Thursday, November 29, 2018

6.திருப்புகழ்- 98.அத்திக்கரை,99.குறட்டி, 100.கந்தனூர்

6.திருப்புகழ். 98.அத்திக்கரை

து  புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளது. அருணகிரியார் தரிசித்த வரிசையில் 98வதாக வருவது. இதைப்பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. இங்குபாடிய ஒரு திருப்புகழ் இருக்கிறது.






முக்தி பெற 

தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
     சுற்றிக்கல னிட்டுக் கடிதரு
     சொக்குப்புலி யப்பிப் புகழுறு        களியாலே

சுத்தத்தைய கற்றிப் பெரியவர்
     சொற்றப்பிய கத்தைப் புரிபுல
     சுற்றத்துட னுற்றிப் புவியிடை      யலையாமல்
முக்குற்றம கற்றிப் பலகலை
     கற்றுப்பிழை யற்றுத் தனையுணர்
     முத்தர்க்கடி மைப்பட் டிலகிய           அறிவாலே

முத்தித்தவ சுற்றுக் கதியுறு
     சத்தைத்தெரி சித்துக் கரையகல்
     முத்திப்புண ரிக்குட் புகவர                மருள்வாயே


திக்கெட்டும டக்கிக் கடவுள
     ருக்குப்பணி கற்பித் தருளறு
     சித்தத்தொட டுத்துப் படைகொடு        பொருசூரர்

செச்சைப்புய மற்றுப் புகவொரு
     சத்திப்படை விட்டுச் சுரர்பதி
    சித்தத்துயர் கெட்டுப் பதிபெற           அருள்வோனே

அக்கைப்புனை கொச்சைக் குறமகள்
     அச்சத்தையொ ழித்துக் கரிவரும்
   
அத்தத்தில ழைத்துப் பரிவுட              னணைவோனே

அப்பைப்பிறை யைக்கட் டியசடை
     அத்தர்க்கரு மைப்புத் திரவிரி
    அத்திக்கரை யிச்சித் துறைதரு            பெருமாளே.



தொக்கைக் கழுவி  ........=    தோலை (உடலை)க் கழுவி, நல்ல ஆடையுடுத்தி, நகைகள் பூண்டு, வாசனைமிக்க நல்ல பூச்சுக்களைப் பூசும் மாதர்களைப் புகழ்ந்து, அதனால் வரும் களிப்பால்-
சுத்ததை அகற்றி ......=  பரிசுத்தத்தைக் கைவிட்டு, பெரியோர்கள் சொல்லும் புத்திமதிப்படி நடக்காமல். ஐம்புலன்களை அடக்காமல், அவை காட்டும் கெட்ட  வழியிலேயே போய், இந்தப் பூமியின் கண் நான் அலைச்சல் படக்கூடாது.
முக்குற்றமகற்றி............=  காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகைக் குற்றங்களையும் நீக்கி, பல நல்ல கலை நூல்களைக் கற்றுப் பிழையில்லாமல் தன்னை அறிந்த பரிசுத்த ஞானிகளுக்கு அடிமைபூண்டு, அத்தகைய  ஒழுக்கத்தால்
அறிவு விளக்கம் பெற்று,

முத்தித் தவசுற்று.........=  முக்தி அடையக்கூடிய தவநிலையைப் பெற்று. மோக்ஷம் தரக்கூடிய  மெய்ப்பொருளை உணர்ந்து, கரையில்லாத முக்தி என்னும் பெரும் கடலில் புகுமாறு வரம் தருவாயாக.

திக்கெட்டு மடக்கி .....=  எட்டுத் திக்குகளையும் அடக்கி, தேவர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரு பணியை விதித்து, கருணை என்பதே இல்லாத மனத்துடன்  படைகொண்டு போர் செய்த சூரர்களின்-

செச்சைப்புய மற்று.........= ரத்தத்தால் தோய்ந்த புயங்கள் அறுந்து விழச்செய்து, ஒப்பற்ற வேலைச் செலுத்தி, இந்த்ரனின் துயரத்தைத் தீர்த்து, அவன் தனது பொன்னுலகைப் பெறுமாறு அருளியவனே !

