17.திருப்புகழ் 121. கீரனூர்
கொண்டலிறங்கி கீரனூர் மலை! இங்கிருந்து பழநி தெரியும்!
நன்றி : http://www.seithipunal.com
அருணகிரிநாதர் ஊதிமலையிலிருந்து கீரனூருக்கு வருகிறார். இது இவர் தரிசித்த 121வது தலம். இது தாராபுரம்-பழனி வழியில் இருக்கிறது. இங்கு ஒரு பாடல் இருக்கிறது.
பார மேருப ருப்பத மத்தென
நேரி தாகஎ டுத்துட னட்டுமை
பாக ராரப டப்பணி சுற்றிடு கயிறாகப்
பாதி வாலிபி டித்திட மற்றொரு
பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி
பாரி சாதமு தற்பல சித்திகள் வருமாறு
கீர வாரிதி யைக்கடை வித்ததி
காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
பாளு வாகிய பச்சுரு வச்சுதன் மருகோனே
கேடி லாவள கைப்பதி யிற்பல
மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய
கீர னுருறை சத்தித ரித்தருள் பெருமாளே.
தோதக வித்தைகள் கற்பவ ருறவாமோ
(ஈரமோடு சிரித்து )
கனத்த மேரு மலையை மத்தாகத் தேர்ந்தெடுத்து, உடனே அதைப் பாற்கடலில் நாட்டி, உமையைப் பாகமாக உடைய சிவபெருமானது கழுத்தில் மாலையாக விளங்குவதும், படங்களைக்கொண்டதுமான (வாசுகியாகிய ) பாம்பை அந்த மத்தில் கயிராகச் சுற்றி,
ஒரு பாதியை வாலி பிடிக்க, மற்றொரு பாதியை தேவர்கள் பிடிக்க, லக்ஷ்மி, பாரிஜாதம் முதலிய சித்திகளும், அரிய பொருட்களும் ( அப்பாற்கடலிலிருந்து) வெளிவர,
பாற்கடலைக் கடையவைத்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தருளிய க்ருபாமூர்த்தியாகிய பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகனே !
கேடில்லாத குபேரனுடய அளகாபுரியைப்போல பல மாடக்கூடங்களும் மலர்ச்சோலைகளும் நிறைந்த கீரனூரில் அமர்ந்து வேல் ஏந்தி அனைவருக்கும் திருவருள் புரியும் பெருமாளே !
வஞ்சனை வித்தைகள் கற்றுள்ள விலைமகளிர் உறவு நல்லதாகுமா? (ஆகாது )
பாற்கடலைக் கடைந்தது
அருணகிரியாரின் அருமை வாக்கிலிருந்து வரும் அமுதப் பாடல். பாற்கடலைக் கடைந்த பாகவத நிகழ்ச்சியை அருமையாக விவரிக்கிறார். திருமால் பாற்கடலிலிருந்து வந்த அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்தார். ஆனால், பாற்கடலிலிருந்து முதலில் வந்தது ஆலகால விஷம் ! இதைச் சிவபெருமான் அருந்தவில்லையெனில், அமுதம் தேவர்களுக்குக் கிடைத்திருக்காது! சிவபெருமான் அந்த விஷத்தைப் பருகும்போது அதைக் கண்டத்திலேயே தடுத்து நிறுத்தியது உமாதேவியார் ! இந்த விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல், "உமை பாகர் " என்று சுருங்கச்சொல்லி அசத்துகிறார் ! மேலும் சிவபிரான் விஷப்பாம்பையே மாலையாக அணிந்துள்ளார். வேறு விஷம் அவரை என்ன செய்துவிடும் என்ற குறிப்பும் இருக்கிறது!
