Tuesday, November 27, 2018

3.திருப்புகழ் -94. திருவானைக்காவல்

3. திருப்புகழ்-94. திருவானைக்காவல்.

திருஆனைக்கா என்னும் திருவானைக்காவல் அருணகிரிநாதர் தரிசித்த 94வது தலமாகும். இது பஞ்சபூத க்ஷேத்ரங்களில் அப்புஸ்தலமாகும். அகிலாண்டேஶ்வரி நீரையே லிங்கமாகச்செய்து வழிபட்ட தலம். இங்கு வெள்ளை நாவல் மரத்தின்கீழ் சிவலிங்கம் இருந்ததால் ஜம்புகேஶ்வரம் எனப் பெயர்பெற்றது. சிவகணங்களில் இருவர் சாபத்தினால் சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்தனர். சிலந்தி  நாவல் மரத்தினடியில் சிவலிங்கத்தைக் கண்டு தன் வாயில்வரும் நூலினால் கோபுரம், மண்டபம் ஆகியவைகட்டி பூஜித்தது. சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலையைக்கண்ட யானை இது  அனாசாரம் என்று நினைத்து அவ்வலையை  நீக்கியது. இதைக்கண்டு கோபமடைந்த சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து குடைந்தது. வலி தாங்காத யானை மடிய, அதனுடன் சிலந்தியும் மடிந்தது. சிலந்தி கோச்செங்கட் சோழனாகப் பிறந்தது. இந்த சோழ அரசன் யானைபுகாத வண்ணம் 70 மாடக்கோயில்களைக் கட்டினான். இதை    பெரியதிருமொழியில்,


"எண் தோள்  ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்து 
உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன்"

என்று திருமங்கை ஆழ்வார்  எழுதியிருக்கிறார்.
பலபுராண, சரித்திரச் சிறப்புக்கள் மிக்க பெரிய தலம் திருவானைக்கா. ஸ்வாமி ஜம்புகேஶ்வரர், மஹாதேவ பட்டர், ஆனைக்காவுடையார். அம்பாள் அகிலாண்டேஶ்வரி. 
இப்பகுதி மக்கள் முழந்தைகளுக்கு ஜம்புநாதன், ஜம்புகேஶ்வரன், ஜம்புலிங்கம், அப்புலிங்கம் என்றெல்லாம் முன்பு பெயர்வைப்பார்கள்.





CC BY SA 3.0 wikimedia.

மூவர்  தேவாரமும், தாயுமானவர் பாடலும் பெற்ற தலம். அருணகிரிநாதர் இங்குபாடிய 14  அரிய திருப்புகழ்ப் பாடல்கள் இருக்கின்றன. 

சம்பந்தர் தேவாரம்

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும் ஏதம் இல்லையே.

( இரண்டாம் திருமுறை)

அப்பர் தேவாரம்
துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின்
என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க்

கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே.         (5ம் திருமுறை)

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
    எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
    சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
    திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே  (6ம் திருமுறை)


சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்  பாடல்

தந்தை தாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே      (7ம் திருமுறை )





CC BY-SA 3.0, https://ta.wikipedia.org/w/index.php?curid=49432

இங்கு அருணகிரியார் பாடிய  பாடல்கள் அருமையான பல விஷயங்களைச் சொல்கின்றன.

வி நாயகர்   நாமங்கள்
ஒரு பாடலில் வி நாயகரை அருமையாகப் போற்றுகிறார்.

குஞ்சர மாமுக விக்நப் ப்ரபு
அங்குச பாச கர ப்ரசித்தன் 
ஒர்கொம்பன்  மகோதரன் முக்கண் விக்ரம    கணராஜன்
கும்பிடுவார் வினை பற்றறுப்பவன் 
எங்கள்வி நாயகன் நக்கர் பெற்றருள்
குன்றைய ரூபகன் கற்பகப் பிளை   

இப்படிபட்டவருக்கு இளையோன் முருகன் உயர்ந்த கஜாரண்யத்தலத்தில் இருக்கிறான்.

