Friday, November 30, 2018

7.திருப்புகழ். 101.விராலிமலை

7.திருப்புகழ். 101- விராலிமலை
பொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்
 புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்

ருணகிரி நாதர் தரிசித்த 101வது தலம் விராலிமலை. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. இதற்கு சொர்ணவிராலியங்கிரி என்ற பெயரும் உண்டு. இது பழந்தமிழ் நாட்டில் 'கோனாடு' என்ற பகுதியைச் சார்ந்தது.  இது சீலம் மிக்க பெரியவர்கள் வாழும் ஊர் என்பார் அருணகிரியார்.

கோடாச் சிவ பூஜை பௌருஷம்
ஆறாக்கொடை நாளும் மருவிய
கோனாட்டு விராலிமலை.


ஷண்முகநாதர் வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலிக்கும் இடம். ஒரு காலத்தில் மயில்கள் மிகுந்திருந்த இந்த இடத்தில் இன்று மயில்களின் தொகை வெகுவாகக் குறைந்து வருகிறது.

முருகன் விராலிமலைக்கு அழைத்தது !

அருணகிரிநாதர்  வயலூரில் இருந்தபோது முருகப்பெருமான் அவரது கனவில் வந்து அவரை விராலிமலைக்கு வரும்படிச் சொன்னார். இதை நாதரே பல பாடல்களில் பாடியிருக்கிறார்.

சோலைபுடை சுற்று வயலூரா!
தானரியில் மட்டு வாசமலரொத்த
தாளிணை நினைப்பில் அடியேனை........
விராலி மலையில் நிற்பம் நீ கருதியுற்று
வா வா என அழைத்து என் மனதாசை
மாசினை யறுத்து ஞானமுதளித்த
வாரம் இனி நித்தம் மறவேனே

என்று வயலூர் பாடல் ஒன்றில் கூறினார்.

இந்தத் தலத்தில் 16 அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார்.

திருவுருவத்யானம்

சீரான கோல கால நவமணி
     மாலாபி ஷேக பார வெகுவித
     தேவாதி தேவர் சேவை செயுமுக        மலராறும்

சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளு நீளும் வரியளி
    சீராக மோது நீப பரிமள             இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
     ஜீமூத மூர்வ லாரி மடமகள்
    ஆதார பூத மாக வலமிட                முறைவாழ்வும்


ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
     ஞானாபி ராம தாப வடிவமும்
     ஆபாத னேனு நாளு நினைவது          பெறவேணும்


இப்பாடலில் தான் எத்தகைய உருவத்தை தியானம் செய்யவேண்டும் என்கிறார்.
சீரானதும், நவமணிகள் பதிக்கப்பெற்று கம்பீரமாயுள்ளதும், பெருமை பொருந்தியதுமான  கம்பீரமான கிரீடங்களின் பாரம் தாங்கப்பெற்றதும், பல தேவாதிதேவர்கள் சேவிக்கின்றதுமான ஆறு முகமலர்களையும்,
சிறப்புற்று ஓங்கும் வீரலக்ஷ்மி விளங்கும் பன்னிரு தோள்களையும், நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள்  ஸ்ரீராகம் பாடும் கடப்ப மலரின் வாசனை வீசும் இரு திருவடிகளையும்,
முடிவிலாத ஆசைகொண்ட வேடர் மடமகள் வள்ளியும்,  மேகத்தை வாகனமாகக் கொண்டுள்ள இந்த்ரன் மடமகள் தேவசேனையும் பக்தர்களின் பற்றுக்கோடாக முறையே உனது வலது, இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,
ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும், மயிலையும், மெய்ஞான சொரூபமான  அழகிய கீர்த்தி பெற்ற  உனது திருவடிவையும், மிகவும் கீழ்ப்பட்டவனான நானும் தினமும் தியானம் செய்யும்படியான  பேற்றைப் பெறவேண்டும் என வேண்டுகிறேன்! 
இது மிக அருமையான தியானப் பாடலாகும்.

இந்தப்பாடலில் மஹாபாரத நிகழ்ச்சியொன்றைச் சொல்கிறார்.

கூராழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மாறு பானு மறைவுசெய்
கோபால ராயன்.......

இது பாரதப்போரில் 14ம் நாளன்று சூரியனைத் தன் சக்கரத்தால் மறைத்து, அஸ்தமனம் போலாக்கி, அர்ஜுனன் தன் சபதப்படி ஜயத்ரதனை மாய்க்கச்செய்து, அர்ஜுனன் உயிரைக் காத்ததைச் சொல்கிறது. இதையே முதல் திருப்புகழான முத்தைத்தருவிலும் ,
"பட்டப் பகல் வட்டத்திகிரியில் இரவாகப் 
பத்தர்க்கு ரதத்தைக் கடவிய  பச்சைப் புயல்"
என்று சொன்னார்.





மனோலயம் பெற்று சமாதி நிலை அடைய 

இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
   ரியாவரு மிராவுபக        லடியேனை

இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
   மிலானிவ னுமாபுருஷ            னெனஏய

சலாபவ மலாகர சசீதர விதாரண
   சதாசிவ மயேசுரச              கலலோக

சராசர வியாபக பராபர மநோலய
   சமாதிய நுபூதிபெற          நினைவாயே


வீணான, பொல்லாத உரைகளைச் சொல்லாத மனமுடைய தபோதனர்கள்  யாவரும்,  இரவும் பகலும் அடியேனைக் குறித்து,
'இவன் ஆசை இல்லாதவன்,களியாட்டங்களில் ஈடுபடாதவன், உலோபக்குணமும் மோகமும் இல்லாதவன், இவனும் ஒரு சத் புருஷன்' என்று சொல்லும்படியாக,
இனிய குணத்துடன், பரிசுத்தமான, சந்திரனைத் தரித்த, கருணை நிறைந்த, சதாசிவ மகேஶ்வர நிலையதாய்,
சகல உலகத்திலும்  சரம்-அசரமாக உள்ள அனைத்திலும் கலந்ததாக, பரம்பொருளாக உள்ள  மனம் ஒடுங்கிய சமாதி அநுபூதி நிலையை  அடியேன் பெற நீ  நினைக்குமாறு  வேண்டுகிறேன்.

முக்தி நெறி  தெரிய

உனதருள் கைவர
உயர் பக்தி வழியும் பரம முக்தி நெறியும்
தெரிவ தொரு நாளே !

இங்கு மயிலின் பராக்ரமத்தை விவரிக்கிறார்:

வெளி முகடுருவ  உயர்தரு சக்ரகிரியுங் குலைய
விக்ரம நடம்புரியும் மரகத கலப எரிவிடு மயில்

இது மயில் விருத்தத்தில் வரும் பாடலை நினைவுபடுத்துகிறது.

