மாயாது     மந்த்ரவாதக்

கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
     கருமத்தின் மாயாது       கொண்டுபூணுஞ்

சமயத்த ராசார நியமத்தின் மாயாது
     சகளத்து ளேநாளு      நண்புளோர்செய்

சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
     சலனப்ப டாஞானம்      வந்துதாராய்


இப்படிப் பலப்பல சம்பிரதாயத்துக் காரர்களின் பலவித நியமங்களில் கட்டுண்டு சஞ்சலப்படாமல் தெளிந்த ஞானத்தை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானாகிய முருகனிடம் வேண்டுகிறார்.

அலம், அலம்! போதும், போதும்!
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
மருவு முருவமு மலமல மழகொடு
குலவு பலபணி பரிமள மறசுவை      மடைபாயல்

குளிரி லறையக மிவைகளு மலமல
மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல    மொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
யுலக கலைகளு மலமல மிலகி
தொலைவி லுனைநினை பவருற வலதினி      யயலார்பால்

சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
 முறவு மலமல மருளலை கடல்கழி
   துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற        அருள்வாயே
இந்த உடல் எடுத்து அனுபவித்தது எல்லாம் போதும், போதும்; (அலம், அலம்) இனி உன் திருவடியிணையில் காணும் அருட்கடலில் செல்லும் அறிவு பெற்று மகிழ அருள் புரிவாயே என்று வேண்டுகிறார்.
ஒருநாலுசுருதி வழிமொழி சிவகலை யலதினியுலக கலைகளு மலமலம்
நான்கு வேதமரபில் வந்த சிவஞானம் தவிர வேறு உலக கலைகளும் அலம்,அலம்-போதும், போதும் என்கிறார்!



மெய்ம்மையை உணரவேண்டும்
'குயிலோ மொழி அயிலோ' என்ற பாடலில் மெய்ம்மையை உணரவேண்டும் எனப் பாடுகிறார்;
பசுபாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர
பதி நேரு நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ
ஜீவாத்மா (பசு), மலங்களாகிய தளைகள் ஆகிய எல்லாவற்றிற்கும் அதிகன் -மேம்பட்டவன் முருகன். அவன் பரிபூரணன், ஒளிக்கு இருப்பிடமானவன் (புரண ஆகரன்) உன்னுடைய அருளால் நான் மெய்ப்பொருளை உணரமாட்டேனா என்று பாடுகிறார்.
இப்பாடலில் ஒரு அரிய செய்தியைச் சொல்கிறார்.
வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன
  விசையேழ்பரி ரவிசேயெனு           மங்கராசன்

விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்
 விதிதேடிய திருவாளிய                 ரன்குமாரா
இது மஹாபாரத நிகழ்ச்சி.
ஒளிபொருந்திய ஆயிரக்கணக்கான கிரணங்களை வீசும் சூர்யன், உதய காலத்தில் இருளை அழிப்பவன்; தன் தேரில் வேகமாகச் செல்லக்கூடிய ஏழு குதிரைகளை உடையவன். அவனுடைய மகனாகிய அங்கதேசத்து அரசன் கர்ணன். இவன்  தனக்குப் பகையாயிருந்த  (  ஒரு சமயம் பேடியாக இருந்த) அர்ஜுனனுடைய அம்பால் தாக்கப்பட்டு இறக்கும்  நிலையில் இருந்தபோது, அவனுக்கு ஸ்ரீ க்ருஷ்ணர் பிரத்யட்சமாகக் காட்சிதந்தார் என்ற  நிகழ்ச்சியை இங்கு விவரிக்கிறார்! அப்படிப்பட்ட திருமாலும் பிரம்மாவும் தனது அடிமுடியைத்தேடிய  செல்வ நாயகனான சிவபெருமானின் புதல்வனாகிய முருகனே  , உன்னுடைய அருளால் நான் மெய்ப்பொருளை உணரவேண்டும் என்கிறார்.
முருகன் தாள்கள்
உனது தாள்களைத் தரவேணும் என வேண்டுகிறார்:
ஆசிலாத மறைக்குந் தேடொணாதொருவர்க்கொன்று 
ஆடல் தாள்கள் எனக்கின்று அருள்வாயே
(கோவை வாய்)
இகபரம்
உணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம்
அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்
மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய்
உணர்வு முணர்வுற வழுவற வொருஜக
வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை
புகலு மநுபவ வடிவினை யளவறு
அகில வெளியையு மொளியையு மறிசிவ
தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை   யென்றுசேர்வேன்
(விகட பரிமள )
இகபரம் உணரும் அறிவிலி : இகபர நன்மைகளை உணரும் அறிவில்லாத நான்
ப்ரமை தரு திரிமலம் அற்று :  மயக்கம் தரும் மும்மலங்களும் நீங்கப் பெற்று
ஒருமை யுற்று : எண்ணம் சிதறாமல் மனம் ஒருமுகப்பட்டு
புலத்தலையில் மறுகு பொறி கழல் நிறுவியே : ஐம்புலன்களின் வழியே சென்று கலங்கும் அறிவை உனது கழலில் பொருத்தி,
சிறிது மெய் உணர்வும் உணர : சிறிது உண்மை அறிவு வர,
வழுவற : குற்றங்கள் நீங்கி
ஓரு ஜக வித்தைக்குணத்ரயமும் நிர்த்தத்துவைத்து: இந்த உலக அறிவையும், முக்குணங்களையும் என்வசப் படுத்தி
மறைபுகலும் அனுபவ வடிவினை ; வேதங்கள் கூறும் அனுபவ வடிவான
அளவறு அகில வெளியையும்: அளவுகடந்த அகண்ட வெளியையும்
ஒளியையும் அறியும் சிவதத்வப் பிரசித்திதனை: ஒளியையும்,அறியும் படியான சிவானுபவமான உண்மைக் கீர்த்திப் பொருளை,
முத்திச் சிவக்கடலை : முக்தியாகிய சிவப்பெரும் கடலை,
என்று சேர்வேன் : நான் அடையக்கூடிய நாள் ஒன்று உண்டோ!
எவ்வளவு அருமையான வரிகள்!
இத்தனை அருள் செய்த வயலூர் முருகனை மறக்கமாட்டேன் என்று பாடுகிறார்.
வயலூரா! 
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த பெருமாளே!
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
 தாளிணை நினைப்பி     லடியேனைத்
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
 தாருவென மெத்தி        யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
 வாவென அழைத்தென்      மனதாசை
மாசினை யறுத்து ஞானமு தளித்த
 வாரமினி நித்த        மறவேனே
( இங்கு முருகன் அருணகிரியாரை விராலிமலைக்கு அழைத்த அருளைச் சொல்கிறார்.)
மநு நியாய சோணாடு தலைமையாக வேமேலை
வயலி மீது வாழ்தேவர்          பெருமாளே
கருவிழாது சீரோதி  அடிமைபூண லாமாறு
கனவிலாள் சுவாமீ நின்      மயில்வாழ்வும்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
கழலு நீப வேல்வாகு         மறவேனே.
இங்கு முருகப் பெருமான் ஒருமுகத்தோடு , மயில் மீது வேலாயுதத்தோடும் கடப்ப மாலையுடனும்  அருணகிரிநாதருக்கு கனவில் வந்து அருளியதைச் சொல்கிறார்.  "கருவிழாது சீரோதி" என்பது அற்புதமான வரி. சீரை ஓதுபவர்கள்- முருகன் புகழைப் பாடுபவர்கள் 'கருவிழாது'- மீண்டும் கருவில் விழமாட்டார்கள்!
முருகனே சம்பந்தர்
முருகன் சம்பந்தராக வந்து சிவநெறி தழைக்கச் செய்தார், இதை ஒருபாடலில் சொல்கிறார்:
புத்த ரமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீ றிடவே
புக்க அனல்வய மிகஏ டுயவே       உமையாள்தன்

புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
பொற்ப கவுணியர் பெருமா னுருவாய்       வருவோனே

சத்த முடையஷண் முகனே குகனே
வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
சத்தி கணபதி யிளையா யுளையா        யொளிகூருஞ்

சக்ர தரஅரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்ப முளதட வயலூ ரியலூர்            பெருமாளே.
ரத்ந பரிபுர இருகால் ஒருகால் மறவேனே !

இவ்வாறு முருகன் அருள்பெற்ற அருணகிரியார் தன் செயல் ஒன்றும் இல்லை, எல்லாம் முருகன் செயலே என்ற நிலையில் திகழ்ந்தார்!
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
  என்னால் துதிக்கவும்         கண்களாலே

என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
  என்னா லிருக்கவும்      பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
  என்னால் சலிக்கவும்      தொந்தநோயை

என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
  என்னால் தரிக்கவும்          இங்குநானார்.

"ஆட்டுவித்தால் ஆரொருவ்ர் ஆடாதாரே, காண்பரார் கண்ணுதாக் காட்டாக் காலே" என்ற அப்பரின் திருவாக்கை இவ்வடிகள் நினைவுபடுத்துகின்றன.
இப்படி நமது அருணகிரிநாதர் வயலூரில் பாடினார். பொய்யாக் கணபதியின் மொழிப்படி வயலூரைப் பல பாடல்களில் நினைத்துப் பாடினார். நாமும் இவற்றைப் படித்துப் பயன்பெறுவோம்.


 
 
 


No comments:

Post a Comment