துங்க கஜாரணியத்தி லுத்தம
சம்பு தடாகமடுத்த தக்ஷிண
சுந்தர மாறன் மதிட் புறத்துறை   பெருமாளே 

இதில் சுந்தர பாண்டியன் கட்டிய மதில் பற்றிய குறிப்பு வருகிறது.  இப் பாண்டியன் பற்றிய குறிப்பு சிதம்பரம் கல்வெட்டு ஒன்றில் இருப்பதால் இது கி.பி.1250ம் ஆண்டுவாக்கில் நடந்ததாக இருக்கலாம்.

பூஜை செய்யவேண்டும்

பூஜை செய்யாமல் வீணில் காலம் கழியலாமா என்று ஒரு பாடலில் வருந்துகிறார்.

அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதில் தாவிய
ஐந்தலை நாகப்  பூஷணர்   அருள் பாலா
அன்புடன் நாவிற் பாவது சந்தம் ஓதிப் பாதமும்
அங்கையினால் இனிப் பூசையும்    அணியாமல்......

ஏழைப் பாவியென்  அழிவேனோ
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை      பெருமாளே.

இந்தப் பாடலில்    திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தருடன் வந்து அவர் பாடலுக்கு யாழ்வாசித்தகுறிப்பு  வருகிறது.

இன்னொரு பாடலில் தனக்கு ஞான நெறிதனை அருளி ஜபம் தபம் ஆகியவற்றில் ஈடுபடுத்துமாறு வேண்டுகிறார்.
காமக்ரோத லோப மதமிவை  சிதையாத
பாவிக்காயு வாயு வலம் வர
லாலிப்பார்கள் போத  கரும
பாயத்தான  ஞான நெறிதனை      இனிமேல்
அன்பா லெக்காக யோக ஜெபதப
நேசித்தார வார பரிபுர
பாதத்தாளுமாறு திருவுளம் நினையாதோ

காம, க்ரோத, லோப, மதம் ஆகிய  துர்குணங்கள் நீங்காத பாவியான  தனக்கு, ஆயுளும், பிராணனும் வலிமை  பெறுமாறு,  அன்புள்ள பெரியோர்கள் (லாலிப்பார்கள்) அறிவுடன் கூடிய  நல்ல கர்மங்களின் உபாயத்தைக் காட்டும் ஞான வழியை   இனிமேல் இலக்காகக் கொண்டு, யோகம், ஜபம், தவம் ஆகியவற்றில் சிரத்தை வருமாறு செய்து, பேரொலி செய்யும் சிலம்பணிந்த  முருகனின் பாதத்தில் நிலைக்குமாறு  அருள்புரியவேண்டும் என வேண்டுகிறார். 

வராக அவதாரம்  

இதே பாடலில் ஒரு வரியில் ஒரு அரிய புராணச்செய்தியைச் சொல்கிறார்.

சீறல் ஏன பதிதனை
கோலக்காலமாக அமர்செய்த   வடிவேலா

ஏனம் என்பது பன்றி. ஏனபதி= ஆதிவராகம். திருமால் வராக அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷனை வதம் செய்து, பூமியைத் தூக்கி நிறுத்திய பிறகும் அந்த வராகத்தின் வெறி அடங்கவில்லை- ஏனெனில் அது அசுரனின் ரத்தத்தைக் குடித்திருந்தது! முருகன்  சீறிவந்த அந்த வராகம் கூக்குரலிடுமாறு அதனுடன் போர்செய்து, அதன்  வெறியை அடக்கி, அதன் கொம்பை சிவபிரானிடம் தர, அவர் அதை மார்பில் அணிந்தார். இந்தச் செய்தியை இங்கு சுருக்கமாகச் சொல்லிவிட்டார்  நம் நாதர்.
இதேபோல் நரசிம்ஹ அவதாரத்தின் கோபத்தை சரபேஶ்வரர் அடக்கியதாக புராண வரலாறு உண்டு.

அசட்டு யோகியும் சிவ யோகியும்!

ஒரு பாடலில் இந்த அனித்யமான ஊன் உடலை வளர்க்கும்    அசட்டு யோகி ஆகாமல் சிவயோகி ஆகவேண்டுமென அருள் வேண்டுகிறார்.