அக்கை புனை....... =  சங்கு மணியை அணிந்த இழிந்த குலத்தவளாம்  வள்ளியின் பயத்தை நீக்கி, யானை எதிரில் வந்த சிறு வழியில் அவளை மணந்தவனே !

அப்பைப் பிறை ....=  கங்கை நீரையும், பிறைச் சந்திரனையும் சடையில் தாங்கிய சிவபெருமானுக்கு அருமைப் புதல்வனே ! நன்கு விளங்கும் அத்திக்கரை என்னும் தலத்தில் விரும்பி அமர்ந்துள்ள பெருமாளே !

ஒவ்வொரு விஷயத்தையும் எத்தகைய அருமையான வாக்கால் பாடுகிறார் நம் நாதர்!

सत्संगत्वे निस्संगत्वं, निस्संगत्वे निर्मोहत्वं। 
निर्मोहत्वे निश्चलतत्त्वं, निश्चलतत्त्वे जीवन्मुक्तिः 


ஸத் ஸங்கத்வே  நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே  நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஶ்சல தத்வம்
நிஶ்சல தத்வே ஜீவன் முக்தி:

என்னும் ஆதிசங்கரரின் பஜகோவிந்தப் பாடலுக்கு அரிய விளக்கமாக இத்திருப்புகழ் அமைந்திருக்கிறது!

99. குறட்டி




இதுவும் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளது. அருணகிரி நாதர் தரிசித்த வரிசையில் 99வது தலம். இதைப்பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.
இங்கு பாடிய இரு திருப்புகழப் பாடல்கள் இருக்கின்றன. 

மாயை  ஒழிய

தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்ட னான
 ராவணன் மிகுத்த தானை         பொடியாகச்

சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி
  தாதுறை புயத்து மாயன்          மருகோனே

வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண
 மாபலி முதற்கொ ணாதன்           முருகோனே

வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ரீகை
 வாகுள குறட்டி மேவு             பெருமாளே.


மாயை
 சேர்தரு முளத்த னாகி           யுழல்வேனோ


[கூரிய கடைக்கணாலும் )
 இதில் முதல் இரண்டு வரிகளில் ராவணனை வதம் செய்த ராமரை மெச்சி அவருக்கு மருகனே என்று முருகனை அழைக்கிறார்.
மூன்றாவது வரியில் ஒரு புராணச் செய்தியைச் சொல்கிறார். ஒருகாலத்தில் தாருக வனத்தில் தவம்செய்திருந்த முனிவர்கள் கர்மத்தில் ஈடுபாடு உள்ளவராகி, தெய்வம் இல்லை என்னும் கருத்தினராயினர்.  சிவபிரானுக்கு எதிராக வேள்விசெய்து யானையை ஏவினர். சிவபிரான் அதன் தோலை உரித்து அணிந்தார். அந்த முனிவர்களுக்கு நல்லபுத்தி புகட்டுவதற்காக  திருமால் மோஹினியுருவில் தன்னுடன் வர, பிக்ஷாண்டிவேடத்தில் அவர்கள் இருக்குமிடம் சென்றார். மோஹினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தங்கள் தவ நிலையில் தவறினர். பிக்ஷாண்டியாக வந்தவரின் வனப்பில் மயங்கிய முனிபத்னிகளோ. தம் மன நிலை தவறி,  நாணம், கைவளை, ஆடை அகியவை நீங்கியவராயினர்! இங்கு இந்த சரித்திரத்தைச் சொல்கிறார். பின்னர் ஈசன் அவர்களுக்கு நற்புத்தி புகட்டினார்.  இச்செய்திகளை  ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் அடியாராகிய பெரும்புலவர் முகவை கண்ண முருகனார் பாடியிருக்கிறார். அதில் சில பாடல்கள்:

 தாரு வனத்தில் தவஞ்செய் திருந்தவர்
பூருவ கர்மத்தால்  உந்தீ பற
போக்கறை போயினர் உந்தீபற.

