Wednesday, November 28, 2018

4.திருப்புகழ் -95. தவத்துறை

4.திருப்புகழ் -95. தவத்துறை


பழைய இஞ்சினைக் கண்டு மகிழ்வோம்.
வத்துறைக்கு  இன்று லால்குடி என்று பெயர்..  தபஸ்தீர்த்தபுரம் என்பது புராணப்பெயர். ஸ்ரீபுரம் என்ற பெயரும் இருந்ததென்பது தெரிகிறது..இது அருணகிரிநாதர் தரிசித்த 95வது  ஸ்தலமாகும். இது ஸப்தரிஷிகள் வழிபட்டதலமானதால் ஸ்வாமிக்கு  ஸப்தரிஷீஶ்வரர் என்பது திருநாமம். அம்பாள் ப்ரவ்ருத்த ஸ்ரீமதி, மஹாசம்பத் கௌரி..சிவகாமசுந்தரி என்றும் சிலர் சொல்கின்றனர். புராணவரலாறு இருந்தும் பாடல்பெறவில்லை.அப்பர் தேவாரத்தில் வைப்புத்தலமாக வருகிறது. 


கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு
 சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
 பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
 பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறையா வடு
 துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோம்
[ஆறாம் திருமுறை ] 

இங்கு ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் ஐந்து கீர்த்தனைகள்- பஞ்சரத்னம்- பாடியிருக்கிறார். ஸ்வாமிபேரில் இரண்டும், அம்பாள் மீது மூன்றுமாக ஐந்து அருமையான கீர்த்தனைகள். இப்பதி பூலோக கைலாசம் என்பது உண்மையெனத் தெரிந்துகொண்டேன் எனப் பாடுகிறார். ஸப்தரிஷீஶ்வரர், ப்ரவ்ருத்த ஸ்ரீமதி என்றே ஸ்வாமி, அம்பாள் நாமங்களைச் சொல்கிறார்.



Rajagopuram of Saptarishiswara temple/
Pic. from http://www.tamilonline.com/thendral/



இங்கு அருணகிரி நாதர் இரு பாடல்கள் பாடியிருக்கிறார். இரண்டிலும் பெண் மயல் நீங்கவேண்டும் என  வேண்டுகிறார்.

வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
  பூதக ணம்பல நிர்த்த மிட்டிட
 வேகமு டன்பறை கொட்டி டக்கழு       கினமாட

வீசிய பம்பர மொப்பெ னக்களி
 வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்
 வேதப ரம்பரை யுட்க ளித்திட                வரும்வீரா


சீரணி யுந்திரை தத்து முத்தெறி
 காவிரி யின்கரை மொத்து மெத்திய
 சீர்புனை கின்றதி ருத்த வத்துறை         வரும்வாழ்வே

சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
 மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
  தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள்      பெருமாளே.


  பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட           அருள்வாயே

[காரணியுங்குழலை]


வீசிய பம்பரம் போன்று சிவபிரான் நடனமாடினார் என்கிறார். இது அவர் ஆடிய நடனத்தின் வேகத்தைக் குறிக்கிறது! ஆனால்  அப்போதும் மகிழ்ச்சி பொங்குகிறது- அது ஆனந்த  நடனம்!
அம்பாளை "வேத பரம்பரை"= வேத முதல்வி என்கிறார். 
 இப்படி தேவேந்திர சங்க வகுப்பிலும் சொல்வார் : " நடம் நவில்  சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை."
முருகன் அவதாரம் தேவர்களின் சிறையை நீக்கி, அவர்கள் மீண்டும் தம் இடமான அமராவதியைப் பெறச்செய்வதற்காக  நிகழ்ந்தது.  இதை அனேகமாக ஒவ்வொரு பாடலிலும் சொல்கிறார்.  : "அண்டர் பதி குடியேற மண்டசுரர் உருமாற  அண்டர் மன மகிழ்மீற ","வானவர் பொருட்டும் மகவானது பொருட்டும் மலர் வாவியில் உதித்த முக மாயக்காரனும்" ( திருவேளைக்காரன் வகுப்பு), "அமரர் சிறை மீட்ட பெருமாளே" என்றெல்லாம் பாடுவார்.