அனித்தமான  ஊனாளும் இருப்பதாகவே நாசி
அடைத்து வாயு வகை      சாதித்து
அவத்தில் ஏகுவாழ் மூலி புசித்த வாடும் ஆயாச
அசட்டு யோகி ஆகாமல்      மலமாயை
செய்த்த காரிய உபாதி ஒழித்து ஞான ஆசார
சிரத்தையாகி யான் வேறு என்      உடல்வேறு
செகத்தில் யாவும் வேறாக  நிகழ்ச்சியா மனோதீத
சிவச்சொருபமாயோகி             யென ஆள்வாய்.

இக்காலத்தில்  யோகா என்ற பெயரில் எதைஎதையோ செய்து கூத்தடிக்கிறார்கள். அந்த அறிவிலிகள் இப்பாடலைக் கருதவேண்டும்.

காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற்புகுதல்  மிக எளிதே விழி நாசிவைத்து
மூட்டிக் கபால மூலாதார  நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே

என்று அலங்காரத்தில் சொல்கிறார்.

ஸஹஸ்ர நாம கோபாலன்!

இந்தப்பாடலில் இன்னொரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார்.

தொனித்த நாதவேயூது  ஸகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத   மருகோனே

என்று பாடுகிறார். குழலூதும் கோபாலன் ஆயிரம் திரு நாமங்கள் கொண்டவர் 
என்கிறார்! நம் சமயத்தில் எல்லாகடவுளர்க்கும் ஆயிரம் திருநாமங்கள்-
ஸஹஸ்ரநாமம்- இருக்கின்றன. ஆனால் சஹஸ்ர நாமம் என்று பொதுவாகச் சொன்னால் அது விஷ்ணு  ஸஹஸ்ர நாமத்தையே குறிக்கும்.  அதுவே மிகப் பிரசித்தி பெற்றது! அதை நம் ஸ்வாமிகள் போற்றுகிறார்!

காலன்  வரும்போது கழலிணை மறவாதிருக்கவேண்டும்


ஒரு பாடலில் காலன் வரும்போது  முருகன் திருவடியை மறவாது இருக்கவேண்டும் எனப்பாடுகிறார்.

காலனுடல் போடத் தேடிவரு நாளில்
காலை மறவாமல் புகல்வேனோ

சம்பந்தராகவந்த முருகன்

இங்கு முருகனை "தமிழ் வேதச் சோதிவளர் காவைப்  பெருமாளே" என்று சொல்கிறார்.
இது தமிழ் வேதமாம் தேவாரப் பாக்களை அருளிய  ஜோதி மூர்த்தியே திருவானைக்காவில் பெருமாளே எனப் பொருள் படுகிறது. திருஞானசம்பந்தப் பெருமானைக் குறிக்கிறது! சம்பந்தராக வந்தது முருகவேளே என்பது அருணகிரி நாதரின் கொள்கை. சம்பந்தருக்குமேல் வேறு தெய்வம் இல்லை என்று கந்தரந்தாதியில்  29ம் பாடலில் சொல்கிறார்.



CC BY-SA 3,0 Wikimedia Commons


முருகன் வேண்டியதை அருளுவான் !

வேலாயுதனான முருகனை வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளுவான் என்று ஒரு பாடலில் சொல்கிறார் .

ஏலம் வைத்த புயத்தில் அணைத்தருள்
வேலெடுத்த சமர்த்தை யுரைப்பவர்
ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை  அருள்வோனே.

இது முருகனின் புராணப்புகழ். இதை புறநானூற்றில் சொல்லியிருக்கிறார் ஒரு புலவர். (பாடல்  56)
"முருகொத்தீயே முன்னியது முடித்தலின்"
முருகன் வேண்டியதைத் தருவான் என பலபாடல்களில் அருணகிரியார் சொல்லியிருக்கிறார்.
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே

வேண்டியபோது அடியர்  வேண்டிய போகமது வேண்ட
வெறாதுதவு பெருமாளே

வேண்டும் அடியர் புலவர் வேண்ட
அரிய பொருளை வேண்டும் அளவில்
உதவும் பெருமாளே
      
என்றெல்லாம் பாடியிருக்கிறார். ஆனால் கேட்பது நியாயமானதாக இருக்கவேண்டும் என்பது பக்தர்களுக்குத் தெரியும்!

இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்கவேண்டும். "புயத்தில் அணைத்தருள்  வேல்"  எ ன்று சொல்கிறார். முருகன் படத்தில் வேல் புயத்தில் சாய்ந்தவாறு இருக்கவேண்டும். வேலைக் கையில் பிடிப்பதாகக் காட்டுவது தவறு  என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

கண்டவரைப் பாடாதே !

பழந்தமிழ் நாட்டில் புலவர்கள் வறுமையில் வாடினர். கண்டபேரிடத்தும் சென்று அவர்களைப் புகழந்து பாடி பொருள் பெற விழைந்தனர். இந்த நிலை  தனக்கு நேரக்கூடாது என்று பாடுகிறார்.

உரைக்காரிகைப்பால் எனக்கே முதற்பேர் 
உனக்கோ மடல்கோவை ஒன்று பாட
உழப்பாதிபக்கோடு  எழுத்தாணியைத்தேடு
உனைப்பாரி லொப்பார்கள்             கண்டிலேன் யான்
குறைக்கான வித்யா கவிப்பூபருக்கே
குடிக்காண் முடிப்போடு கொண்டுவா பொன்
குலப்பூணி ரத்னாதி பெற்றூ செடுப்பாய்
எனக்கூறி     இடர்ப்பாடின்     மங்குவேனோ

இங்கு அக்காலத்தில் எழுத்தாணிக்கு யானைத்தந்தத்தில் பிடிபோட்டிருக்கும் விஷயம் சொல்லப்படுகிறது-  இபக்கோடு எழுத்தாணி !

முருகனே சம்பந்தர்

இந்தப் பாடலில் மதுரையில்  சம்பந்தர்  (இடையில் ஆடை கட்டாத )சமணர்களுடன் செய்த அனல்,புனல்  வாதங்களை முருகன் செய்ததாகச் சொல்லி, முருகனே சம்பந்தராக வந்ததார் என்ற தன் கருத்தை  வலியுறுத்துகிறார்.

அரைக்காடை சுற்றார்  தமிழ்க்கூடலிற்போய்
அனற்கே புனற்கே வரைந்த                 ஏடிட்டு
அறத்தாய் எனப்பேர் படைத்தாய் புனற்சேல்
அறப்பாய் வயற்கீழ்                 அமர்ந்தவேளே

இந்தப் பாடலின் கடைசி இரு அடிகளில்  திருஆனைக்காவின் புராணத்தைச் சொல்கிறார்.

திரைக்காவிரிக்கே கரைக்கானகத்தே
சிவத்யான முற்றார்          சிலந்தி நூல்செய்
திருக்கா வணத்தே இருப்பார் அருள்கூர்
திச்சாலகச்சோதி                 தம்பிரானே.

அலைகள் மிகுந்த காவிரியின் கரையில் இருந்த காட்டில் சிவத்தியானத்தில் இருந்த சிலந்தியின் நூலால் செய்யப்பெற்ற  அழகிய பந்தலின் கீழ் இருந்தவரும் அழகிய சிலந்தி வலைக்குக்கீழே விளங்குபவரான ஜோதியாம் சிவபிரானுடைய தலைவரே !  என்பது இதன் பொருள்,




By Ssriram mt - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=49752859

முருகனின் திருவடியே மோக்ஷ உலகம்!


முருகனின் திருவடியே மோக்ஷ உலகம். அதை அடைய இந்த்ரிய தாபங்கள் அடங்கவேண்டும். இதை ஒரு பாடலில் சொல்கிறார்.

ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது
மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை கிரியை புணர்ந்தவ    ரெவராலும்

ஓத அரிய துரியங்        கடந்தது
போத அருவ சுருபம்  ப்ரபஞ்சமும்
ஊனும் உயிரும் முழுதும் கலந்தது    சிவஞானம்;

சாலவுடைய தவர் கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமும் இலது அன்றி யன்பர்சொன வியோமஞ்

சாரும நுப  வரமந்த மைந்தமெய்
வீடு பரம சுக சிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்த நின் கழல்    பெறுவேனோ.