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
   பட்டுக் ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
   தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
   சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
   திடுக்கிட நடிக்கு மயிலாம்


இந்தப் பாடலில் வயலூரில்  தான் திருப்புகழ் பாடும்போது முருகன் தந்த அதிசய தரிசனத்தைப் பற்றிச் சொல்கிறார்.

திருவயலியில் அடிமைய குடிமையினலற
மயலொடு மல மற  அரிய பெரிய 
திருப்புகழ் விளம்பு  என்றழனற்புத  மெழுந்தருள் குக
விராலி மலையுறை குரவ நலிறைவ  

யார் உண்மையான குரு?

உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
 யுடனாக ஆக மத்து              கந்துபேணி

உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
 யொழியாது வூதை விட்டி           ருந்துநாளும்

தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
 தருவார்கள் ஞான வித்தை          தஞ்சமாமோ

தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
 தருமாகி லாகு மத்தை             கண்டிலேனே


குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
 குடிமாள மாய விட்டு                குந்திபாலர்

குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
 குறளாக னூறில் நெட்டை        கொண்டஆதி

மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
 மலைமே லுலாவு சித்த         அங்கைவேலா

மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
 வளைகூனை யேநி மிர்த்த                 தம்பிரானே.



அதிக ஜபம் செய்து, கோடிக்கணக்கில் ஹோமம் செய்து சித்திகள் வரப்பெற்று, ஆகம விதிகளை மகிழ்ச்சியுடன் அனுசரித்து, யாரிடத்திலும் அறிதலும் ஆசையும்  பொருந்த வைக்காமல், ப்ரணவத்தை எப்போதும் ஓதி,  முறைப்படி பிராணாயாமம் செய்தவராயினும், நிலைத்த ஞானமில்லாத சிலர் குரு வெனும் ஸ்தானத்தில் இருந்து ஞானோபதேசமும் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யும்  உபதேசம்  புகலாகுமா ? ஆகாது..
நெற்றியில் புருவமத்ய ஸ்தானம்  ஒளிமிக்க  பெரு ஞான சித்தியைக் கொடுக்குமென்றால் அதை நான் காணவில்லையே!

இங்கு  குருவைக்கொள்ளும் விஷயத்தில் ஜாக்ரதையாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்.  இதை திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்:

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.







இந்தப் பாடலின் பின் பகுதியில் மஹாபாரத, பாகவத  நிகழ்ச்சிகளை ரசமாகச் சொல்கிறார்.

குரு நாட்டை ஆண்ட துரியோதனாதியர் கூட்டத்தின் குடி அழியும்படி மாயச்செயல்களைச் செய்து, குன்தி தேவியின் குழந்தைகள் அழியாமல் காத்து, நீதிமுறையை நெறிப்படுத்தி, ஏழு உலகங்களையும் அவர்கள் ஆளும்படிச் செய்தவனும்,
குட்டை தேக வடிவினனாக  (வாமனன்)வந்து, கெடுதலிலாத நெடிய ( திரிவிக்ரம) உருவத்தைக்கொண்ட ஆதி மூர்த்தியாம் திருமால்.
அந்தத் திருமாலின்  மருகன் முருகன்!
[ குன்திபால் ஸ்ரீ க்ருஷ்ணர் காட்டிய கருணை  அபாரமானது. தன் அன்னையைவிட குன்திக்கே அதிக அருள் செய்தார். தன் அன்னையை  கம்சனிடமிருந்து காப்பாற்றினார், ஆனால் தனக்குமுன் பிறந்த அவர் குழந்தைகளைக் காப்பாற்றவில்லை. இங்கு குன்தியைக் காப்பாற்றியதுடன் அவருடைய குழந்தைகளையும் ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் காப்பாற்றினார். இதை குன்தியே  பின்னாளில் நினைவுகூறுகிறாள்.]

இப்பாடலின் கடைசி அடியில்  மதுரையில் பாண்டியனின் வெப்பு நோயை ஒழித்ததையும், அவன் கூனை நிமிர்த்தியதையும் சொல்கிறார். முருகனே சம்பந்தராக வந்தார் என்பதை இங்கும் தெளிவாக்குகிறார்.

விதுரர் போர்செய்யாமல் நீங்கியது

இன்னொரு பாடலில் மற்றொரு அரிய மஹாபாரத நிகழ்ச்சியைச் சொல்கிறார்.
துரியோதனனிடம் தூது சென்ற க்ருஷ்ணர், அவனுடைய   மாளிகையில்  விருந்தினராகத் தங்காது விதுரருடைய குடிலில் தங்கினார், இதைக்கண்டு பொறாத துரியோதனன் அடுத்த நாள் சபையில் விதுரரை  'என்ன இருந்தாலும் நீ  தாசி மகன் தானே, என் சோற்றை  உண்டும் க்ருஷ்ணன் பக்கமே இருக்கிறாயே' என்று ஏசினான். இதைப் பொறுக்காத விதுரர், மிக்க கோபம் கொண்டு, 'நான் போரில் அம்பைத் தொடேன்' என்று சொல்லி தன்னிடமிருந்த மிகச்சிறந்த வில்லை இரண்டாக உடைத்தெறிந்து, சபையிலிருந்து நீங்கினார். இந்தச் செய்தியை நாதர் பாடுகிறார்.

விதுர னெடுந்த்ரோணமேற்று எதிர்பொருமம் பாதியேற்றி
விரகினெழுந்தோய நூற்று      வருமாள
விரவுஜெயன் காளி  நாட்டில் வருதருமன் தூத னீற்ற
விஜய நெடும் பாக தீர்த்தன்

விதுரன் தனது பெரிய வில்லை எடுத்து, எதிரியுடன் போர்புரிய அதில் அம்பு முதலிய பாணங்களை ஏற்றி சாமர்த்தியத்துடன் போர்புரிதல்  இல்லாமல் போகவும், துரியோதனன் ஆகிய நூற்றுவரும் இறந்து போகவும்,
உபாயம் செய்த ஜெயவீரன்,  காளி நாடாகிய துர்க்கை வனத்தில்  வாசஞ்செய்துவந்த  தர்மபுத்திரனுடைய தூதன், திருநீறிட்டு  தவம் செய்தவனாகிய அர்ஜுனனுடைய பெரிய தேர்ப்பாகனாகிய பரிசுத்த மூர்த்தியாகிய திருமால் 
.
எவ்வளவு பொருட் செறிவுடன் பாடுகிறார்!