பொது மகளிர்
இப்பாடலில் முதல் நான்கு அடிகள் (இங்கு தரவில்லை)பொது மகளிர் பற்றியது. இப்படிப் பல பாடல்களில் இருக்கும். இதை அருணகிரி நாதரின் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். இது தவறாகும். தமிழ் நாட்டில் பரத்தையர் வழக்கம் பொதுவாக இருந்தது. இதைச் சங்க இலக்கியத்தில் காணலாம். இதைக் கண்டித்து எழுதியவர் திருவள்ளுவர். பிறனில் விழையாமை, வரைவின் மகளிர் என்று இரு அதிகாரங்களை வகுத்து கண்டித்திருக்கிறார். நமது சமய இலக்கிய மரபில் பெரியோர்கள் உலகில் உள்ள எல்லாக் குற்றங்களையும் தம்மீதே ஏற்றிச் சொல்வார்கள். தம்மையே நாயேன், பேயேன் என்றெல்லாம் சொல்லிகொள்வார்கள். இதை வைத்து அவர்கள் கெட்டவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது. வள்ளுவரைப் பின்பற்றி அருணகிரிநாதரும் இவ்வழக்கத்தைக் கண்டிக்கிறார்.
கீரனூர் மலை : மற்றொரு தோற்றம். குன்றெல்லாம் குமரன் தானே!
நன்றி : http://www.seithipunal.com
122.ஆய்க்குடி
கீரனூரிலிருந்து அருணகிரிநாதர் ஆய்க்குடிக்கு வருகிறார். இது 122வது தலம்.
ஆய்க்குடி தென்காசிக்கு அருகில் உள்ளது என்று தணிகைமணி அவர்கள் எழுதியிருக்கிறார், ஆனால் இது சரியெனத் தோன்றவில்லை. இதுவரை அருணகிரியார் கொங்கு நாட்டுத் தலங்களைப் பார்த்து வருகிறார். அடுத்து தரிசிப்பது பழநி- அதுவும் கொங்கு நாட்டில் உள்ளது. அதனால் இங்கு குறிப்பிடும் ஆய்க்குடி தென்காசி ஆய்க்குடியாக இருக்க முடியாது. இனி,
பழநிக்கு அருகிலும் ( 4 கிமீ ) ஒரு ஆயக்குடி இருக்கிறது. இது ஆவியர் என்ற ஒரு பிரிவினர் ஆண்ட பகுதி ( மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் இக்குடியைச் சேந்தவன் ) அதனாலேயே பழநி அடிவாரத்திலிருக்கும் ஊர் "ஆவினன் குடி " எனப்படுகிறது. அருணகிரியார் அடுத்துப் பாடிய தலம் பழநி என்பதால் இந்த ஆயக்குடியையே நாம் இங்கு குறிப்பிட்ட தலமாக
எடுத்துக்கொள்ள வேணும்.
பழநி மலைத்தொடரின் ஒரு காட்சி- விக்கிபீடியா
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
மாப்புடைத் தாளரசர் பெருவாழ்வும்
மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
வாழ்க்கைவிட் டேறுமடி யவர்போலக்
கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக்
கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
கூத்தினிப் பூரையிட அமையாதோ
தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பாரவுநிள் கழல்தாவிச்
சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
தாழ்க்கவஜ் ராயுதனு மிமையோரும்
ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
மாய்க்குடிக் காவலவு ததிமீதே
ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை
ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே.
வாள்வீச்சினால் சேனைகளை வெருட்டி ஓட்டி அதனால் இறுமாப்படைந்த முயற்சியுடைய அரசர்களின் பெரிய வாழ்வும்,
ஒரு நொடிப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகும் என்பதை நினைத்து, இல்லற வாழ்க்கையைத் துறந்து கரையேறும் அடியார்களைப்போல,
ஒரு உயர்ந்த குறிக்கோளுடன் வாழவும், உனது பாத மலரைத் தரிசித்து இளைப்பாறவும்,
வினைவசத்தால் அலையும் இத்தேகமாகிய உருவத்திற்கு பலவிதமான அலங்காரங்களைச் செய்து, துன்பங்களில் சிக்கித்தவிக்கும் இந்த வாழ்க்கை என்னும் கூத்து இனி முடிவே பெறாதோ ?