கன்மத்தை யன்றிக் கடவுள் இலையெனும்
வன்மத்த ராயினர்  உந்தீபற
வஞ்சச் செருக்கினால் உந்தீபற.
....... கன்ம பலந்தரும் கர்த்தர் பழித்துச் செய்
கன்ம பலங்கண்டார் உந்தீபற
கர்வ மகன்றனர் உந்தீபற.

இங்கு அருணகிரியார்  கச்சணிந்த  செல்வமகளிர் மதிலுடன் உப்பரிகையில் வாழும் அழகிய குறட்டி என்று வருணிப்பதால் அவர்காலத்தில் இது செல்வச் செழிப்புள்ள  சிறந்த இடமாக இருந்தது தெரிகிறது. இத்தகைய பதியில் வாழும் முருகன் தன்னை மாயையில் உழலவிடக்கூடாது என்று வேண்டுகிறார்.

பிறப்பு அகல

இந்தப்பாடலில் தான்  மீண்டும் பிறவியெடுத்து வீணில் உழலல் ஆகாது என வேண்டுகிறார்.

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
 நீள்குளிர் வெதுப்பு வேறு      முளநோய்கள்

நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
 நீடிய விரத்த மூளை           தசைதோல்சீ

பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
 பாய்பிணி யியற்று பாவை        நரிநாய்பேய்

பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
 பாழுட லெடுத்து வீணி            லுழல்வேனோ


நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத
 நாயக ரிடத்து காமி            மகமாயி

நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத
 நாயகி யுமைச்சி நீலி         திரிசூலி

வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
 

வாணுத லளித்த வீர             மயிலோனே

மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை
 வாகுள குறட்டி மேவு           பெருமாளே.


பிரம்மன் படக்கும் இந்த உடலாகிய வீடு  பல நோய்களுக்கு இடமாகிறது. இறந்த பின்பு நரி, நாய், பேய், கழுகு , பருந்து, கோட்டான் ஆகியவற்றுக்கு இரையாகிறது.
"ஆக்கைக்கே இரை தேடி அலமந்து  காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே  " என்று அப்பர் ஸ்வாமிகள் பாடுவார். இத்தகைய  பிறவி மீண்டும் வேண்டாம் என வேண்டுகிறார்.

நாரணி....வாணுதல் : இந்த வரிகளில் தனக்கே உரிய  அற்புத வாக்கால் அம்பாளின் நாமங்களை அழகாக அடுக்குகிறார். ( இதை முன்பும் பார்த்தோம்.) இங்கு 16 நாமங்கள்  -ஷோடஸ   நாமங்கள் = வரிசையாக வருகின்றன!  இப்படிப் பல இடங்களில் பாடியிருக்கிறார். சில இடங்கள் :

வேத வித்தகீ வீமா விராகிணி
 வீறு மிக்கமா வீணா கரேமக
 
மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ      யங்கராகீ

ஆதி சத்திசா மாதேவி பார்வதி
 நீலி துத்தியார் நீணாக பூஷணி
 ஆயி நித்தியே கோடீர மாதவி
ஆர்யை 

( வேத் வித்தகா சாமீ)
இங்கும் 16 நாமங்கள் வருவதைக் கவனிக்கவேண்டும்

ஆல கந்தரி மோடா மோடிகு
 மாரி பிங்கலை நானா தேசிய
 மோகி மங்கலை லோகா லோகியெ      வுயிர்பாலும்

ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி யம்பிகை ஞாதா வானவ
  ராட மன்றினி லாடா நாடிய               அபிராமி

கால சங்கரி சீலா சீலித்ரி
 சூலி மந்த்ரச பாஷா பாஷணி
 காள கண்டிக பாலீ மாலினி             கலியாணி

காம தந்திர லீலா லோகினி
 வாம தந்திர நூலாய் வாள்சிவ
 காம சுந்தரி 


( நாலிரண்டிதழாலே )

இங்கே 24 நாமங்களை அனாயாசமாக அடுக்குகிறார் ! இத்தகைய சொல்லாட்சியை வேறு எந்த நூலிலும் காணமுடியாது! வாக்குக்கு நம் அருணகிரிக்கு ஈடாகவோ, மேலோ யாரும் இல்லை!


இந்தப்பாடலிலும் கடைசி  அடியில்  மாடங்களும் மதில்களும், முத்து இழைத்த மேடான தளங்களும், கோபுரங்களும், நறுமணம் கமழும் சோலைகளும்  விளங்கும் அழகான குறட்டி என்பதால் அதன் செல்வச் செழிப்பு  தெரிகிறது.

100. கந்தனூர்.


ஞான பண்டித ஸ்வாமி

இதுவும் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. மேலும் விவரம் தெரியவில்லை. இது அருணகிரியார் தரிசித்த 100வது தலம். இதற்கான ஒரு பாடல் இருக்கிறது.

ஞானம் பெற

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
 மின்சரா சர்க்குலமும்                 வந்துலாவி

விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
 மிஞ்சநீ விட்டவடி                வங்களாலே

வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
 வந்துதா இக்கணமெ            யென்றுகூற

மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி
 வந்துசே யைத்தழுவல்       சிந்தியாதோ


அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
 மங்கிபார் வைப்பறையர்        மங்கிமாள

அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்


 அண்டரே றக்கிருபை           கொண்டபாலா

எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
 எந்தைபா கத்துறையு            மந்தமாது

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
 எந்தைபூ சித்துமகிழ்                   தம்பிரானே.




விந்து பேதித்த .... = சுக்கிலம் இந்த உலகில்  அசையும்-அசையாப் பொருள்களாக  கூட்டமாய்  பலவித உரு எடுக்கிறது.
விண்டுபோய் விட்ட ....... = உரிய காலம் கடந்ததும் உடல் அழிந்து போகிறது, இதை மனது அறியும். இப்படி நீ எனக்கு அளிக்கும் பலவித உருவுள்ள  பிறப்புக்களில்-

வந்து நாயிற் கடைய........= நாயினும் கீழ்ப்பட்டவனாய் மனம்  நொந்து.  ஞான நிலையை இந்தக் கணமே  வந்து கொடு என்று உன்னிடம் வேண்டும்போது-
மைந்தர் தாவிப்புகழ..........= குழந்தைகள் தாய்தந்தையைச் சூழ்ந்து அவர்களைப் புகழ்ந்தால், அவர்கள் மகிழ்ச்சி கொண்டு அக்குழந்தைகளைத் தாவி அணைப்பார்கள் என்பதை நீ சிந்திக்க மாட்டாயோ? ( நீ  சற்று நினைக்கக் கூடாதா!)

அந்தகாரத்திலிடி.......= அடர்ந்த இருளில் இடி இடிப்பதுபோல் கூச்சலிட்டு வரும் தீப்போன்ற கண்களையுடை  அசுரர்கள் மாண்டுபோக,
அங்கைவேல்............=  அழகிய கையினால் வேலைவிட்டு  அருளி, இந்த்ர லோகத்தில் தேவர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் குடியேற அருள் செய்த  குமரனே !
எந்தனாவிக்கு....= என் உயிருக்கு உதவி புரிந்தவரும்,  சந்திரனைச் சடையில் தாங்கியவரும், எந்தையும் ஆன சிவபெருமானும், அவரது இடது பாகத்தில் அமர்ந்த பார்வதி தேவியும் ஆகிய இருவரும்,
எங்குமாய்..........= எங்கும் நிறைந்து  நிற்கும் ஒப்பற்ற  கந்தனூரில்  சக்தி புகழும் எந்தை சிவபிரான் பூஜித்து மகிழ்ந்த தம்பிரானே !
நீ ஞானத்தை  அருள வேண்டும்!

அறுமுகவேளே நமோ நமோ !






No comments:

Post a Comment