நரகத்தில் விழாது காக்க

வேதாள ஞான ஹீனன் விதரண
நாதானிலாத பாவி யனிஜவன்
வீணாள் படாத போத தவமிலி        பசுபாச

வ்யாபார மூடன் யானும் உனதிரு
சீர்பாத தூளியாகி  நரகிடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே

இங்கே சுவாமிகள் எல்லாவிதமான குற்றங்களையும் தன்மேல் ஏற்றிச் சொல்கிறார்.
வேதாளம் = பேய்
ஞான ஹீனன் = ஞானமே இல்லாதவன்
விதரண நா தான் இலாத பாவி + விவேக முள்ள நாக்கே இல்லாத பாவி
வீணாள் படாத போத தவமிலி  =  பயனில்லாத  நாட்கள் இல்லாமல் செய்துகொள்ளும் அறிவும் தவமும் இல்லாதவன்
அனிஜவன்  == நிஜமே இல்லாதவன்
பசு பாச வ்யாபார மூடன்= பசு, பாசமாகிய உலக விவகாரத்திலேயே உழலும் மூடன்[ பதி ஞானம்- கடவுளைப்பற்றி எண்ணாதவன்]
இப்படியெல்லாம் அருணகிரியார் சொல்லிக்கொள்வது நாம் இப்படிஎல்லாம் இருக்கக்கூடாது என்பதைக் காட்டவே. அவர் இப்படி உண்மையாகவே இருந்திருந்தால் தெய்வ அருள் கிடைத்திருக்குமா ?

இந்தப் பாடலில் ஒரு ரசமான விஷயத்தைச் சொல்கிறார்.

கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம்  அடர்சோலை

அங்குள்ள சோலைகளில் கூதாளம்,  கடம்பம், சுரபுன்னை ஆகிய மலர்களில்  வண்டுகள்  சாதாரி,(பந்துவராளி) தேசி, நாதநாமக்ரியை ஆகிய ராகங்களில்  ஆரவாரமாக  இசையுடன்  ஒலி எழுப்புகின்றனவாம்! (முன் ஒரு பாடலில் ஸ்ரீராகம்  பாடும் வண்டைப் பற்றிச் சொன்னார்,)

சம்பிரதாயமான  நெறி வேண்டும்!

ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும்         வெகுரூப

அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு         வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது           சிவயோகம்


தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது     பெறுவேனோ




பஞ்ச பூதங்களும், ஆறு சமயங்களும், மந்திரம் , வேதம், புராணங்கள், கலைகள். ஆகியவையும், 51 அக்ஷரங்களூம்,
பல உருவுடைய தேவர்முதலானவர்களும், அசையும் அசையாப் பொருளானவைகளும், உயர்ந்த பிரம்மன், மேக நிறத்துத் திருமால், அந்திவர்ண ருத்ரன் ,
சந்த்ர சூர்யர்களும், அஜபா என்னும் ஹம்ஸ மந்திரமும், விந்துவும், நாதமும் ஆகிய இவை எல்லாவற்றின் ஏக வடிவமே அந்தப் பரம்பொருளின் சொருபம் (அல்லது தன்  நிஜ சொருபம்) எனப் பாவித்து, இருத்தலே சிவயோகம்..
இதை அடைய, அவரவர்களும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கப்பெற்று,, பரம்பரையாய் வந்த குருமூர்த்தியின்  உபதேசத்தில் பொருந்தும் நெறியைப் பெறுவேனோ !




இது மிக முக்கியமான கருத்து, சாதகரின்  தகுதிக்கு ஏற்ப பல சாதனைமுறைகள் வழிவழியாக வந்திருக்கின்றன. இதில் எதைப் பின்பற்றினாலும் அது இறுதியில் ஒரே பரம்பொருளிடம் கொண்டுசேர்க்கும் என்பதே உண்மையான ஆன்மீகம். இப்படிச் சம்பிரதாயமான வழியிலேயே சாதகன் போகவேண்டும்.

இப்போதெல்லாம் திடீர் காஃபி போன்று குருமார்களும்  முளைக்கிறார்கள். புதிது புதிதான வழிகளைச் சொல்கிறார்கள். இந்த வழிகளின் விளைவுகள் யாருக்கும் தெரியாது. சம்பிரதாய வழிகளோ, பலரால் பரீக்ஷித்துப் பார்க்கப்பட்டவை. [ Tried and Tested. They have stood the test of time.] அதனால் சம்பிரதாய வழியே சிறந்தது. சமீப காலத்தில் இதை வலியுறுத்தியவர் ஹரே க்ருஷ்ணா இயக்கத்தை உலக அளவில் பரப்பிய பக்திவேதாந்த ஸ்வாமி  ப்ரபுபாதா. He stressed that a Guru should have  come in Disciplic Succession.

கிழம்படுமுன் பதம் பெற

இளமை கிழம்படுமுன் பதம் பெறுவேனோ 

இதுவும் மிக முக்கியமான கருத்து. சமயம், ஆன்மீகம் என்றால் பலர் 'பிறகு, வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளலாம்' என்பார்கள்.  இளமையில் பசு-பாச (உலக)விஷயங்களில் ஈடுபட்டு பதிஞானம் (தெய்வ சிந்தனை)  இல்லாமல் இருக்கிறார்கள்.  இதை பகவத் பாத சங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார்.

बालस्तावत् क्रीडासक्तः,              பாலஸ்தாவத் க்ரீடாஸக்த:
तरुणस्तावत् तरुणीसक्तः।           தருணஸ்தாவத் தருணீ ஸக்த:   
वृद्धस्तावच्चिन्तासक्तः,                வருத்தஸ்தாவத் சின்தா ஸக்த:
परे ब्रह्मणि कोऽपि न सक्तः            பரே ப்ரஹ்மணி கோஅபின ஸக்த:


குழந்தை விளையாட்டில்  காலம் கழிக்கிறது,
இளமையில் பெண்களிடம் ஈடுபாடு வருகிறது
வயதான காலத்தில் பலவித கவலைகள்
யாரும் கடவுளைப்பற்றி நினைப்பதில்லை!

அதனால் மூப்பு வருமுன் உன் பதத்தைப் பெறவேண்டும் என்கிறார்.

வழிவழி அன்புசெய்  தொண்டு கொண்டருள் பெருமாளே

என்று வேண்டுகிறார்.  இது பக்தர்களின்   நிலை. "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் " என்பார் ஆண்டாள்.

இந்தப்பாடலிலும் ராமாயண, பாகவத நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்.


