Saturday, December 8, 2018

14.திருப்புகழ் .113.குருடிமலை 114.ஞானமலை115.பேரூர்

14.திருப்புகழ். 113.குருடிமலை 114.ஞானமலை 115. பேரூர்

அருணகிரிநாதர் அடுத்து தரிசித்துப்பாடிய 113வது தலம் குருடிமலை. இது கோயமுத்தூர் அருகே உள்ள துடியலூருக்கு சமீபத்தில் உள்ள  இடம். இங்கு பாடிய ஒரு பாடல் இருக்கிறது. முற்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் பொதுவாக வறுமையில் வாடினர். செல்வந்தர்களைப்  புகழ்ந்துபாடி பரிசில்பெற முனைந்தனர். இது தகாது என்று அருணகிரியார் பாடுகிறார்.

உலகோரைப் பாடுதல் தகாது

கருடன் மிசைவரு கரிய புயலென
  கமல மணியென        வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
  கருதி முதுமொழி       களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
  செவியில் நுழைவன      கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
  சிறிது முணர்வகை         யறியேனே

வருடை யினமது முருடு படுமகில்
  மரமு மருதமு                 மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
  வழிய வகைவகை       குதிபாயுங்

குருடி மலையுறை முருக குலவட
  குவடு தவிடெழ        மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர
  குறைவி லிமையவர்        பெருமாளே.


கருடன் மேல்வரும்  கரியமேகம் போன்ற திருமால் நீ என்றும், பத்ம நிதி, சிந்தாமணி நீ என்றும் 
இரைந்துபாடி, பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மிகவும் யோசித்து  பழைய  செஞ்சொற்களைத் தேடி,
அவற்றைத் திருடியும் ஓரளவு திரித்தும் தம் பாடலில் அமைத்து, அறிவில்லாதவர்களுடைய செவியில் புகும்படிப் பாடல்களைப் பாடித்,
திரிகின்ற சில புலவர்கள் கூறும் வழியை நான் அறிந்திலேன்.
மலையாடுகளின் கூட்டமும், கரடுமுரடான அகிலும் மருத மரமும் அடிபெயர்ந்து சாயும்படி,
'மதுரம்' என்னும் ஆறு பெருகி இருகரைகளும் வழிய பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற  குருடி மலையி,ல் அமர்ந்த முருகனே ! சிறந்த மலையான க்ரௌஞ்சம் தவிடுபொடியாகித்   தூளெழ  மயிலில் ஏறும் குமரனே ! குருபரனே ! அஞ்ஞான இருளை விலக்கும் ஞான சூர்யனே! குறைவிலாத தேவர் பெருமாளே !
உலகத்தவரைப் பாடிப்பிழைப்பதை நான் அறியவில்லை.
இந்த நதியை மருத நதி என்றும் சொல்கிறார்கள்.
இதே கருத்தில் வேறு சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.

114. ஞானமலை
அடுத்த தலம் ஞானமலை. இது எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லை.
தணிகைமணி யவர்கள் இதைக்குறிப்பிடவில்லை. இது  ஷோளிங்கருக்கு அருகில் இருக்கிறது என்று இப்போது சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது சரியெனத்  தோன்றவில்லை.ஏனெனில் அருணகிரிநாதர் இப்போது  பார்த்துவரும் தலங்கள் கொங்கு நாட்டில் இருக்கின்றன.



இங்கு பாடிய இரண்டு பாடல்கள் இருக்கின்றன.

பொது மகளிர் உறவு கூடாது

வேத முனிவோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூசல்         எனஏகி
வீறசுரர் பாறி  வீழ அலையேழு
வேலை அளறாக விடும்      வேலா
நாதரிடமேவு  மாது சிவகாமி
நாரி அபிராமி      அருள்பாலா
நாரணசுவாமி ஈனுமகளோடு
ஞானமலைமேவு    பெருமாளே !
ஆக தாடியிடுவோர்கள் உறவாமோ 

எளிய பாடல். இதில் முதல் இரண்டு அடிகளில் பண்டைக்காலப் போரில் பின்பற்றப்பட்ட வழக்கம் ஒன்றைச் சொல்கிறார். போர் தொடங்கும் போது,  அந்த ஊரில் இருந்த அந்தணர், பெண்கள், நோயாளிகள், பசுக்கள்  ஆகியவை  துன்பம் அடையாதவாறு அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குப் போகச்சொல்லி பறை அறிவிப்பார்கள். இச் செய்தியை புற நானூறு  9ம்பாடலும் தெரிவிக்கிறது. 

ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்.

அசுரர்களுடன் நடந்த போரில் முருகனும் இப்படிச் செய்தான் எனச் சொல்கிறார்.

அடுத்த பாடல் திருவடி தீக்ஷை பற்றியது.

மனையவள் நகைக்க வூரி ல் அனைவரு நகைக்க லோக
  மகளிரு நகைக்க தாதை        தமரோடும்
மனமது சலிப்ப நாய ன் உளமது சலிப்ப யாரும்
  வசைமொழி பிதற்றி நாளும்         அடியேனை
அனைவரும் இழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடின்
  அகமதை யெடுத்த சேமம் இதுவோவென்று
அடியனு நினைத்து நாளும்  உடலுயிர் விடுத்த போதும்
  அணுகிமுன் அளித்த பாதம்     அருள்வாயே


தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
  தமருகம் மறைக்கு ழாமும்   அலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்கள் இறக்கு மாறு
  சமரிடை விடுத்த சோதி           முருகோனே
எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத
  எழுதரிய பச்சை மேனி         யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
  இலகிய சசிப்பெண் மேவு         பெருமாளே.