  தேவர்கள் தம் சிறையை வெட்டி விட்டு அருள்செய்த பெருமாளே. பெண்கள் மயக்கையும் என்னிடமிருந்து வெட்டிவிடு என வேண்டுகிறார்!

வரைத்த நுக்கரர் மாதவ மேவின
 ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு
 மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய        வடிவேலா

மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ
 ருரைத்து ளத்திரு வாசக மானது
 மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய          மணிமாடத்

திரைக்க டற்பொரு காவிரி மாநதி
 பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி
  செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை     குவையாகச்


செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்
 வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி
 திருத்த வத்துறை மாநகர் தானுறை         பெருமாளே.


மாதர்கள்
 வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன
 கழற்று தித்திடு வாழ்வது தான்மன           துறமேவிக்


கதித்த பத்தமை சாலடி யார்சபை
 மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்
 கதிக்க டுத்துயர் வாகவு மேயரு               ளுரையாதோ


[நிரைத்த நித்தில]


வரைத்த தனுக்கரர் =  மேரு மலையையே வில்லாக கரத்தில் ஏந்தியவர்,
மா தவர்  அகத்தினில் வாழ் சிவனார்=  பெரிய தவசிகளின் உள்ளத்தில் உரைகின்றவராகிய சிவபிரானின் திருச்செவியில்  மெய்ஞானத்தை ஓதினார் முருகன்.  தந்தைக்கு முன்னம் தனிஞான வாளொன்று சாதித்தருள் என்று கந்தரலங்காரத்தில் சொல்கிறார்.

அடுத்து முருகன் பதியான வயலூரின் பெருமையைச் சொல்கிறார்.
முத்தமிழையும் ஆராய்ந்த போற்றத்தக்க பெரியோர்கள்அழகிய உபதேச மொழிகளை  அடியார்களின் மனதில் தங்கும்படி உரைக்கின்ற அழகிய புகழ் மிக்க  மணி மாடங்களை உடையது செய்ப்பதியாகிய வயலூர்.
இங்கு கடல்போல அலையுடன் பொங்கிப்பெருகும் காவிரியின்  வெள்ளத்தால் விளையும் செழிப்புள்ள நெல்வகைகள்  குவிந்து கிடக்கும். இதுவே முருகன் வாழும் வயலூர்ப்பதி. இவர் திருத்தவத்துறையிலும் விளங்குகின்றார். இங்கு அறம்வளர்த்த நாயகி,, நித்ய கல்யாணியான பார்வதி தேவி உறைகிறார்.

அம்பாள்  முப்பத்தி இரண்டு அறங்களை வளர்த்தது காஞ்சியில் .ஆனால்  இவற்றை ஈசன் கொடுத்த இரு நாழி நெல்லைகொண்டே செய்தார்.  வயலூரின் நெல்வளத்தைச் சொல்லும்போது, நெல்லைக்கொண்டு அறம் வளர்த்த அன்னையின் நினைவு வர அதை இங்கே சொன்னார் போலும்!

பெரியோர்கள் உலகத்தில் காணும் சிறுமைகளையெல்லாம் தம்மேல் ஏற்றிச் சொல்வார்கள். ( இல்லாத பெருமையையும் நாம் பேசிக்கொள்வோம்!) முருகனுடைய திருவடியைத் துதிக்கின்ற  அடியார்கள்  கூட்டத்தை தான் இழிவுபடுத்திப் பேசியதாகச் சொல்லிக்கொள்கிறார். இப்படிப்பட்ட தனக்கும் மேன்மையடைய ஒருமொழி உபதேசம் செய்ய  அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொள்கிறார்.
இவை இரண்டும் எளிய பாடல்கள்.



No comments:

Post a Comment