வரிமுக எண்கினு டன் குரங்கணி
பணிவிடை சென்று முயன்ற  குன்றணி யிடையேபோய்ப்

பகடி இலங்கை கலங்க அம்பொனின்
மகுட சிரம் தசமும் துணிந்தெழு
படியு நடுங்க விழும் பனம் பழம்    எனவாகும்

மருதம் உதைந்த முகுந்தன்
வரிகள் கொண்ட முகமுடைய  ஜாம்பவான்  முதலான கரடிப் படையும் குரங்கும் படையும் பணிபுரிய , போருக்குச் சென்று முயற்சியுடன் மலைவரிசைகளின் இடையே போய் மோசக்காரனான ராவணனுடைய இலங்கை கலங்கும்படி அவனுடைய பொற்கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தும் துண்டிக்கபட்டு , ஏழுலகும் நடுங்க , பனம் பழம்போல் விழச்செய்தவரும்,
மருத மரங்களை  ஒடிந்துவிழ வைத்தவருமான முகுந்தன்.
(  சாபத்தினால் மருத மரங்களாகி நின்ற நள-கூபர்களுக்கு க்ருஷ்ணர் விமோசன மளித்த வரலாறு பாகவதத்தில் வருகிறது.)

யமனைத் தடுத்து  நிறுத்து !

கெடாத தவமே மறைந்து கிலேசமதுவே மிகுந்து
கிலாத உடல் ஆவி நொந்து  மடியாமுன்
தொடாய் மறலியே நீ என்ற  சொலாகியனாவருங்கொல்

கெடுதலில்லாத தவ நெறியும் மறைந்துபோக, துக்கமே பெருக, உடல் ஆற்றலில்லாமல் போக , ஆவி நொந்து நான் இறந்துபடும் முன்பாக,
"எமனே, நீ இவனைத் தொடாதே " என்ற சொல்லானது உன் நாவில் வருமோ!

க்ருஷ்ண லீலை !

காயாத  பால்நெய் தயிர்க்கு டத்தினை
ஏயா வெணாம லெடுத்  திடைச்சிகள்
காணாதவாறு குடிக்கு மப்பொழு                துரலோடே

கார்போ லுமேனி தனைப்  பிணித்தொரு

போர்போ  லசோதை பிடித்த டித்திட
காதோ டுகாது கையிற்  பிடித்தழு            தினிதூதும்

வேயா லநேக விதப்ப சுத்திரள்
சாயாமல்  மீள அழைக்கு மச்சுதன்


ஸ்ரீ க்ருஷ்ணர்  பால், நெய் தயிர்க்குடங்களை இடைச்சியர்களுக்குத் தெரியாமல் குடிக்கும்போது,  யசோதை அவரைக் கட்டி அடிக்குபோது, இரண்டு  காதுகளையும் கையால் பிடித்துக்கொண்டு அழுதவரும். இனிமையான  புல்லாங்குழலுடன் அனேக பசுக்கூட்டங்களைத் தவறாமல் அழைத்துவருபவரும் ஆகிய அச்சுதன்.
என்ன அருமையான காட்சியை விளக்குகிறார்!

சிவனுக்கு உபதேசித்தது என்ன ?
இதை ஒரு பாடலில் சொல்கிறார்,

வடதிசைக் கயிலாசக்
கோமாற்கு உபதேசம் உபநிடத
வேதார்த்த மெய்ஞ்ஞான நெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி

வேத, உபநிஷதங்களின்  மெய்ப்பொருளை உணர்த்தினாராம்.
அவரிடமே ஞானோபதேசம் வேண்டுகிறார் அருணகிரிநாதர் !


ஞானோபதேசம் பெற


மாலாசை கோபம்  ஓயாதெ நாளு
 மாயா விகார               வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு          மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
 நானோதி னேனு          மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
 ஞானோப தேச ம்             அருள்வாயே


பாலா கலார ஆமோத லேப
 பாடீர வாக          அணிமீதே

பாதாள பூமி யாதார மீன
 பானீய மேலை          வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
 வேதாள பூத          பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
 வேளே சுரேசர்         பெருமாளே.


மயக்கம், ஆசை, கோபம்  மிகுந்து எந்த நாளும் பிரபஞ்ச மாயாவிகாரங்களின் வழியே போகின்ற நான்,
பெரிய பாவி, விஷ குணம் உள்ளவன்தான் என்ற போதிலும், நாதனே நீதான் இனி எனக்குத் தாயும் தந்தையும் ஆவாய்!
நான்கு வேதங்களையும், ஆகமம் முதலிய பிற நூல்களையும் நான் கற்றதில்லை.

என் வாழ்நாள் வீணாகப் போய்விடாமல். முப்பத்தாறு தத்துவங்களுக்கும்  அப்பாற்பட்ட நிலையதான  ஞானத்தை நீயே உபதேசித்து அருள்வாயாக !
பாலனே! செங்குவளை மலர்ப்பிரியனே! சந்தனப் பூச்சுடன் ஆபரணங்களை அணிந்துள்ள அழகனே!
பாதாளம் பூமி  இவற்றுக்கு ஆதாரமானவனே! மீன் நிறைந்த ஜலம் சூழ்ந்த வயலூரனே !
வேலனே ! விராலிமலையின் வாழ்வானவனே! பூத, வேதாள கணங்களுக்குத் தலைவரான சிவபிரான் குமாரனே !
வீரனே ! கொடுமையான சூரனுக்குப் பகைவனே! செவ்வேளே ! தேவேசப் பெருமாளே ! ஞானோபதேசம் அருள்வாயே !

எத்தனை அருமையான பாடல்! குரு நாதரிடம் நேரடி உபதேசம் வேண்டுவது! மனப்பாடம் செய்யத்தக்கது !
இப்படி அருமையான பாடல்கள் கொண்ட தலம் விராலிமலை!

https://www.indianholiday.com/wildlife-india/viralimalai-wildlife-parks.html



Thursday, November 29, 2018

6.திருப்புகழ்- 98.அத்திக்கரை,99.குறட்டி, 100.கந்தனூர்

6.திருப்புகழ். 98.அத்திக்கரை

து  புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளது. அருணகிரியார் தரிசித்த வரிசையில் 98வதாக வருவது. இதைப்பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. இங்குபாடிய ஒரு திருப்புகழ் இருக்கிறது.