இது மிக அருமையான பாடல். ஆழ்ந்த பொருளுள்ளது.

வேதங்கள் குறிப்பால் உணர்த்தும் ஒப்பற்ற பொருள். ஞானாகாசத்தில் விளங்கும் பரஞ்சோதி. சொல்லப்படும் சரியை, கிரியை என்னும் மார்க்கத்தைப் பற்றியவர்கள் எவரும் ஓதுதற்கு அரியது; துரிய நிலையைக் கடந்து நிற்பது; அறிவு, வடிவமின்மை, வடிவம் உண்மை, உலகு, உயிர், உடல் இவை எல்லாவற்றிலும் கலந்து நிற்பது; சிவஞானம் நிறைந்த தவத்தினர் கண்டுகொண்டது; மூலப்பொருளாய் குறைவே இல்லாது நிறைந்து நிற்பது; ஜாதி, குலம் இவை இல்லாதது; ஞானாகாசத்தைச் சேர்ந்துள்ள அனுபவம் பெற்ற பெரியோர்கள் மனம் அடங்கி இருக்கும் மோக்ஷவீடாம் பரம சுகக் கடல் போன்றது- இவ்வளவு பெருமை வாய்ந்தது நின் கழல். இந்த்ரிய  தாபங்கள் ஒழிந்து அந்த உன் கழலைப் பெறுவேனோ.  

இதை வேறு ஒர்  இடத்தில் மிக எளிமையாச் சொல்கிறார்:

பிழையே பொறுத்துன் இருதாளில் உற்ற
பெருவாழ்வு பற்ற அருள்வாயே !

இருதாளில் உற்ற பெருவாழ்வு என்பதற்கு விளக்கமாக மேலுள்ள வரிகள் இருக்கின்றன!

அம்பிகையின் சிறப்பு !
முன்பு ஒரு பாடலில் விநாயகரை பல நாமங்களால் சிறப்பித்தது போல் இங்கு அம்பிகையைச் சிறப்பிக்கிறார்.

ஞாலமுதல்வி இமயம் பயந்தமின்
நீலி கவுரி  பரை மங்கை குண்டலி
நாளுமினிய கனி யெங்கள் அம்பிகை    த்ரிபுராயி

நாத வடிவி  அகிலம் பரந்தவள்
ஆலின் உதரமுள பைங்கரும்பு
வெணாவலரசு மனை வஞ்சி

 இன்னொரு பாடலில்

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மா நகர்        உறை பேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை உலகினை ஈன்ற தாய் உமை
கரிவனம் உறை அகிலாண்டநாயகி


என்று  பாடுகிறார், இப்படிப் பல இடங்களில் பாடியிருக்கிறார். இத்தகைய வாக்கு அருணகிரிநாதருக்கே உரியது!

ஸ்ரீரங்கத்தில் கோவிந்தன்!

ஆனைக்காவைப் பாடவந்த நம் நாதர் ஸ்ரீரங்கத்தில் அந்தணர்கள் கோவிந்தனைச் சேவிக்கும் அழகைச் சொல்கிறார்:

சுருதிய ஆறங்க வேள்வி அந்தணர்
ஹரிஹரி கோவிந்த கேசவ என்றிரு
கழல் தொழு சீரங்க ராசன்...

ராமாயண நிகழ்ச்சிகள் 

ஒரு பாடலில்  ராமாயணத்தில் கிஷ்கிந்தா, யுத்த காண்ட நிகழ்ச்சிகளை அழகாகச் சொல்கிறார்:

மறந்த சுக்ரிப மாநீசன் வாசலில்
இருந்து லுத்தன் நீயோராததேது சொல்
மனங்களித்திட லாமோ துரோகித  முன்புவாலி

வதஞ்செய்  விக்ரம சீராம  னானிலம்
அறிந்த திச்சரம் ஓகோ கெடாதினி
வரும்படிக்குரை யாய்பார் பலாகவ     மென்றுபேசி

அறந்தழைத்த நுமானோடு மாகடல்
வரம்படைத்ததின்  மேலேறி ராவணன்
அரண் குலைத் தெதிர் போராடு நாரணன்.......