இதுவும் எளிய பாடல். இது அருணகிரிநாதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் காட்டுகிறது எனச் சொல்கின்றனர்.  மக்களின் வசைமொழியும் உறவினரின் பரிகாசமும் தாங்காமல் உயிர்விடத் துணிந்தபோது முருகன்  பாத தரிசனம் தந்து ஆட்கொண்டதை  (முன்  அளித்த பாதம் ) விவரிக்கிறார். மீண்டும் அதை வேண்டுகிறார்.

115.பேரூர்.

இவ்வாறு அருணகிரியார்  கொங்கு நாட்டில் காடு, மலைகளைத்தாண்டி பேரூரை அடைந்தார். இது இவர் தரிசித்துப் பாடிய 115வது தலம். இது கோயமுத்தூருக்கு அருகில் உள்ளது. புராணச் சிறப்பும் சரித்திரச் சிறப்பும் உள்ள தலம். இதன் புராணப்பெயர் பிப்பலாரண்யம். காமதேனுபுரி, ஆதிபுரி, பட்டிபுரம், தக்ஷிண கைலாசம், தவச்சித்திபுரம்  என்றெல்லாம்  பெயர்கள் இருக்கின்றன. ஸ்தல புராணப்படி இங்கு திருமாலுக்கும் ப்ரம்மாவுக்கும் சிவபெருமான நடன தரிசனம் அளித்தார். அதனால் இது மேலைச் சிதம்பரம் எனப்படுகிறது.



By Balajijagadesh - சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=16989670

இங்குள்ள பட்டீஶ்வரர் கோவில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது.
ஸ்வாமிபெயர் பட்டீஶ்வரர், அம்பாள் பச்சை நாயகி.
 இங்கு இரு பாடல்கள் இருக்கின்றன.








தீராப் பிணிதீர ஜீவாத்தும     ஞான
ஊராட்சியதான   ஓர்வாக்    கருள்வாயே
பாரோர்க்கிறைசேயே பாலாக்கிரி ராசே
பேராற் பெரியோனே  பேரூர்ப்பெருமாளே 

முடிவில்லாது தொடர்ந்துவரும் பிறவிப்பிணி  ஆத்மஞானத்தால்தான் அழியும். இதை முருகனிடம் ஒப்பற்ற உபதேசமாக அருணகிரிநாதர்
வேண்டுகிறார்.

பேரூர் கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள்  நிறைந்த ஒரு கல் தூண். பழைய படம்.


Edmund David Lyon [Public domain], via Wikimedia Commons




ஞானோபதேசம் பெற




Edmund David Lyon [Public domain], via Wikimedia Commons

மைச்ச ரோருக நச்சு வாள்விழி
   மானா ரோடே நானார் நீயா         ரெனுமாறு

வைத்த போதக சித்த யோகியர்
   வாணாள் கோணாள் வீணாள் காணா  ரதுபோலே



நிச்ச மாகவு மிச்சை யானவை
   நேரே தீரா யூரே பேரே         பிறவேயென்


நிட்க ராதிகண் முற்பு காதினி
   நீயே தாயாய் நாயேன் மாயா        தருள்வாயே








மிச்ச ரோருக வச்ர பாணியன்
   வேதா வாழ்வே நாதா தீதா          வயலூரா

வெற்பை யூடுரு வப்ப டாவரு
   வேலா சீலா பாலா காலா             யுதமாளி

பச்சை மாமயில் மெச்ச வேறிய
   பாகா சூரா வாகா போகா        தெனும்வீரா

பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
  பாரூ ராசூழ் பேரூ ராள்வார்        பெருமாளே.


மை பூசி யுள்ளதும் தாமரை, விஷம், வாள்  போன்றதுமான கண்களையுடைய பெண்களுடன்,
 நான் யார், நீ யார் எனச் சிறிதும் மயங்காதவராகிய மன நிலையில் உள்ள   ஞானத்துடன் கூடிய சித்தர்களும் யோகிகளும்,
தமது வாழ்நாளாலும் கிரஹங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போவதைக் காணமாட்டார்.
அது போல (மண், பெண், பொன் ஆகிய ) மூவாசைகளும் உறுதியாக முடிவுபெறுவதில்லை.
அதனால் எனக்குச் சொந்த ஊர் போல , பேர் போலஇனியவனே,, எனக்கு  இனிய இன்னும்  பிற பொருட்கள் ஆனவனே !
என்னை நிச்சயமாகப் பற்றும் மூன்றாகிய எவையும்  [மூவாசைகள், முக்குணங்கள். மும்மலங்கள்,  (பொய் களவு கொலை  என்னும்) முக்குற்றங்கள், (ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதி  தெய்விகம் என்னும் ) முத்தாபங்கள்  போன்றவை] என்னைத் தாக்காமல், நீயே இனி தாய் போலிருந்து நான்  (வீணில்) இறந்து போகாமல்  அருள்புரிவாயாக.
தாமரை போன்ற கண்கள் உடல்முழுதும் கொண்டவனும் வஜ்ராயுதன் தாங்கியவனுமான  இந்த்ரனும் ப்ரம்மாவும் போற்றும் செல்வமே ! நாத ஒலிக்கு அப்பாற்பட்டவனே ! வயலூரானே !
க்ரௌஞ்ச மலையைத் துளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவனே ! நற்குணங்கள் நிறைந்தவனே!, பாலனே ! காலை ஆயுதமாகக் கொண்ட சேவலை கொடியாக உடையவனே !
அழகிய பச்சை மயில்மீது தேவரும் மெச்சும்படி ஏறிய பாகனே !
அடேய்  சூரனே ! ஆஹா, விலகிப் போகாதே என்று கூறி ( போருக்கு அழைத்த ) வீரனே ! 
பட்டி என்ற முனிவராக வந்த ப்ரம்மனுக்கு கொடுகொட்டி என்னும் நடனத்தை ஆடி அருள்செய்தவரும், பூமியில் சிறந்த தலமும் காமதேனுவாக  வந்த திருமால் வலம் செய்த தலமும் ஆகிய பேரூரை  ஆண்டு அருள்பவராகிய சிவபெருமானுக்குக் குருவாக வந்த  பெருமாளே ! 
நான் வீணே இறந்து போகாமல்  அருள்வாயாக.