முக்தி பெற 

தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
     சுற்றிக்கல னிட்டுக் கடிதரு
     சொக்குப்புலி யப்பிப் புகழுறு        களியாலே

சுத்தத்தைய கற்றிப் பெரியவர்
     சொற்றப்பிய கத்தைப் புரிபுல
     சுற்றத்துட னுற்றிப் புவியிடை      யலையாமல்
முக்குற்றம கற்றிப் பலகலை
     கற்றுப்பிழை யற்றுத் தனையுணர்
     முத்தர்க்கடி மைப்பட் டிலகிய           அறிவாலே

முத்தித்தவ சுற்றுக் கதியுறு
     சத்தைத்தெரி சித்துக் கரையகல்
     முத்திப்புண ரிக்குட் புகவர                மருள்வாயே


திக்கெட்டும டக்கிக் கடவுள
     ருக்குப்பணி கற்பித் தருளறு
     சித்தத்தொட டுத்துப் படைகொடு        பொருசூரர்

செச்சைப்புய மற்றுப் புகவொரு
     சத்திப்படை விட்டுச் சுரர்பதி
    சித்தத்துயர் கெட்டுப் பதிபெற           அருள்வோனே

அக்கைப்புனை கொச்சைக் குறமகள்
     அச்சத்தையொ ழித்துக் கரிவரும்
   
அத்தத்தில ழைத்துப் பரிவுட              னணைவோனே

அப்பைப்பிறை யைக்கட் டியசடை
     அத்தர்க்கரு மைப்புத் திரவிரி
    அத்திக்கரை யிச்சித் துறைதரு            பெருமாளே.



தொக்கைக் கழுவி  ........=    தோலை (உடலை)க் கழுவி, நல்ல ஆடையுடுத்தி, நகைகள் பூண்டு, வாசனைமிக்க நல்ல பூச்சுக்களைப் பூசும் மாதர்களைப் புகழ்ந்து, அதனால் வரும் களிப்பால்-
சுத்ததை அகற்றி ......=  பரிசுத்தத்தைக் கைவிட்டு, பெரியோர்கள் சொல்லும் புத்திமதிப்படி நடக்காமல். ஐம்புலன்களை அடக்காமல், அவை காட்டும் கெட்ட  வழியிலேயே போய், இந்தப் பூமியின் கண் நான் அலைச்சல் படக்கூடாது.
முக்குற்றமகற்றி............=  காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகைக் குற்றங்களையும் நீக்கி, பல நல்ல கலை நூல்களைக் கற்றுப் பிழையில்லாமல் தன்னை அறிந்த பரிசுத்த ஞானிகளுக்கு அடிமைபூண்டு, அத்தகைய  ஒழுக்கத்தால்
அறிவு விளக்கம் பெற்று,

முத்தித் தவசுற்று.........=  முக்தி அடையக்கூடிய தவநிலையைப் பெற்று. மோக்ஷம் தரக்கூடிய  மெய்ப்பொருளை உணர்ந்து, கரையில்லாத முக்தி என்னும் பெரும் கடலில் புகுமாறு வரம் தருவாயாக.

திக்கெட்டு மடக்கி .....=  எட்டுத் திக்குகளையும் அடக்கி, தேவர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரு பணியை விதித்து, கருணை என்பதே இல்லாத மனத்துடன்  படைகொண்டு போர் செய்த சூரர்களின்-

செச்சைப்புய மற்று.........= ரத்தத்தால் தோய்ந்த புயங்கள் அறுந்து விழச்செய்து, ஒப்பற்ற வேலைச் செலுத்தி, இந்த்ரனின் துயரத்தைத் தீர்த்து, அவன் தனது பொன்னுலகைப் பெறுமாறு அருளியவனே !

அக்கை புனை....... =  சங்கு மணியை அணிந்த இழிந்த குலத்தவளாம்  வள்ளியின் பயத்தை நீக்கி, யானை எதிரில் வந்த சிறு வழியில் அவளை மணந்தவனே !

அப்பைப் பிறை ....=  கங்கை நீரையும், பிறைச் சந்திரனையும் சடையில் தாங்கிய சிவபெருமானுக்கு அருமைப் புதல்வனே ! நன்கு விளங்கும் அத்திக்கரை என்னும் தலத்தில் விரும்பி அமர்ந்துள்ள பெருமாளே !

ஒவ்வொரு விஷயத்தையும் எத்தகைய அருமையான வாக்கால் பாடுகிறார் நம் நாதர்!

सत्संगत्वे निस्संगत्वं, निस्संगत्वे निर्मोहत्वं। 
निर्मोहत्वे निश्चलतत्त्वं, निश्चलतत्त्वे जीवन्मुक्तिः 


ஸத் ஸங்கத்வே  நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே  நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஶ்சல தத்வம்
நிஶ்சல தத்வே ஜீவன் முக்தி:

என்னும் ஆதிசங்கரரின் பஜகோவிந்தப் பாடலுக்கு அரிய விளக்கமாக இத்திருப்புகழ் அமைந்திருக்கிறது!

99. குறட்டி




இதுவும் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளது. அருணகிரி நாதர் தரிசித்த வரிசையில் 99வது தலம். இதைப்பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.
இங்கு பாடிய இரு திருப்புகழப் பாடல்கள் இருக்கின்றன. 

மாயை  ஒழிய

தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்ட னான
 ராவணன் மிகுத்த தானை         பொடியாகச்

சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி
  தாதுறை புயத்து மாயன்          மருகோனே

வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண
 மாபலி முதற்கொ ணாதன்           முருகோனே

வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ரீகை
 வாகுள குறட்டி மேவு             பெருமாளே.


மாயை
 சேர்தரு முளத்த னாகி           யுழல்வேனோ


[கூரிய கடைக்கணாலும் )
 இதில் முதல் இரண்டு வரிகளில் ராவணனை வதம் செய்த ராமரை மெச்சி அவருக்கு மருகனே என்று முருகனை அழைக்கிறார்.
மூன்றாவது வரியில் ஒரு புராணச் செய்தியைச் சொல்கிறார். ஒருகாலத்தில் தாருக வனத்தில் தவம்செய்திருந்த முனிவர்கள் கர்மத்தில் ஈடுபாடு உள்ளவராகி, தெய்வம் இல்லை என்னும் கருத்தினராயினர்.  சிவபிரானுக்கு எதிராக வேள்விசெய்து யானையை ஏவினர். சிவபிரான் அதன் தோலை உரித்து அணிந்தார். அந்த முனிவர்களுக்கு நல்லபுத்தி புகட்டுவதற்காக  திருமால் மோஹினியுருவில் தன்னுடன் வர, பிக்ஷாண்டிவேடத்தில் அவர்கள் இருக்குமிடம் சென்றார். மோஹினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தங்கள் தவ நிலையில் தவறினர். பிக்ஷாண்டியாக வந்தவரின் வனப்பில் மயங்கிய முனிபத்னிகளோ. தம் மன நிலை தவறி,  நாணம், கைவளை, ஆடை அகியவை நீங்கியவராயினர்! இங்கு இந்த சரித்திரத்தைச் சொல்கிறார். பின்னர் ஈசன் அவர்களுக்கு நற்புத்தி புகட்டினார்.  இச்செய்திகளை  ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் அடியாராகிய பெரும்புலவர் முகவை கண்ண முருகனார் பாடியிருக்கிறார். அதில் சில பாடல்கள்:

 தாரு வனத்தில் தவஞ்செய் திருந்தவர்
பூருவ கர்மத்தால்  உந்தீ பற
போக்கறை போயினர் உந்தீபற.