  கார்காலம் முடிந்ததும் சேனையுடன் வந்து உதவுவேன் என்று  கூறியதை மறந்து சுக்ரீவன்  கள்ளுண்டு காலம் கழித்தான். ராமர் கோபம்கொண்டு லக்ஷ்மணனிடம்,  'வாலியைக்கொன்ற  வில் அம்பு இன்னும் இருக்கிறது என்று சொல்லி  சுக்ரீவன் மனதை அறிந்து வா" என்று அனுப்பினார். லக்ஷ்மணனை தாரையும்  ஹநுமாரும் சமாதானப்படுத்தி, சுக்ரீவன்  பெரிய சேனையுடன் வரச்செய்து பின் லங்கைக்குச் சென்று ராவண வதம் நிகழ்ந்தது. இந்த செய்திகளை இந்த வரிகளில் அழகாகச் சொல்லிவிட்டார், அருணகிரிநாதர்!

மேலும் ஒரு பாடலில் சொல்கிறார்:
முரணிய சமரினில் மூண்ட ராவணன்
இடியென அலறி  முன் ஏங்கி வாய்விட
முடிபல திருகிய  நீண்ட மாயவன்.

ராவணன் போர்க்களத்தில் இடிபோன்று அலறினானாம்; அதற்குமுன்பு கவலைப்பட்டானாம், வாய்விட்டு அழுதானாம்- இவ்வாறு செய்து அவனது தலைகளைத் திருமால் அரிந்து தள்ளினார் .
இங்கு "நீண்ட மாயவன்" என்பது  திருமால் வாமனாவதாரமெடுத்தபோது  மஹாபலியிடம் மூன்றடி மண்கேட்டு விஶ்வரூப மெடுத்து மூவுலகையும் அளந்த சரித்திரத்தைக் குறிப்பது.

முனிவர்களின் தவம்- உத்தம வேள்வி

ராமர் விஶ்வாமித்திரரின் யாகத்தைக் காத்தார் என்பது நாம் அறிந்ததே. அங்கு முனிவர்கள் எத்தகைய தவம் செய்தனர்? இதை ஒரு பாடலில் சொல்கிறார்:

காலைக்கே முழுகிக் குண திக்கினில்
ஆதித்யாய எனப்பகர் தர்ப்பண
காயத்ரீ ஜெப ம் அர்ச்சனையைச் செயும்    முனிவோர்கள்

கானத்தாசிர   மத்தினில் உத்தம
வேள்விச்சாலை ய்ளித்தல்   பொருட்டெதிர்
காதத்  தாடகையைக்கொல்  க்ருபைக்கடல் ....

இப்படி திருமாலின் பெருமையையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவார். 

இங்கு "உத்தம வேள்வி " என்று சொல்வதைக் கவனிக்க வேண்டும். வேள்வி தன் நன்மைக்காக, எதிரிகள் வாட எனப் பலகாரணங்களுக்காகச் செய்வார்கள். இவை  உத்தம வேள்வியாகாது. உலக நன்மை கருதிச் செய்வதே உத்தம வேள்வி. அதையே இங்கு முனிவர்கள் செய்தனர் என்பது கருத்து.

திருநீற்றான் மதில்

இந்தப்பாடலில்  "திரு நீறிட்டான் மதிள் சுற்றிய பொற்றிரு ஆனைக்கா" என்று குறிப்பிடுகிறார். இது திருவானைக்கா கோவிலில் நான்காவது மதிலைக்குறித்த ஒரு நிகழ்ச்சி. இது மிகப்பெரிய மதில் . இது கட்டப்பட்ட போது சிவபெருமானே ஒரு சித்தராக வந்து வேலக்காரர்களுக்கு திருநீற்றையே கூலியாகக் கொடுத்தார்.
அது அவரவர் உண்மையாகப் பாடுபட்ட அளவிற்கு பொன்னாக மாறியது! திருநீறே கூலியாகத் தரப்பட்டதால் அது திருநீற்றான் மதில் ஆயிற்று!

இப்படிப் பல விதத்திலும் சிறந்த பாடல்கள்  இத்தலத்திற்கு அமைந்திருக்கின்றன. பக்தர்கள் முழுதும் படித்து அருள் பெறவேண்டும்.














No comments:

Post a Comment