மிக  அருமையான பாடல்.. 
பிறந்தவர்கள் எல்லாம் இறப்பது நியதி. வீணில் இறப்பது என்பது என்ன? தெய்வத்தை உணராமல் மரிப்பது வீணில் இறப்பதாகும். கடவுளை உணர்வதுதான் வாழ்வின் பயன். இதை அடையாமல்  மரிப்பது  விணில் மரிப்பதாகும். இவ்வாறு தனக்கு நேராமல் இருக்க முருகன் அருளை வேண்டுகிறார். ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய பாடல்.
இந்தப் பாடலில்  திருமாலுக்கும் ப்ரம்மாவுக்கும் நடன தரிசனம் அருளிய  ஸ்தலபுராணச் செய்தியைச் சொல்கிறார்.




Thursday, December 6, 2018

13.திருப்புகழ் 111.அவிநாசி 112. திருப்புக்கொளியூர்


13.திருப்புகழ் 111.அவிநாசி
112. திருப்புக்கொளியூர்

அவிநாசி

ருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 111வது தலம் அவிநாசி. இது  முன்பு திருப்புக்கொளியூர் அவிநாசி என்று வழங்கியது. சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி ஒரு முதலை தான் உண்ட பிள்ளையை திருப்பித் தரச்செய்த தலம். கலியின் பொய்ம்மையை விலக்கி, இறைவன் திருவருளின் மெய்ம்மையை நிலைநாட்டிய நிகழ்ச்சியாக இதைப் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

இத்தலத்தின் பெருமையை கொங்கு மண்டல சதகப் பாடல் ஒன்று போற்றுகிறது:

பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போங்கொளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை  யன்றுகொண்டு
வாவென்றழைத்த அவிநாசி சூழ்கொங்கு மண்டலமே.







இங்கு ஸ்வாமிபெயர் அவிநாசியப்பர், அவிநாசி ஈஶ்வரர், அவிநாசி நாதர், பெருங்கேடிலியப்பர். அம்பாள் கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.  புராண வரலாறு உள்ள தலம். சுந்தரர் பாடல் பெற்றது.





By Cnu at English Wikipedia, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=7176442







சுந்தரர் தேவாரம் (7ம் திருமுறை )


எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
    எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் 
    உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
    யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
    யேபர மேட்டியே


உரைப்பார் உரைஉகந் துள்கவல்
    லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
    அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
    யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
    தரச்சொல்லு காலனையே

நீரேற ஏறு நிமிர்புன்சடை
    நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
    யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ
    ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
    லார்க்கில்லை துன்பமே.


இங்கு அருணகிரிநாதர் பாடிய மூன்று  பாடல்கள் இருக்கின்றன.

இறவாமல் பிறவாமல்  எனையாள் சற்குருவாகிப்
பிறவாகித் திரமான  பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குஹனே சொற்குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.

எத்தனை எளிய, அரிய பாடல் !
இறவாமல் பிறவாமல் பெருவாழ்வு =  மோக்ஷ வீடு.
திரமான = ஸ்திரமான, நிலையான
எனையாள் சற்குருவாகி பிறவாகி  =  சற்குருவாகியும் வேறு துணையாகியும்
குஹன்  = பக்தர்களின் இதய குகையில் இருப்பவன்
அறநாலைப் புகல்வோன் = அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களை உபதேசிப்பவன்.

திருவடி மறவாமை

அந்தத்தொக் காதியு மாதியும்
  வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
  அண்டத்துப் பாலுற மாமணி             யொளிவீசி

அங்கத்தைப் பாவைசெய் தாமென
  சங்கத்துற் றார்தமி ழோதவு
  வந்துக்கிட் டார்கழு வேறிட             வொருகோடிச்

சந்தச்செக் காளநி சாசரர்
  வெந்துக்கத் தூளிப டாமெழ
  சண்டைக்கெய்த் தாரம ராபதி          குடியேறத்

தங்கச்செக் கோலசை சேவக
  கொங்கிற்றொக் காரவி நாசியில்
  தண்டைச்சிக் காரயில் வேல்விடு           பெருமாளே.