கன்மத்தை யன்றிக் கடவுள் இலையெனும்
வன்மத்த ராயினர்  உந்தீபற
வஞ்சச் செருக்கினால் உந்தீபற.
....... கன்ம பலந்தரும் கர்த்தர் பழித்துச் செய்
கன்ம பலங்கண்டார் உந்தீபற
கர்வ மகன்றனர் உந்தீபற.

இங்கு அருணகிரியார்  கச்சணிந்த  செல்வமகளிர் மதிலுடன் உப்பரிகையில் வாழும் அழகிய குறட்டி என்று வருணிப்பதால் அவர்காலத்தில் இது செல்வச் செழிப்புள்ள  சிறந்த இடமாக இருந்தது தெரிகிறது. இத்தகைய பதியில் வாழும் முருகன் தன்னை மாயையில் உழலவிடக்கூடாது என்று வேண்டுகிறார்.

பிறப்பு அகல

இந்தப்பாடலில் தான்  மீண்டும் பிறவியெடுத்து வீணில் உழலல் ஆகாது என வேண்டுகிறார்.

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
 நீள்குளிர் வெதுப்பு வேறு      முளநோய்கள்

நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
 நீடிய விரத்த மூளை           தசைதோல்சீ

பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
 பாய்பிணி யியற்று பாவை        நரிநாய்பேய்

பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
 பாழுட லெடுத்து வீணி            லுழல்வேனோ


நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத
 நாயக ரிடத்து காமி            மகமாயி

நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத
 நாயகி யுமைச்சி நீலி         திரிசூலி

வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
 

வாணுத லளித்த வீர             மயிலோனே

மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை
 வாகுள குறட்டி மேவு           பெருமாளே.


பிரம்மன் படக்கும் இந்த உடலாகிய வீடு  பல நோய்களுக்கு இடமாகிறது. இறந்த பின்பு நரி, நாய், பேய், கழுகு , பருந்து, கோட்டான் ஆகியவற்றுக்கு இரையாகிறது.
"ஆக்கைக்கே இரை தேடி அலமந்து  காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே  " என்று அப்பர் ஸ்வாமிகள் பாடுவார். இத்தகைய  பிறவி மீண்டும் வேண்டாம் என வேண்டுகிறார்.

நாரணி....வாணுதல் : இந்த வரிகளில் தனக்கே உரிய  அற்புத வாக்கால் அம்பாளின் நாமங்களை அழகாக அடுக்குகிறார். ( இதை முன்பும் பார்த்தோம்.) இங்கு 16 நாமங்கள்  -ஷோடஸ   நாமங்கள் = வரிசையாக வருகின்றன!  இப்படிப் பல இடங்களில் பாடியிருக்கிறார். சில இடங்கள் :

வேத வித்தகீ வீமா விராகிணி
 வீறு மிக்கமா வீணா கரேமக
 
மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ      யங்கராகீ

ஆதி சத்திசா மாதேவி பார்வதி
 நீலி துத்தியார் நீணாக பூஷணி
 ஆயி நித்தியே கோடீர மாதவி
ஆர்யை 

( வேத் வித்தகா சாமீ)
இங்கும் 16 நாமங்கள் வருவதைக் கவனிக்கவேண்டும்

ஆல கந்தரி மோடா மோடிகு
 மாரி பிங்கலை நானா தேசிய
 மோகி மங்கலை லோகா லோகியெ      வுயிர்பாலும்

ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி யம்பிகை ஞாதா வானவ
  ராட மன்றினி லாடா நாடிய               அபிராமி

கால சங்கரி சீலா சீலித்ரி
 சூலி மந்த்ரச பாஷா பாஷணி
 காள கண்டிக பாலீ மாலினி             கலியாணி

காம தந்திர லீலா லோகினி
 வாம தந்திர நூலாய் வாள்சிவ
 காம சுந்தரி 


( நாலிரண்டிதழாலே )

இங்கே 24 நாமங்களை அனாயாசமாக அடுக்குகிறார் ! இத்தகைய சொல்லாட்சியை வேறு எந்த நூலிலும் காணமுடியாது! வாக்குக்கு நம் அருணகிரிக்கு ஈடாகவோ, மேலோ யாரும் இல்லை!


இந்தப்பாடலிலும் கடைசி  அடியில்  மாடங்களும் மதில்களும், முத்து இழைத்த மேடான தளங்களும், கோபுரங்களும், நறுமணம் கமழும் சோலைகளும்  விளங்கும் அழகான குறட்டி என்பதால் அதன் செல்வச் செழிப்பு  தெரிகிறது.

100. கந்தனூர்.


ஞான பண்டித ஸ்வாமி

இதுவும் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. மேலும் விவரம் தெரியவில்லை. இது அருணகிரியார் தரிசித்த 100வது தலம். இதற்கான ஒரு பாடல் இருக்கிறது.

ஞானம் பெற

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
 மின்சரா சர்க்குலமும்                 வந்துலாவி

விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
 மிஞ்சநீ விட்டவடி                வங்களாலே

வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
 வந்துதா இக்கணமெ            யென்றுகூற

மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி
 வந்துசே யைத்தழுவல்       சிந்தியாதோ


அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
 மங்கிபார் வைப்பறையர்        மங்கிமாள

அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்


 அண்டரே றக்கிருபை           கொண்டபாலா

எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
 எந்தைபா கத்துறையு            மந்தமாது

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
 எந்தைபூ சித்துமகிழ்                   தம்பிரானே.




விந்து பேதித்த .... = சுக்கிலம் இந்த உலகில்  அசையும்-அசையாப் பொருள்களாக  கூட்டமாய்  பலவித உரு எடுக்கிறது.
விண்டுபோய் விட்ட ....... = உரிய காலம் கடந்ததும் உடல் அழிந்து போகிறது, இதை மனது அறியும். இப்படி நீ எனக்கு அளிக்கும் பலவித உருவுள்ள  பிறப்புக்களில்-

வந்து நாயிற் கடைய........= நாயினும் கீழ்ப்பட்டவனாய் மனம்  நொந்து.  ஞான நிலையை இந்தக் கணமே  வந்து கொடு என்று உன்னிடம் வேண்டும்போது-
மைந்தர் தாவிப்புகழ..........= குழந்தைகள் தாய்தந்தையைச் சூழ்ந்து அவர்களைப் புகழ்ந்தால், அவர்கள் மகிழ்ச்சி கொண்டு அக்குழந்தைகளைத் தாவி அணைப்பார்கள் என்பதை நீ சிந்திக்க மாட்டாயோ? ( நீ  சற்று நினைக்கக் கூடாதா!)