கால் பட்டாலே கோபித்துச் சீறும் விஷப்பாம்பு போல, பாலன் மார்க்கண்டேயனைக் குறிவைத்து எமன் தொடரவும்,
தமது நீண்ட திருவடியை நீட்டி, பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கோர உருவுடைய எமனை உதைத்த சிவபெருமான்
உன்னிடம் உபதேசம் பெறுவதற்காக தமது திருமுடியைத் தாழ்த்தி வணங்க,
வஜ்ரப்படையுடைய இந்த்ரனும் தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்கவும்,
பொன்னிறமான பிரம்மனைச் சிறையிலிட்ட ஆய்க்குடியின் அரசனே !
இந்த உலக வாழ்க்கை என்னும் கூத்து முடியாதோ?
யாக்கை நிலையாமை
இங்கு யாக்கை நிலையாமையை உணர்ந்து தெய்வ நினைவைப் பற்றவேண்டும் என்று உபதேசிக்கிறார்.
"மாத்திரைப் போதில்..போம்" = இந்த உடல் அழியக்கூடியது.
"அல்லின் நேரும் மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை" என்பார். இரவில் தோன்றி மறையும் மின்னல் போல இந்த உடலும் மறைந்துவிடும்.
வினை கோத்த மெய் = இந்த உடல் நம் முன்வினையால் அதற்கேற்ப வருவது. "விதி காணும் உடம்பு " என்பார் அநுபூதியில்.
" வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்
வினைதானொழிந்தால் தினைப்போதளவும் நில்லாது கண்டாய் "
என்பார் பட்டினத்தார்.
எமனுக்குக் கோபம் ?
எமனுக்குக் கோபம் வருமா? குறித்த காலத்தில் வந்து உயிரைப் பறிப்பது எமனுடைய தொழில். இதில் அவனுடைய சொந்த விருப்பு-வெறுப்புக்கு இடமில்லை. எமனுக்குத் தர்மராஜா என்றும் பெயர் ! ஆனால் எமன் கோபத்துடன் கண்கள் சிவக்க வருவதாகப் பாடுவது மரபு. இது உயிர் பிரியும் நேரத்தில் விளையும் துன்பத்தைக் குறித்துச் சொல்வது.
"முதலவினை முடிவில் இரு பிறை எயிறு கயிறு கொடு
முது வடவை விழி சுழல வரு கால தூதர் " என சீர்பாத வகுப்பில் சொல்வார்.
"கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிருகு கயிரொ டுயிர்கள் கழிய முடுகி எழுகாலம் "
என ஒரு பாடலில் சொல்வார்.இப்படிப் பல பாடல்களில் பாடியிருக்கிறார். வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து தெய்வத்தைப் பற்றவேண்டும் என்பதே நோக்கம். இந்த உலகத்துடன் நமது தொடர்பு இந்த உடலைப் பற்றி அமைந்ததே.. உடல் நிலையில்லாதது என்பதால் இந்த உலகத்துடனான தொடர்பும் நிலையற்றதே. நம் உயிருக்குள்ள தொடர்பு இறைவனுடனானது, இதற்கு முடிவே இல்லை! இதைத்தான் அருணகிரி நாதர் வலியுறுத்துகிறார்.
"ஆவிக்கு மோசம் வருமாறறிந்துன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினை தீர்த்தருளாய் " என்று அலங்காரத்தில் சொல்கிறார்.
பிறவி என்னும் கடல்
"பாரி வரு கூத்து " = வளர்ந்து வரும் ஆட்டம்.இந்த உலக வாழ்க்கை ஒரு கூத்து போன்றது.இது பல பிறவிகளில் தொடர்ந்து வருவது. வினை தீராத வரை இந்தகூத்தும் முடிவுபெறாது.
"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர்ப்பிறவி அவதாரம் ". நாம் எடுத்த பிறவிகளுக்குக் கணக்கே இல்லை!
இதற்குத் தீர்வு இறைவன் கழலைப் பற்றுவதே. இதைத்தான் பலவிதங்களில் சொல்கிறார் அருணகிரிநாதர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
-திருக்குறள் : கடவுள் வாழ்த்து.
மெய்யுணர்தல் என்னும் அதிகாரமும் பார்க்கவும்.