மண்டிச்செச் சேயென வானவர்
  கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை            மறவேனே


(பந்தப்பொற்பார )

ஶ்ருஷ்டித் தொழிலுடைய பிரம்மாவும், ஆதிமூலம் என்னும் திருமாலும் வணங்கித்  துகிக்கின்ற படி, அவரவர்களின் இடங்களில் சேர்ந்து வாழவும், 
அழகிய ரத்ன மாலையின் ஒளிவீச, எலும்பிலிருந்து பெண்ணைப் படைக்கிறோம் என்று சங்ககாலத்துப் புலவர்களின் தமிழ்போன்ற செந்தமிழ்ப்பாடலை நீ ஓதவும், உன்னுடைய பெருமை தெரிந்து மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய  சமணர்கள் கழுவிலேறவும்,
ஒருகோடிக்கணக்கான ரத்தம் ஒழுகுவதால் சிவந்த நிறத்தைக் கொண்டவர்களும், விஷகுணம் கொண்டவர்களுமாகிய அசுரர்கள் பாணங்களால் வெந்து சிதறவும், போர்க்களத்தில் திரைச்சீலை போல தூசி கிளம்பி எழவும், போரில் இளைத்தவர்களான தேவர்கள் அவர்கள் ஊராகிய அமராவதியில் குடியேறவும்,
தங்கமயமான செங்கோல் ஆட்சியை நடத்திய பராக்ரமசாலியே ! கொங்கு நாட்டின் அவிநாசித் தலத்தில் அமர்ந்த பெருமாளே ! தண்டையணிந்த பெருமாளே ! கூரிய வேலைச்செலுத்தும்  பெருமாளே !
தேவர்கள் உன்னை நெருங்கி ஜே ஜே என்று வாழ்த்தி வணங்குகின்ற உன் பாத தாமரையை மறவேன்!

இந்தப் பாடலில் திருஞான சம்பந்தரின் செயல்களை முருகன் செய்ததாகச் சொல்கிறார். இதனால் முருகனே சம்பந்தராக வந்தார் என்னும் கருத்தை  மீண்டும் வலியுறுத்துகிறார் அருணகிரிநாதர்.

யம பயம் அகல

கனத்த செந்தமி ழால்நினை யேதின
  நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
  கருத்தி ருந்துறை வாயென தாருயிர்           துணையாகக்

கடற்ச லந்தனி லேயொளி சூரனை
  யுடற்ப குந்திரு கூறென வேயது
  கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில்          விடும்வேலா

அனத்த னுங்கம லாலய மீதுறை
  திருக்க லந்திடு மாலடி நேடிய
  அரற்க ரும்பொருள் தானுரை கூறிய           குமரேசா


அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
  நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
  யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய              பெருமாளே.


மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
  கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
  மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை           தடுமாறி

வருத்த முந்தர தாய்மனை யாள்மக
  வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
  வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின          நகையாட

எனைக்க டந்திடு பாசமு மேகொடு
  சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
  லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய          முறவேதான்

இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
  பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
  இணைப்ப தந்தர வேமயில் மீதினில்                  வரவேணும்.


சிறந்த பொருளுள்ள செந்தமிழால் உன்னையே தினமும் நினைக்க உன்னுடைய அருளைத் தரவேணும். என்னுடைய அருமை உயிருக்குத் துணையாக நீ என் கருத்திலே நிலைத்திருக்க வேண்டும்.
கடல் நீரில் ஒளிந்திருந்த சூரனுடைய உடல் பிளந்து, அது இரண்டு கூறாக எழ, ஒப்பற்ற சேவலும் அழகிய மயிலுமாக ஆகும்படி செலுத்திய வேலாயுதத்தை உடையவனே !
அன்னவாகனமேறும் பிரம்மனும், செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மி சேர்ந்த திருமாலும் ஆகிய இருவரும் அடி முடி தேடிய சிவபெருமானுக்கு அரிய பொருளை விளக்கி உபதேசித்த  குமரேசனே !
அறத்தை உபதேசிப்பவரும், பெருமை பொருந்திய வர்களுமான அந்தணர்கள்  உன்னை தினமும் தொழுபவர்களாய்  அமர்ந்திருப்பதை விரும்பியுள்ள , அடியார்களுக்கு அருள்செய்யும் அவிநாசியில் வீற்றிருக்கும்பெருமாளே !

நெஞ்சில் இரைந்து கோழை அதிகரிக்கவும், கரிய தலைமயிர் வெளுத்துப் போகவும், தாமரை மலர்போன்ற கண் பஞ்சடையவும், நடை தடுமாற்றம் அடைந்தும்,
துன்பத்தைத்தர, தாய், மனையாள், குழந்தைகள் , வெறுப்புக்கொள்ளும் சுற்றத்தார் ஆகியோருடன் எல்லோரும் சேர்ந்து பழித்து, பரிகசித்துப் பேசிச் சிரிக்க,
என்னை  அடக்கி வெற்றிகொள்ளும் பாசக்கயிறுடன் வந்து, கோபத்துடன் சூலத்தை என்மேல் வீசியெறிய, வாயில்  நெருப்பைக் கக்க, நான் பயம் அடையும்படி,
என்னை இழுக்க வரும் எமதூதர்கள் என்னைப் பிடிப்பதற்கு முன்பாக, நீ உன் இரு தாமரைத் திருவடிகளையும் எனக்குத் தரும்பொருட்டு மயில்மேல் வந்தருளவேண்டும். 
பிறந்த உயிர்களுக்கு நேரும் பெரிய பயம் மரணம் பற்றியது. இதைப் பல பாடல்களில் சொல்லும் அருணகிரிநாதர் அதற்கு மாற்றையும் தவறாது சொல்கிறார். அது முருகன் திருவடிகளை நினைப்பதே. "கா கா நமனார் கலகம் செயு நாள் " என வேண்டுவார்.

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே.

(கந்தரலங்காரம் )



Pic from www.shivatemples.com



112. திருப்புக்கொளியூர்
அருணகிரிநாதர் தரிசித்துப் பாடிய 112 வது தலம் அவிநாசியுடன் சேர்த்தே பேசப்பட்ட திருப்புக்கொளியூராகும். இன்று வெட்டவெளியாக இருக்கிறது.  இங்கும் மூன்று பாடல்கள் இருக்கின்றன.

உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
  வுற்பல வீராசி              மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
  யுற்பல ராசீவ           வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
  பொற்ப்ரபை யாகார       அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
  புக்கொளி யூர்மேவு         பெருமாளே.

பக்குவ வாசார லட்சண சாகாதி
  பட்சண மாமோன         சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
  பற்றுநி ராதார                       நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக

  அப்படை யேஞான            வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு

  னற்புத சீர்பாத              மறவேனே


அடியார்களுக்கு மெய்த்துணையாகிய  வீரம் மிக்க பன்னிரு புயங்களை உடையவனே !
நீலோத்பல மலர்களின் நறுமணம் வீசுவதும். நிலவொளி வீசுவதும், முத்தைப்போல தெளிந்த நீருள்ள குளங்களில் குவளைகளும் தாமரைகளும் பூத்திருக்கும் வயலூரின் நாதனே !
பொய்யே இல்லாத மெய்யான வீரம் மிக்கவனே ! ஒளிவீசும்  அழகிய பொன்மேனி கொண்டவனே !
 அவிநாசித் தலத்தில் கலியின் பொய்ம்மை நீங்கும்படி இறைவனுடைய திருவருளின் மெய்ம்மையின் புகழ் ஓங்கி நிலைக்கும் படி திருப்புக்கொளியூரில் வீற்றிருக்கும் பெருமாளே !
சரியான ஆசார நிலையில் நின்று, பச்சிலை, மூலிகைகள்  போன்றவற்றையே உணவாகக் கொண்டு, சிறந்த மோன நிலையில் நிற்கும் சிவயோகிகள்,
தங்களது பக்தி வாயிலாக முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேலான மோக்ஷ வீட்டைப்  பற்றுவதும், எந்தவிதமான பற்றும் இல்லாத நிலையை நான் அடைவதற்காகவும்,
அந்த க்ஷணமே, மாயமாகவந்து என்னைப்பற்றியுள்ள துர்க்குணங்கள்  எல்லாம் என்னைவிட்டு நீங்க, அந்த ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாகி,
பாசம் எல்லாம் என்னை விட்டுப்போக உபதேச மொழியை வாய்விட்டுச் சொன்ன சற்குரு நாதனே ! உன் அற்புதமான அழகிய  திருவடிகளை நான் மறவேன் !

 மெய் புயம்= நமக்கு உண்மையான துணையாக இருப்பது. "முன்பு செய்த பழிக்குத்துணை அவன் பன்னிரு தோளும்" என அலங்காரத்தில் வருகிறது.
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் = இது சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்  முதலை விழுங்கிய பிள்ளையை வரவழைத்த அற்புத செயலைக் குறிக்கும். இந்த இறையருட் செயல் கலியின் பொய்ம்மையை விலக்கிவிட்டது. இறைவனின்  மெய்யருளே ஓங்கி நிற்கிறது !
ஆறாறு தத்துவம்  = தத்துவவாதிகள்  36 , 96 என தத்துவத்தின் எண்ணிக்கையைப் பலபடி சொல்வார்கள். இறைவன் இதற்கெல்லாம் அடங்கியவர் அல்ல! அவர் பக்தி வலையில் படுவோன்!  
"ஆறாறையும் நீத் ததன் மேல் நிலை " என்று அநுபூதியில் சொல்வார்.
"ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே" என்று இன்னொரு பாடலில் சொல்வார்.

சுந்தரர் வரலாறு சொல்லும் துதி

மதப்பட்டவி சாலக போலமு
  முகப்பிற்சன வாடையு மோடையு
  மருக்கற்புர லேபல லாடமு         மஞ்சையாரி

வயிற்றுக்கிடு சீகர பாணியு
  மிதற்செக்கர்வி லோசன வேகமு
 மணிச்சத்தக டோரபு ரோசமு        மொன்றுகோல

விதப்பட்டவெ ளானையி லேறியு
  நிறைக்கற்பக நீழலி லாறியும்
 விஷத்துர்க்கன சூளிகை மாளிகை        யிந்த்ரலோகம்

விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு
  பிரப்புத்வகு மாரசொ ரூபக
  வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி       ருந்தவாழ்வே


இதப்பட்டிட வேகம லாலய
  வொருத்திக்கிசை வானபொ னாயிர
  மியற்றப்பதி தோறுமு லாவிய           தொண்டர்தாள

இசைக்கொக்கவி ராசத பாவனை
  யுளப்பெற்றொடு பாடிட வேடையி
  லிளைப்புக்கிட வார்மறை யோனென        வந்துகா
னிற்

றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
  யவிழ்த்திட்டவி நாசியி லேவரு
  திசைக்குற்றச காயனு மாகிம              றைந்துபோமுன்

செறிப்பித்த கராவதின் வாய்மக
  வழைப்பித்தபு ராணக்ரு பாகர
  திருப்புக்கொளி யூருடை யார்புகழ்            தம்பிரானே


மத நீர் பெருகுவதும் விசாலமான தாடையும், முன்புறத்தில்  நுண்மையான முகபடாமும் நெற்றிப் பட்டமும், பச்சைக்கற்பூரத்தின் வாசனையுடன் கூடிய  பூச்சுக்கலவை கொண்ட நெற்றியும் கொண்ட யானையின் முதுகில் அம்பாரி பொருந்த, வயிற்றில் இடுகின்ற வெகு அழகான தும்பிக்கையும், நன்கு சிவந்த கண்களும், அதிவேகமாகச் செல்லும் நடையும், மணிகளின் சப்தம் பலமாகக் கேட்கும்படி கழுத்தில் கட்டப்பட்ட கயிறும் கொண்டு,
அழகு மிகுந்த வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மீது ஏறி பவனி வந்தும், செழிப்புற்ற  கற்பகத்தருவின்  நிழலில் அமைதியாகக் களைப்பாறியும்,
மலைக்கோட்டை போன்றனவும் நிலாமுற்றங்களும் உள்ளனவான  அரண்மனைகள் உள்ள  இந்த்ர லோகத்தில் புகழ்கொண்ட தேவர்கள்  சூழ்ந்து பணியும் ப்ரபுத்தன்மை கொண்டு ஆட்சி செய்யும் இளமையான உருவம் உள்ளவரே,
என்முன்னே  பிரத்யக்ஷமாகவந்து  ஆண்டருளிய வயலூரில் வீற்றிருக்கும் செல்வனே,
இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த காதலி பரவை நாச்சியாருக்கு வேண்டி ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலம்தோறும் சென்று தரிசித்த அடியாராகிய சுந்தரர்,
பொருந்திய தாளத்துடன்,  தெளிந்த முயற்சியுடனும் ஊக்கத்துடனும் அவர் பதிகம் பாடி வருகையில் கோடை வெப்பத்தால் அவருக்கு உண்டான களைப்பு நீங்க,  நேர்மையான  மறையவர் கோலத்தில்   காட்டில் சுந்தரருக்கு எதிரே தோன்றி,
தாம் கொண்டுவந்திருந்த  சோற்றுக்கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசிக்கு வரும்போது சுந்தரர் திசைதவறிப்போனபோது அவருக்கு திசையைக்காட்டி உதவி,மறைந்து போனவரும்,
முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து சுந்தரர் பாட்டுக்கு இரங்கி  பிள்ளையை வரச்செய்த பழையவராகிய கருணாமூர்த்தியும், திருப்புக்கொளியூர்
உடைய  சிவபெருமான்  புகழும் தம்பிரானே !

இந்தப் பாடலில் பல விஷயங்கள்  சொல்கிறார்.
வயலூரில் பெற்ற அருளைச் சொல்கிறார்.
சுந்தரர்  பரவை நாச்சியாருக்காக பொன் வேண்டியதைச் சொல்கிறார். இது தான் சுகப்பட வேண்டிக் கேட்ட பொருளல்ல. திருவிழாக் காண வருபவர்களுக்கு  பொன், துணி மணி உணவு ஆகியவை அளிப்பது பரவையார் வழக்கம். அதற்காகவே பொருள் வேண்டினார். இன்றும் கூட சிதம்பரம் போன்ற  க்ஷேத்ரங்களில் இருப்பவர்கள் தேர் திருவிழாக் காலங்களில் யாத்ரீகர்களுக்கு உணவு  அளிப்பதைக் காணலாம்.
சுந்தரருக்கு சிவபிரான் பொதி சோறு அளித்ததையும் அவருக்கு வழிகாட்டி உதவியதையும் சொல்கிறார்.
சுந்தரர் பாடலுக்கு இரங்கி முதலை விழுங்கிய பிள்ளையை திரும்பிவருமாறு
 செய்ததைச் சொல்கிறார்.




அவி நாசி-திருப்புக்கொளியூர் முருகன்
https://arunagiritemples.wordpress.com/




ஞானம் உற

மூன்றாவது பாடலில் ஞானத்தை வேண்டுகிறார்.

புனத்திற்றினை காவ லான காரிகை
  தனப்பொற்குவ டேயு மோக சாதக
 குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர்        நன்குமாரா

பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்
  சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்
 புயத்துற்றணி பாவ சூர னாருயிர்          கொண்டவேலா

சினத்துக்கடி வீசி மோது மாகட
  லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி
  தெறிக்கக்கணை யேவு வீர மாமனும்        உந்திமீதே

செனித்துச்சதுர் வேத மோது நாமனு
  மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி
  திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள்         தம்பிரானே.


நாம மான ஞானம                  தென்றுசேர்வேன்


தினைப்புனத்தில் காவல் இருந்த வள்ளியின் மீது ஆசைகொண்ட ஜாதகத்தை உடையவனே, பிறைச் சந்திரனைச் சூடியுள்ள சடையைக்கொண்ட சிவபிரானின் நல்ல  புதல்வனே !
பொறுமைக்குப் பூமியைப்போலிருந்து தர்ம நெறியில் நின்ற  பெரிய தவசிகள் சிறந்து வாழ, நெருங்கிய பசுமையான சோலைகளில் உள்ள மலர்களின் மாலைகளை  புயத்தில் அணிந்தவனும், பாவியாகிய சூரனது உயிரைக்கவர்ந்தவனுமான வேலனே !
அலைகள் வீசுகின்ற பெரிய கடலை அடைத்து, மாமிசம் உண்ணும் அரக்கர் முதல்வனான ராவணனுடைய  சிறந்த முடிகள் அற்று விழும்படி பாணம் விட்ட வீர மாமனாகிய  திருமாலும்,
அத்திருமாலின் உந்தியில் தோன்றி   நான்மறைகள் ஓதும் பெருமை வாய்ந்த பிரம்மனும் நன்மதிப்பு வைத்துப் புகழ்கின்ற வலிமைமிக்கவனே!
திருவிழாக்கள் நிறைந்து விளங்கும் திருப்புக்கொளியூரில்  வீற்றிருக்கும் தேவர்கள் தம்பிரானே !
பெருமை பொருந்தியதான ஞான நிலையை என்று நான் அடைவேன் !

.


Wednesday, December 5, 2018

12.திருப்புகழ். 108.A,சென்னிமலை 109.விஜயமங்கலம் 110.திருமுருகன்பூண்டி


12.திருப்புகழ் 108A.சென்னிமலை

அருணகிரிநாதர் புகழிமலையை விட்டு சென்னிமலைக்கு வந்ததாகத் தெரிகிறது. ஆனால் சென்னிமலைக்குரிய தனிப்பாடல் எதுவும் கிடைக்கவில்லை. திரிசிராப்பள்ளிக்குரிய ஒரு பாடலில் "சிரகிரி" எனறு வருகிறது. சிரகிரி என்பது சென்னிமலையின் பெயராக இலக்கியத்தில் வருகிறது. ஆகவே இப்பாடலை சென்னிமலைக்குரியதாகக் கொள்ளலாம்.

சென்னிமலைக்கு அருணகிரியார் வாழ்வில் ஒரு சிறப்புண்டு. சம்பந்தருக்கும் அப்பருக்கும் சிவபெருமான் திருவீழிமிழலையில் படிக்காசு அளித்தார். அதுபோல சென்னிமலையில் முருகன் அருணகிரிநாதருக்கு படிக்காசு அளித்தார் என்ற செய்தி   சென்னிமலை ஆண்டவன் காதல்  என்ற நூலில் வருகிறது.

நாட்டில் அருணகிரி நாதன் சொல் திருப்புகழ்
பாட்டில் மகிழ்ந்து படிக்காசளித்த பிரான்
தாலமிகுஞ் சென்னிமலை தன்னில் வளர் கல்யாண
வாலசுப்ப ராயனென்று வாணர்புகழ் வாசலினான்......

அதனால் சிரிகிரி என்னும் பாடலை சென்னிமலைக்குரியதாகக் கொள்ளலாம். இங்கு பழநி மலை போன்று முருகன் தண்டாயுதபாணியாக இருக்கிறார். பக்தர்களிடையே பிரசித்தமான ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் இங்குதான் அரங்கேறியது.



By பா.ஜம்புலிங்கம் - சொந்த முயற்சி, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=66553082

அநுபூதி  நிலைபெற

பகலிறவினில் தடுமாறா
     பதிகுருவெனத்  தெளிபோத
ரகசியமுறைத் தநுபூதி
     ரத நிலைதனைத் தருவாயே
இகபரமதற் கிறையோனே
     இயலிசையின் முத்தமிழோனே
சகசிரகிரிப்   பதிவேளே
     சரவணபவப் பெருமாளே.

எளிய பாடல் தான். ஆனால் இங்கே "பகலிரவு" என்பது  நினைவும் மறப்பும் என்பதைக் குறிக்கும். இந்த இரண்டும் அற்ற நிலையே யோக அநுபூதி நிலை. "இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே " என கந்தரலங்காரத்தில் வருகிறது. பிற திருப்புகழ் பாடல்களிலும் வருகிறது.


இரவுபகல் அற்ற இடத்தே ஏகாந்த யோகம்
வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே.

கங்குல்பகல் அற்ற திருக் காட்சியர்கள் கண்டவழி
எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே.    
என்று தாயுமானவர் பாடுகிறார்.
இந்த அநுபூதி நிலையையே இங்கே வேண்டுகிறார்.

109.விஜயமங்கலம்

இது அருணகிரிநாதர் தரிசித்துப் பாடிய 109வது தலம்.ஈரோட்டிற்கும் திருப்பூருக்கும் இடையே உள்ளது. இது பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் இருந்தபோது அர்ஜுனன் (விஜயன்) தங்கி தரிசித்த  நாகேஶ்வரர் , கோவர்த்தனாம்பிகை கோவில் உள்ள இடம், அதனால் விஜயபுரம், விஜயமங்கலம் எனப்பெயர் பெற்றது. 

https://kavithaimathesu.blogspot.com



இங்கு பாடிய ஒரு திருப்புகழ் இருக்கிறது.

உலக கண்டமிட் டாகாச மேல்விரி
  சலதி கண்டிடச் சேராய மாமவ
 ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில்           மகவாயும்

உணர்சி றந்தசக் ராதார நாரணன்
  மருக மந்திரக் காபாலி யாகிய
  உரக கங்கணப் பூதேசர் பாலக                 வயலூரா

விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
  இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
  விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய          இளையோனே

விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய
  விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
  விஜய மங்கலத் தேவாதி தேவர்கள்                   பெருமாளே.

நின்கழற் சீர்பாத நானினி         மறவேனே

(கலக சமப்ரம )

உலக்கையைத் துண்டு துண்டாக்கி, ராவிப் பொடி செய்து, ஆகாயம் மேலே விரிந்துள்ள கடலில் அப்பொடியைத் தூவி(யும்) ஆயர் கூட்டம் அனைவரும் ஒருசேர மடிய, கோபாலர் இடைச்சேரியில் குழந்தையாக வளர்ந்தும்,

ஞானம் மிக்க சக்ராயுதத்தை ஏந்தியவரும், காப்பவருமான  நாராயண மூர்த்தியின் மருகனே! பஞ்சாக்ஷரத்தின் மூலப்பொருளானவரும், பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தினவரும், பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவரும், பூத கணங்களுக்குத் தலைவனான ஈசனுடைய பிள்ளையே ! வயலூரானே !
வீரக் கழலணிந்த பெருமைகிக்க உன் பாதத்தை நான் இனி மறக்கமாட்டேன்.!

கொலைசெய்யும்  வில்லைக்கொண்டு போர்செய்யும் வேடர்கள், பேரொலிசெய்து கூவி நெருங்க , அதைக்கண்டு வருந்திய வள்ளியிடம் " நீ கவலையைவிடு " என்றுசொல்லி கையிலிருந்த கூரிய வேலைச் செலுத்திய இளையோனே !

வீரமிக்க வண்டுகள் முயற்சியுடன் நல்ல தேசி ராகத்தைப் பாடிடும்  நறுமணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே ! தேவாதி தேவர்களின் பெருமாளே ! உன் பாதத்தை நான் இனி மறக்கமாட்டேன்.

இதில் சாபத்தினால் இடையர் கூட்டம் அழிந்த  பாகவதச் செய்தியை விளக்குகிறார்.
காட்டில் வேடர்மீது முருகன் வேல்விட்ட நிகழ்ச்சியையும் சொல்கிறார்.
வண்டுகள் தேசி ராகம் பாடுகின்றன என்பதைச் சொல்கிறார் !

110.திருமுருகன்பூண்டி

இது அவிநாசிக்கு அருகில் உள்ள தலம். சிவபிரான் தன் பூதகணங்களை ஏவி சுந்தரரின் செல்வத்தைப் பறித்துக்கொண்டு பின் அருளிய இடம். ஸ்வாமியின் திருநாமம் முருகநாதேஶ்வரர், முருகநாத ஸ்வாமி. அம்பாள்  ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை, முயங்கு பூண்முலையம்மை, மங்களாம்பிகை, ஆவுடைநாயகி. சுந்தரரின் பாடல் பெற்ற ஸ்தலம். புராண வரலாறு உள்ளது.


http://kavitamilan.blogspot.com

சுந்தரர் பாடல்  (7ம் திருமுறை)

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.


முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
ரொன்றுந் தாமிலரே.


இங்கு அருணகிரிநாதரின் அருமையான பாடலொன்று இருக்கிறது.

ஆண்டுக் கொரு நாளில் !

அவசிய முன்வேண்டிப்   பலகாலும்
    அறிவில் உணர்ந்து  ஆண்டுக்கொரு நாளில்
தவ ஜெபமும் தீண்டிக்  கனிவாகிச்
    சரணமதும் பூண்டற்கு    அருள்வாயே
சவதமொடும் தாண்டித்  தகரூர்வாய்
    சடுசமயம் காண்டற்கு    அரியானே
சிவகுமரன் பீண்டிற்  பெரியானே
    திருமுருகன்பூண்டிப்     பெருமாளே

எளிய பாடல்.
சவதமொடும் தாண்டித் தகரூர்வாய் =  நாரதர் செய்த  யாகத்தில் வந்த ஆட்டுக்கிடாவை அடக்கி அதை  முருகன் வாகனமாகக் கொண்டது.
சடு சமயம்  = ஷட் சமயம் == ஆறு  சமயங்கள். சமய வாதங்களினால் முருகனை அறிய முடியாது.
இதில் வருஷத்திற்கு ஒரு நாளாவது  ஜப, தவ நியமத்துடன் முருகனை அன்புடன் வழிபட்டு (தரிசித்து) மனதில் நினைக்கவேண்டியது அவசியம்  என்று அறிவுறுத்துகிறார்.
இன்று ஆண்டுதோறும்  டிசம்பர் 31, ஜனவரி முதல் தேதியில் முருகபக்தர்கள் திருத்தணியில் ஒன்றுகூடி திருப்புகழ்பாடலுடன் படியேறி ஸ்வாமி தரிசனம் செய்கிறார்கள்.! 1918 முதல் வள்ளிமலை திருப்புகழ் ஸச்சிதானந்த ஸ்வாமிகள்  தொடங்கி வைக்க,  இது திருத்தணித் திருப்படித் திருவிழாவாகவே நடந்து வருகிறது ! "திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே"  (வினைக்கின மாகும் )என்று  600 வருஷங்களுக்கு முன்பு பாடியது இன்று நிறைவேறிவிட்டது!