அந்தகாரத்திலிடி.......= அடர்ந்த இருளில் இடி இடிப்பதுபோல் கூச்சலிட்டு வரும் தீப்போன்ற கண்களையுடை  அசுரர்கள் மாண்டுபோக,
அங்கைவேல்............=  அழகிய கையினால் வேலைவிட்டு  அருளி, இந்த்ர லோகத்தில் தேவர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் குடியேற அருள் செய்த  குமரனே !
எந்தனாவிக்கு....= என் உயிருக்கு உதவி புரிந்தவரும்,  சந்திரனைச் சடையில் தாங்கியவரும், எந்தையும் ஆன சிவபெருமானும், அவரது இடது பாகத்தில் அமர்ந்த பார்வதி தேவியும் ஆகிய இருவரும்,
எங்குமாய்..........= எங்கும் நிறைந்து  நிற்கும் ஒப்பற்ற  கந்தனூரில்  சக்தி புகழும் எந்தை சிவபிரான் பூஜித்து மகிழ்ந்த தம்பிரானே !
நீ ஞானத்தை  அருள வேண்டும்!

அறுமுகவேளே நமோ நமோ !






5,திருப்புகழ் -96.நெடுங்களம் 97. அத்திப்பட்டு

5.திருப்புகழ் -96. நெடுங்களம்
97.அத்திப்பட்டு

 நெடுங்களம் திருச்சியை அடுத்த திருவெறும்பூருக்கு அருகிலுள்ளது. அருணகிரிநாதர் தரிசித்த 96வது ஸ்தலம்.


Public Domain, https://ta.wikipedia.org/w/index.php?curid=227144

 இங்கு ஸ்வாமி பெயர் நித்ய கல்யாண சுந்தரேஶ்வரர், திருநெடுங்கள நாதர்.
 அம்பாள் பெயர் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.புராண வரலாறு உள்ள இப்பதி சரித்திரகாலக் கல்வெட்டுக்கள் பல கொண்டது. 
திருஞானசம்பந்தர்  ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.


நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.



இது இடர்தீர்க்கும்  பதிகம் எனப் போற்றப்படுகிறது.



www,thevaaram.org

இங்கு அருணகிரிநாதர்   பாடிய ஒரு அருமையான பாடல்  இருக்கிறது.

பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
 பஞ்செனஎ ரிந்துபொடி        யங்கமாகிப்

பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி
 பஞ்சவர்வி யன்பதியு             டன்குலாவக்

குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ
 கொஞ்சியசி லம்புகழல்          விந்துநாதங்

கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை
 கொன்றருள்நி றைந்தகழ        லின்றுதாராய்


எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல
 இன்பரச கொங்கைகர            முங்கொளாமல்

எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள
 இந்துநுத லும்புரள               கங்குல்மேகம்

அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள
 அம்பொனுரு மங்கைமண        முண்டபாலா

அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்
 அண்டரய னும்பரவு                 தம்பிரானே.


பஞ்சபுலன்  = ஐம் புலன்கள்.- இந்த்ரியங்கள்- இவை  வெளிமுகமாகச் செயல்படுவதால் நம்மை உலகில் பிணைக்கின்றன.
பழைய ரண்டுவினை  =  நல்வினை, தீவினை யாகிய இரு வினைகள். இவை  மிகப் பழையகாலம் முதல் நம்மோடு வருகின்றன. இவ்வினைக்கேற்பவே நாம் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம்.
பிணிகள்  = இந்த உடல் பலவித பிணிகளுக்கு ஆளாகிறது.பிறவியே பெரும்பிணி என்பார்கள் பெரியோர்கள்.
இவை எரிந்துவிடவேண்டும் என்கிறார் அருணகிரியார்.

இப்படி  இந்த்ரிய சேஷ்டைகளும் முன்வினைகளும் அற்றுப்போனால்  அடியவர்களுடன் தொடர்பு ஏற்படும்.  (ஸத்ஸங்கம்). அதனால் தெய்வீக யோக முயற்சிகளை மேற்கொள்ளும் எண்ணம் வரும். இங்கு அருணகிரிநாதர்  குண்டலினி  (சிவ )யோகம் தழுவிய சில கருத்துக்களைச் சொல்கிறார்.
குண்டலினி யோகப்படி நம் உடலில் 6 சூக்ஷ்ம  ஆதார சக்கரங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு தேவதைக்கு அதிஷ்டானமாக இருக்கிறது.

மூலாதாரம் - வினாயகர்
ஶ்வாதிஷ்டானம்   - ப்ரஹ்மா
மணிபூரகம்------ விஷ்ணு
அனாஹதம்  -------- ருத்ரன்
விஶுத்தி      -------- மஹேஶ்வரன்
ஆக்ஞா    ---------    ஸதாஶிவன் 
இவற்றைத் தாண்டியிருப்பது  ஸஹஸ்ராரம். இது சிவ-சக்தி ஐக்ய நிலை.
 இப்படி யோக முயற்சியால் ஆறு ஆதாரங்களிலும் அததற்குரிய தெய்வங்கள் விளங்க, ஒவ்வொரு இடத்திலும் ஒரு நாதம்-சிலம்பின் ஒலி, கழலின் ஒலி போன்று-  கேட்கும் என்பது மரபு. இப்படி இவ்வித ஒலிகள் விளங்க,  நீ மயிலின் பீது வந்து காட்சிதந்து,  என் கவலைகளை ஒழித்து,அருட் பிரசாதம் நிறைந்த உன் திருவடிகளை இன்று எனக்குத் தந்து அரூள்புரிய வேண்டும் என நம் ஸ்வாமிகள் முருகனை வேண்டுகிறார்.
இவை இப்பாடலின் முதல் நான்கு அடிகளில் வரும் கருத்துக்கள்.
அடுத்த நான்கு அடிகளில் "அம்பொன் உரு மங்கையை" மணந்ததைச் சொல்கிறார். இது தெய்வயானை அம்மையைக் குறிக்கிறது. பொதுவாக வள்ளியை பச்சை நிறத்தவர் என்று சொல்வது மரபு. அதனால் பொன் உரு மங்கை என்பதை தெய்வானை  என்று கொள்ள  வேண்டும்.
திருநெடுங்களம் என்னும் பதியில் தேவர்களும் பிரம்மனும் வழிபட வீற்றிருக்கும் முருகன் அருள் புரியவேண்டு மென்று பாடுகிறர்.
[ இங்கு சொல்லிய யோக விஷயங்களை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்வது அபாயமானது. உண்மையான அனுபவமுள்ள நம்பத்தகுந்த பெரியவர்களிடமிருந்து நேரடியாகத் தெரிந்துகொள்ள வேணும்.]

 அக்காலத்தில்  பரவியிருந்த பலவித  யோகங்கள், பிற நெறிகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவ்வப்போது சொன்னாலும் அருணகிரிநாதர் அவற்றிலெல்லாம் சிறிதும் ஈடுபாடு அற்றவர்.  பக்தி ஒன்றையே  போற்றிப் பின்பற்றியவர்.
ஆனபயபக்தி வழிபாடுபெறு முக்தியதுவாக நிகழ் பக்த சன வாரக் காரனும்......வேளைக்காரனே
என்று  பாடுகிறார். இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

97.அத்திப்பட்டு
அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 97வது தலம் அத்திப்பட்டு. இந்தப் பெயரில் தமிழ்நாட்டில்  பல கிராமங்கள் இருக்கின்றன. அருணகிரிநாதர் பாடிய தலம் கந்தர்வகோட்டைக்கு அருகிலுள்ளது என்பது தணிகைமணி அவர்களின் கருத்து. இங்கு அருணகிரிநாதர் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
     கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
     கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி           லிடைபோடாக்

கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
     கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
     கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர்              வழியேபோய்

மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
     மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
     மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன்        மலராலே


மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
     மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
     வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள்          தருவாயே


பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
     புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
     புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி                 லுறமேவும்

புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
     புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
     பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில்        மருகோனே


அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
     லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
     அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு              மிளையோனே

அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
     மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
    அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை         பெருமாளே.



முதல் மூன்று அடிகளில்  வாழ்க்கையின் இறுதியில் உடல் எரிக்கப்பட்டு அழிந்துபோவதை விவரிக்கிறார்.

உடல் வற்றி உலர்ந்தது போலாகிறது. அறிவும் நீங்குகிறது. உயிர் பிந்தவுடன் சுற்றத்தார்கள்  துக்கித்துக் கதறி அழுது,  அழகுசெய்யப்பட்ட பல்லக்கில் பறைவாத்யங்கள் கொட்ட, உடலை எடுத்துப்போய் சுடுகாட்டிலிட்டு விறகுக்குகட்டையில் போட்டு எரிக்கின்றனர்.  வாயில் அரிசியிடுகின்றனர். அழகான துணிகளை எடுத்துவிடுகின்றனர். உடலின் மறைவான பகுதியெல்லாம் தீப்பிடிக்கின்றது.. இப்படி உடல் எரிந்துபோனதும் உறவினர்கள்  வந்தவழியே திருப்பிப்போய் நீரில் குளித்து துக்கத்தையும் நீக்குகின்றனர். இப்படி இருந்தும் உறவைச்சொல்லி மக்கள் சுகமும் துக்கமும் கொள்கின்றனர்! மன்மதனுக்கு வசப்படுகிறனர்!  இப்படிப்பட்ட அடிமையான தன்னை  நினைத்து , சொர்க்கலோகத்துக்குப் போகும் வழி இதுதான் எனச் சொல்லி, உன் திருவடியைத் தந்தருளவேண்டும் எனப் பிரார்த்திக்கிறார்.

இந்த முதல் மூன்று வரிகள் வாழ்க்கை நிலையாமையை விளக்குகின்றன. அப்பரும் இதே கருத்தை திருஆனைக்கா பதிகத்தில் சொன்னார். 
"எத்தாய ரெத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால் வந்துதவுவா ரொருவரில்லைச் சிறுவிறகால் தீ மூட்டிச் செல்லா நிற்பர்".
வாழ்க்கைக்கு தெய்வமே துணையாக நிற்கும். "சிவனே உன் பொற்பாதம் அடையப்பெற்றால் அல்ல கண்டங்கொண்டடியேன் என்செய்கேனே".

அடுத்த நான்கு வரிகளில் முருகன்  பெருமையைச் சொல்கிறார்.






இணையற்ற  பர்வத ராஜன் பெற்ற பச்சை அழகு மயில்., திரிபுரத்தை எரிக்க பொன் வில்லைக் கையிலெடுத்தவள், அன்புடன் அதியமான தவத்தைச் செய்தவள்,  காஞ்சிப் பதியில் விளங்கும் புகழ்பெற்ற தேவி பார்வதி அருளிய புதல்வன்-

கொத்தான பத்துத் தலைகளும், இருபது தோள்களும் அற்றுவிழ,  அம்பைச் செலுத்திய சக்ராயுதக்கடவுள். புள்ளிகளைக்கொண்ட ஆதிசேஷனாகிய பாம்பின்மேல் துயில்பவன்,  சுத்த பச்சை நிற மேக வண்ணனாகிய திருமாலின் மருகன் -


(பத்துத்தலை தத்தக் கணைதொடு... பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்)

அருமையான மரகத மயிலில் வீற்றிருப்பவன், ஒலிக்கும் கடல் வற்றவும், அசுரர் கூட்டம் கட்டொடு அழியவும்,தேவர் தலைவன் இந்த்ரன் சுகத்துடன் தன் பதியில் குடியேறவும் வைத்த மிக்க இளையவன் -


பத்துத் திக்கிலும் ஒளிவீசும் அழகிய கிரீடத்தை உடையவன், கயல் மீன்கள் தாவிக்குதிக்கும் வயல்கள் உள்ள அத்திப்பட்டில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்.


இந்த முருகன் பொற்கழல்கள் தரவேண்டும்! 
இதுவே நமக்குத் துணையாவது. இதைக் கந்தரலங்காரத்திலும்  உருக்கமாகச் சொல்கிறார்.

ஐவர்க்கிடம்பெறக் காலிரண்டோட்டி அதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே

ஐவருங்கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே

தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
 பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
 வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே.


மக்களுக்கு நேரும் பெரிய துன்பம் ஜனன-மரண சுழற்சிதான். இதை "மஹதோ பயம்" - மிகப்பெரிய பயம் என்று கீதை கூறும். இதை  நீக்க ஒரேவழி தெய்வ நினைவும் அருளும்தான். இதையே பல இடங்களில்  அழுத்திச் சொல்கிறார் அருணகிரிநாதர்,

மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
     கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு          பொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
     கணத்தில் என்பய மறமயில் முதுகினில்          வருவாயே

( உனைத் தினம் தொழுதிலன்)

இவ்வாறு நம் பயம் நீங்க உபாயம் சொல்கிறார்  அருணகிரி ஆசான்.


சூலம் பிடித்து எமபாசம் சுழற்றித் தொடர்ந்து வரும்
காலன் தனக்கொரு காலும் அஞ்சேன், கடல் மீதெழுந்த
ஆலங்குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே.