Saturday, January 12, 2019

18.திருப்புகழ் 123. பழநி-திருவாவினன்குடி

18. திருப்புகழ். 123. பழநி - திருவாவினன்குடி





அருணகிரிநாதர் தரிசித்த 123வது ஸ்தலம் பழநி. தமிழ்நாட்டு முருக ஸ்தலங்களில் மிகவும் புகழ் பெற்றது. பழநி மலைமேல் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருப்பது திருவாவினன்குடி. இதுவே அறுபடைவீடுகளில் மூன்றாவதாகக் கருதப்படுகிறது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் 51 வரிகளில் திருவாவினன் குடியின் சிறப்பைப் பாடியிருக்கிறார்.
இதற்கு சிவமலை, சிவகிரி, பழநிச் சிவகிரி, பழனாபுரி என்றெல்லாம் பெயர்கள் வழங்கும். "அதிசயம் அனேகம் உற்ற பழநி ", "பதினாலு உலகோர் புகழ் பழநி" , "காசியை மீறிய பழநி ", "பிரகாசம்புரி பழநி" என்று பலவாறு வியந்து பாடியிருக்கிறார் அருணகிரிநாதர். யோக மரபில் பழநி மணிபூரகமாகக் கருதப்படுகிறது. 

பழநி பற்றிய புராணச் செய்திகள் அனேகமாக அனைவரும் அறிந்ததே. மலைமேல் தண்டாயுதபாணி ஸ்வாமி. இந்த விக்ரஹம் போகர் என்னும் சித்தர்  நவபாஷாணத்தினால் செய்ததாகச் சொல்வார்கள். இன்று வேறு விக்ரஹம் செய்துவைத்து அதற்கே பூஜை செய்கிறார்கள். திருவாவினன் குடியில் மயில்மேல் அமர்ந்த வேலாயுதப்பெருமாள். திருமுருகாற்றுப்படையில் மலைமேல் உள்ள கோயில் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.






காவடி எடுப்பது இத்தலத்திற்கே உரிய விசேஷ அம்சம்.



நமக்குக் கிடைத்திருக்கும்  திருப்புகழ்ப் பாடல்களில் அதிகம் பாடல்கள் -97- இத்தலத்திற்கே அமைந்துள்ளன. திருவாவினன்குடியைப் பற்றி 13 பாடல்களும், சிவகிரி-பழநிச் சிவகிரி பற்றி 6 பாடல்களும், வீரை-வீராபுரி 
பழநி பற்றி 6 பாடல்களும், பழநி பற்றி 72 பாடல்களும் இருக்கின்றன.அரிய கருத்துக்கள் நிறைந்த அற்புதப் பாடல்கள்.

திருவாவினன்குடி


படை வீடுகளில் மூன்றாவதான திருவாவினன் குடியைப்பற்றிய சில அருமையான பாடல்கள்:

துதிப்பாடல்கள்

நாத விந்துக லாதீ நமோநம
 வேத மந்த்ரசொ ரூபா நமோநம
  ஞான பண்டித ஸாமீ நமோநம        வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
 நாக பந்தம யூரா நமோநம        பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
 கீத கிண்கிணி பாதா நமோநம
 தீர சம்ப்ரம வீரா நமோநம           கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
 தூய அம்பல லீலா நமோநம
 தேவ குஞ்சரி பாகா நமோநம         அருள்தாராய்


 ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள்       பெருமாளே.

அருமையான துதிப்பாடல் இது போல இன்னொரு பாடல் :

போத கந்தரு கோவே நமோநம
 நீதி தங்கிய தேவா நமோநம
 பூத லந்தனை யாள்வாய் நமோநம        பணியாவும்

பூணு கின்றபி ரானே நமோநம
 வேடர் தங்கொடி மாலா நமோநம
 போத வன்புகழ் சாமீ நமோநம             அரிதான

வேத மந்திர ரூபா நமோநம
 ஞான பண்டித நாதா நமோநம
 வீர கண்டைகொள் தாளா நமோநம       அழகான

மேனி தங்கிய வேளே நமோநம
 வான பைந்தொடி வாழ்வே நமோநம
 வீறு கொண்டவி சாகா நமோநம             அருள்தாராய்


பாத கஞ்செறி சூரா திமாளவெ
 கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
 பார அண்டர்கள் வானா டுசேர்தர            அருள்வோனே

பாதி சந்திர னேசூ டும்வேணியர்
 சூல சங்கர னார்கீ தநாயகர்
 பார திண்புய மேசே ருசோதியர்              கயிலாயர்

ஆதி சங்கர னார்பா கமாதுமை
 கோல அம்பிகை மாதா மநோமணி
 ஆயி சுந்தரி தாயா னநாரணி                அபிராமி


ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
 கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
  ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள்  பெருமாளே.


இவை இரண்டுமே எளிய துதிப்பாடல்கள். இங்கு வரும்  சிவபிரான்-அம்பிகையின் நாமங்களைக் கவனிக்கவேண்டும். அரிய வாக்கு.

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர் செயல்களை முருகன் செய்ததாகச் சொல்லும் பாடல் :

பீலி வெந்துய ராலி வெந்தவ
 சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
  பீதி கொண்டிட வாது கொண்டரு        ளெழுதேடு

பேணி யங்கெதி ராறு சென்றிட
 மாற னும்பிணி தீர வஞ்சகர்
 பீறு வெங்கழு வேற வென்றிடு          முருகோனே

ஆல முண்டவர் சோதி யங்கணர்
 பாக மொன்றிய வாலை யந்தரி
 ஆதி யந்தமு மான சங்கரி                   குமரேசா


ஆர ணம்பயில் ஞான புங்கவ
 சேவ லங்கொடி யான பைங்கர
  ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள்           பெருமாளே.


கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
 ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
  கூர்மை தந்தினி யாள வந்தருள்  புரிவாயே

( மூல மந்திரம்)


திருஞான சம்பந்தர்-பழநி
"வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்
வள்ளல் மலர்த்தாள் தலை." (ஓழிவில் ஒடுக்கம்- பாயிரம்.)

இதே கருத்தை இன்னொரு பாடலிலும் சொல்கிறார்:

நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்
பொழி பாலை யுண்டிடு நுவல்மெய்ப்புள 
பால னென்றிடு           மிளையோனே

(பகர்தற் கரிதான )
இதை அருந்து, இதுவே ஞானம் தரும் என்று  உமையம்மை மொழிந்து, தந்த பாலை உண்டவனும், புகழும் வாய்மையும் நிறைந்தவனுமான குழந்தை என்று பாராட்டப்படும் இளையோனே !

இது திருஞான சம்பந்தர் சீர்காழியில் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சியைச் சொல்கிறது.. சம்பந்தராக வந்தது முருகனே என்பது அருணகிரி நாதர் கொள்கை. சம்பந்தர்  ஞானம், புகழ், வாய்மை எல்லாவற்றிலும் சிறந்திருந்தவர். இதை சம்பந்தர் தேவாரத்தில் பார்க்கலாம்,

"ஞானமார் ஞான சம்பந்தன்"
"நீடு புகழ் ஞான சம்பந்தன் "
"சம்பந்தன் வாய்மைத்து இவை சொல்ல "
"ஞானசம்பந்தன் வாய்மை பண்ணிய அருந்தமிழ்"
"ஞான சம்பந்தன் பொய்யிலி "
என்றெல்லாம் தேவாரத்தில் வருகிறது, சம்பந்தர் வாக்கு சத்திய வாக்கு.இத்தனை கருத்துக்களையும்   "நுவல் மெய்ப்புள பாலன்"  என்ற வரியில் அடக்கிவிட்டார் அருணகிரி நாதர் ! 

பூஜையும் சிலவே புரிய 

உலக வாழ்க்கையில் மதிமயங்காமல் பூஜை செய்ய அருளவேண்டும் எனப் பாடுகிறார் :

பூத லந்தனி லேம யங்கிய         மதிபோகப்

போது கங்கையி னீர்சொ ரிந்திரு
 பாத பங்கய மேவ ணங்கியெ
 பூசை யுஞ்சில வேபு ரிந்திட         அருள்வாயே

தீயி சைந்தெழ வேயி லங்கையில்
 ராவ ணன்சிர மேய ரிந்தவர்
 சேனை யுஞ்செல மாள வென்றவன்          மருகோனே


தேச மெங்கணு மேபு ரந்திடு
 சூர்ம டிந்திட வேலின் வென்றவ
 தேவர் தம்பதி யாள அன்புசெய்               திடுவோனே

ஆயி சுந்தரி நீலி பிங்கலை
 போக அந்தரி சூலி குண்டலி
 ஆதி யம்பிகை வேத தந்திரி                  யிடமாகும்


ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
 போத கந்தனை யேயு கந்தருள்
 ஆவி னன்குடி மீதி லங்கிய                   பெருமாளே.


(வேயிசைந்தெழு )

இந்தப் பாடலில் ராமாவதாரத்தைச் சொல்கிறார். முருகன் அவதார ரகசியத்தையும் சொல்கிறார். இங்கு வரும் அம்பிகையின் நாமாவளியும் அருமையான வாக்கு.
மற்றொரு பாடலில் கிருஷ்ணரைச் சொல்கிறார் :

நுதிவைத்த கரா  மலைந்திடு
களிறுக்கு அருளேபு ரிந்திட
நொடியிற் பரிவாக வந்தவன்       மருகோனே
(பகர்தற் கரிதான )

கூர்மையான  நுனிப்பல்லை உடைய  முதலை வலியப் போராடிய கஜேந்திரன் என்னும் யானைக்கு அருள்புரிய  ஒரு நொடிப்பொழுதில் அன்புடனே வந்த திருமால்!

அருளை மறவாமை

ஒரு பாடலில் முருகன் தனக்கு திருப்புகழ் பாடுமாறு வயலூரில் அருளியதைச் சொல்கிறார் :

பாத பங்கய முற்றிட வுட்கொண்டு
ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் அன்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே
(கோல குங்கும )

அதேபோல தனக்கு ஜபமாலை அளித்ததையும் சொல்கிறார்:


அபகார நிந்தைபட்      டுழலாதே
அறியாத வஞ்சரைக்    குறியாதே
உபதேச மந்திரப்        பொருளாலே
உனை நான் நினைந்தருள்    பெறுவேனோ
இபமாமுகன் தனக்      கிளையோனே
இமவான் மடந்தையுத்     தமிபாலா
ஜெபமாலை தந்த சற்     குருநாதா
திருவாவினன் குடிப்      பெருமாளே

இறைவனை நினைத்துப் பாட

நாம் இறைவனை நினைந்து புகழ்ந்து பாடவேண்டும். ஆனால் எப்படி நினைப்பது? ஒரு அருமையான கருத்தைச் சொல்கிறார் :

வைப்பெனவே  நினைந்துனைப் புகழ்வேனோ 

(கனமாயெழுந்து )
இங்கு வைப்பு என்பது  எய்ப்பினில் வைப்பு- க்ஷேமநிதி! நமக்குக் கஷ்டம் வந்தபோது உதவுவது ! நமக்கு உள்ள சொந்த, நிலையான நிதி முருகனே! இப்படி நினைத்துப் புகழவேண்டும்.'
 " நீவேரா குல தனமு  ஸந்ததமு நீவேரா ஜீவனமு ஓ ராமா" என்பார் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்.








"தோகையம் பரிதனில் அற்புதமாக வந்தருள் புரிவாயே"

திருவாவினன் குடிப் பெருமாள்- வேலாயுதன்





ஞான இன்பத்தை வேண்டுதல்

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
 செவிமீதி லும்பகர்செய்            குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
 செயலேவி ரும்பியுளம்          நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
 மடியேனை அஞ்சலென        வரவேணும்


அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
 அருள்ஞான இன்பமது         புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
 ரகுராமர் சிந்தைமகிழ்         மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு           விளைகோவே


தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
 திறல்வீர மிஞ்சுகதிர்             வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
 செகமேல்மெய் கண்டவிறல்        பெருமாளே.


எளிய பாடல்தான். முருகன் சிவனுக்கு உபதேசித்த விதத்தைச் சொல்கிறார்.
இதையே வேறொரு பாடலிலும் சொல்கிறார்:

அகரப்பொரு ளாதி யொன்றிடு 
முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு       குருநாதா

(பகர்தற் கரிதான )
அகரம், உகரம், மகரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியதும்,
எல்லா மந்திரங்களுக்கும் முதல் அக்ஷரமாக இருப்பதுமான
ப்ரணவத்தின் பொருளை சிவபிரானுக்கு இனிதாக எடுத்துரைத்த  குருநாதனே!


முருகன் அருளும் ஞானம்  அறிவைப் பெருக்கி, இடரைத் தொலைத்து இன்பம்தரும்  தன்மையது.
நவலோகமும்  கைதொழு நிஜ தேவ  = நமது பரதக்கண்டம்போல ஒன்பது கண்டங்கள் இருக்கின்றன. அவை அனைத்திலும் வாழும் உயிரினங்களுக்கு என்றும் உள்ள தெய்வம் முருகனே. அதனால் அவர்கள் அனைவரும் கைகூப்பித் தொழுகின்றார்கள்.
அலங்க்ருத நலமான விஞ்சை கரு விளை கோவே = அலங்காரமான நலம் விளைக்கும் வித்தைகள் அனைத்தும் இறைவனிடமிருந்தே வந்தன.  வேதாகம சாஸ்திரங்களை வெளிப்படுத்தியவர் முருகனே. 
" வேதா சாஸ்த்ராணி விஞ்ஞானம் ஏ தத் ஸர்வம் ஜனார்த்தனாத் " என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் வருகிறது.

செகமேல் மெய்கண்ட விறல் பெருமாளே = உலகத்தில் உண்மைப் பொருளைக் கண்டு  தெரிவித்த திறம் வாய்ந்த பெருமாள். இது திருஞான சம்பந்தராக வந்ததைக்  குறிக்கலாம் அல்லது ருத்ரஜன்மராக வந்து சங்கப் புலவர்களின் கலகம் தீர்த்ததைக் குறிக்கலாம்.
இப்படி அருமையான பாடல்கள் திருவாவினன் குடியில் பாடியிருக்கிறார்.












Friday, December 14, 2018

17.திருப்புகழ் 121.கீரனூர் 122.ஆய்க்குடி


17.திருப்புகழ் 121. கீரனூர்

கொண்டலிறங்கி கீரனூர் மலை! இங்கிருந்து பழநி தெரியும்!
  நன்றி : http://www.seithipunal.com

அருணகிரிநாதர்  ஊதிமலையிலிருந்து கீரனூருக்கு வருகிறார். இது இவர் தரிசித்த 121வது தலம். இது தாராபுரம்-பழனி வழியில் இருக்கிறது. இங்கு ஒரு பாடல் இருக்கிறது.

பார மேருப ருப்பத மத்தென
  நேரி தாகஎ டுத்துட னட்டுமை
  பாக ராரப டப்பணி சுற்றிடு         கயிறாகப்

பாதி வாலிபி டித்திட மற்றொரு
  பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி
  பாரி சாதமு தற்பல சித்திகள்        வருமாறு

கீர வாரிதி யைக்கடை வித்ததி
  காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
  பாளு வாகிய பச்சுரு வச்சுதன்         மருகோனே


கேடி லாவள கைப்பதி யிற்பல
  மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய
  கீர னுருறை சத்தித ரித்தருள்           பெருமாளே.


 தோதக வித்தைகள் கற்பவ              ருறவாமோ

(ஈரமோடு சிரித்து )

கனத்த மேரு மலையை  மத்தாகத் தேர்ந்தெடுத்து, உடனே அதைப் பாற்கடலில் நாட்டி, உமையைப் பாகமாக உடைய சிவபெருமானது கழுத்தில் மாலையாக விளங்குவதும், படங்களைக்கொண்டதுமான (வாசுகியாகிய ) பாம்பை அந்த மத்தில்  கயிராகச் சுற்றி,
ஒரு பாதியை வாலி பிடிக்க, மற்றொரு பாதியை தேவர்கள் பிடிக்க, லக்ஷ்மி, பாரிஜாதம் முதலிய சித்திகளும், அரிய பொருட்களும் ( அப்பாற்கடலிலிருந்து) வெளிவர,
பாற்கடலைக் கடையவைத்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தருளிய க்ருபாமூர்த்தியாகிய  பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகனே !
கேடில்லாத குபேரனுடய அளகாபுரியைப்போல பல மாடக்கூடங்களும் மலர்ச்சோலைகளும்  நிறைந்த கீரனூரில் அமர்ந்து வேல் ஏந்தி அனைவருக்கும் திருவருள் புரியும் பெருமாளே !
வஞ்சனை வித்தைகள்  கற்றுள்ள விலைமகளிர் உறவு  நல்லதாகுமா? (ஆகாது )

பாற்கடலைக் கடைந்தது

அருணகிரியாரின் அருமை வாக்கிலிருந்து வரும் அமுதப் பாடல். பாற்கடலைக் கடைந்த பாகவத நிகழ்ச்சியை அருமையாக விவரிக்கிறார். திருமால்  பாற்கடலிலிருந்து வந்த அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்தார். ஆனால், பாற்கடலிலிருந்து முதலில் வந்தது ஆலகால விஷம் ! இதைச் சிவபெருமான் அருந்தவில்லையெனில், அமுதம் தேவர்களுக்குக் கிடைத்திருக்காது! சிவபெருமான் அந்த விஷத்தைப் பருகும்போது அதைக் கண்டத்திலேயே தடுத்து நிறுத்தியது உமாதேவியார் ! இந்த விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல், "உமை பாகர் " என்று சுருங்கச்சொல்லி அசத்துகிறார் ! மேலும் சிவபிரான் விஷப்பாம்பையே மாலையாக அணிந்துள்ளார். வேறு விஷம் அவரை என்ன செய்துவிடும் என்ற குறிப்பும் இருக்கிறது!

பொது மகளிர்

இப்பாடலில் முதல் நான்கு  அடிகள்  (இங்கு தரவில்லை)பொது மகளிர் பற்றியது. இப்படிப் பல பாடல்களில் இருக்கும். இதை  அருணகிரி நாதரின் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். இது தவறாகும். தமிழ் நாட்டில் பரத்தையர் வழக்கம் பொதுவாக இருந்தது. இதைச் சங்க இலக்கியத்தில் காணலாம். இதைக் கண்டித்து எழுதியவர் திருவள்ளுவர். பிறனில் விழையாமை, வரைவின் மகளிர் என்று இரு அதிகாரங்களை வகுத்து கண்டித்திருக்கிறார். நமது சமய இலக்கிய மரபில் பெரியோர்கள் உலகில் உள்ள எல்லாக் குற்றங்களையும் தம்மீதே ஏற்றிச் சொல்வார்கள். தம்மையே நாயேன், பேயேன் என்றெல்லாம் சொல்லிகொள்வார்கள். இதை வைத்து அவர்கள் கெட்டவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது. வள்ளுவரைப் பின்பற்றி அருணகிரிநாதரும் இவ்வழக்கத்தைக் கண்டிக்கிறார்.
கீரனூர் மலை : மற்றொரு தோற்றம். குன்றெல்லாம் குமரன் தானே!
 நன்றி : http://www.seithipunal.com

122.ஆய்க்குடி

கீரனூரிலிருந்து அருணகிரிநாதர்  ஆய்க்குடிக்கு வருகிறார். இது 122வது தலம்.
ஆய்க்குடி தென்காசிக்கு அருகில் உள்ளது என்று தணிகைமணி அவர்கள் எழுதியிருக்கிறார், ஆனால் இது சரியெனத் தோன்றவில்லை. இதுவரை அருணகிரியார் கொங்கு நாட்டுத் தலங்களைப் பார்த்து வருகிறார். அடுத்து தரிசிப்பது  பழநி- அதுவும் கொங்கு நாட்டில்  உள்ளது. அதனால் இங்கு குறிப்பிடும் ஆய்க்குடி  தென்காசி  ஆய்க்குடியாக இருக்க முடியாது. இனி, 
பழநிக்கு அருகிலும்  ( 4 கிமீ ) ஒரு ஆயக்குடி இருக்கிறது.  இது ஆவியர் என்ற ஒரு பிரிவினர் ஆண்ட பகுதி ( மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் இக்குடியைச் சேந்தவன் ) அதனாலேயே பழநி அடிவாரத்திலிருக்கும் ஊர் "ஆவினன் குடி " எனப்படுகிறது.  அருணகிரியார் அடுத்துப் பாடிய தலம் பழநி என்பதால் இந்த ஆயக்குடியையே நாம் இங்கு குறிப்பிட்ட தலமாக 
எடுத்துக்கொள்ள வேணும்.

பழநி மலைத்தொடரின் ஒரு காட்சி- விக்கிபீடியா

வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
  மாப்புடைத் தாளரசர்                    பெருவாழ்வும்

மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
  வாழ்க்கைவிட் டேறுமடி           யவர்போலக்

கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
  கோத்தமெய்க் கோலமுடன்          வெகுரூபக்

கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
  கூத்தினிப் பூரையிட                   அமையாதோ


தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
  சாய்த்தொடுப் பாரவுநிள்                   கழல்தாவிச்

சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
  தாழ்க்கவஜ் ராயுதனு                          மிமையோரும்

ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
  மாய்க்குடிக் காவலவு                             ததிமீதே

ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை
  ஆர்ப்பெழச் சாடவல                         பெருமாளே.


வாள்வீச்சினால் சேனைகளை வெருட்டி ஓட்டி அதனால் இறுமாப்படைந்த  முயற்சியுடைய  அரசர்களின் பெரிய வாழ்வும்,
ஒரு நொடிப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகும் என்பதை நினைத்து, இல்லற வாழ்க்கையைத் துறந்து கரையேறும் அடியார்களைப்போல,
ஒரு உயர்ந்த குறிக்கோளுடன் வாழவும், உனது பாத மலரைத் தரிசித்து இளைப்பாறவும்,
வினைவசத்தால் அலையும் இத்தேகமாகிய உருவத்திற்கு பலவிதமான அலங்காரங்களைச் செய்து, துன்பங்களில்  சிக்கித்தவிக்கும்  இந்த வாழ்க்கை என்னும் கூத்து இனி முடிவே பெறாதோ ?
கால் பட்டாலே  கோபித்துச் சீறும்  விஷப்பாம்பு போல, பாலன் மார்க்கண்டேயனைக் குறிவைத்து எமன் தொடரவும்,
தமது நீண்ட திருவடியை நீட்டி,  பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கோர உருவுடைய எமனை உதைத்த சிவபெருமான்
உன்னிடம் உபதேசம் பெறுவதற்காக  தமது திருமுடியைத் தாழ்த்தி வணங்க,
வஜ்ரப்படையுடைய இந்த்ரனும் தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்கவும்,
பொன்னிறமான பிரம்மனைச் சிறையிலிட்ட ஆய்க்குடியின்  அரசனே !
இந்த உலக வாழ்க்கை என்னும் கூத்து முடியாதோ?

யாக்கை நிலையாமை

இங்கு யாக்கை நிலையாமையை உணர்ந்து தெய்வ நினைவைப் பற்றவேண்டும் என்று உபதேசிக்கிறார்.
"மாத்திரைப் போதில்..போம்" = இந்த உடல்  அழியக்கூடியது.
"அல்லின் நேரும் மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை" என்பார். இரவில் தோன்றி மறையும் மின்னல் போல இந்த உடலும் மறைந்துவிடும்.
வினை கோத்த மெய்  = இந்த உடல்  நம் முன்வினையால் அதற்கேற்ப வருவது. "விதி காணும் உடம்பு " என்பார்  அநுபூதியில். 
" வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்
வினைதானொழிந்தால்  தினைப்போதளவும்  நில்லாது கண்டாய் "
என்பார் பட்டினத்தார்.

எமனுக்குக் கோபம் ?

எமனுக்குக் கோபம் வருமா?  குறித்த காலத்தில் வந்து உயிரைப் பறிப்பது எமனுடைய தொழில். இதில் அவனுடைய சொந்த விருப்பு-வெறுப்புக்கு இடமில்லை. எமனுக்குத் தர்மராஜா என்றும் பெயர் ! ஆனால் எமன்  கோபத்துடன் கண்கள் சிவக்க வருவதாகப் பாடுவது மரபு. இது உயிர் பிரியும்  நேரத்தில் விளையும் துன்பத்தைக் குறித்துச் சொல்வது.
"முதலவினை முடிவில் இரு பிறை எயிறு கயிறு கொடு
முது வடவை  விழி சுழல வரு கால தூதர் " என சீர்பாத வகுப்பில் சொல்வார்.
"கரிய பெரிய எருமை கடவு  கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிருகு கயிரொ டுயிர்கள் கழிய  முடுகி எழுகாலம் " 
என ஒரு பாடலில் சொல்வார்.இப்படிப் பல பாடல்களில் பாடியிருக்கிறார். வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து தெய்வத்தைப் பற்றவேண்டும் என்பதே  நோக்கம். இந்த உலகத்துடன் நமது தொடர்பு இந்த உடலைப் பற்றி அமைந்ததே.. உடல் நிலையில்லாதது என்பதால் இந்த உலகத்துடனான தொடர்பும் நிலையற்றதே. நம் உயிருக்குள்ள தொடர்பு இறைவனுடனானது, இதற்கு முடிவே இல்லை! இதைத்தான் அருணகிரி நாதர் வலியுறுத்துகிறார்.
"ஆவிக்கு மோசம் வருமாறறிந்துன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினை தீர்த்தருளாய் " என்று அலங்காரத்தில் சொல்கிறார். 

பிறவி என்னும் கடல்

"பாரி வரு கூத்து " = வளர்ந்து வரும் ஆட்டம்.இந்த உலக வாழ்க்கை ஒரு கூத்து போன்றது.இது பல பிறவிகளில் தொடர்ந்து வருவது. வினை தீராத வரை இந்தகூத்தும் முடிவுபெறாது.
"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர்ப்பிறவி  அவதாரம் ". நாம் எடுத்த பிறவிகளுக்குக் கணக்கே இல்லை!

 இதற்குத் தீர்வு இறைவன் கழலைப் பற்றுவதே. இதைத்தான் பலவிதங்களில்  சொல்கிறார் அருணகிரிநாதர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடி சேராதார்.

-திருக்குறள் : கடவுள் வாழ்த்து.
மெய்யுணர்தல் என்னும் அதிகாரமும் பார்க்கவும்.



Thursday, December 13, 2018

16,திருப்புகழ் 119. சிங்கை 120.ஊதிமலை


16.திருப்புகழ் 119. சிங்கை (காங்கேயம்)


Anamalai, Coimbatore


இத்தலம்  ஈரோடு-திருப்பூர் ரயில் பாதையில் ஊத்துக்குழிக்கு அருகிலுள்ளது. அருணகிரிநாதர் தரிசித்த 119வது தலம். இதற்கான இரண்டு பாடல்கள் இருக்கின்றன. இரண்டிலும் வினைகள் அறவேண்டும் என வேண்டுகிறார்.

கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
     கந்திகமழ் கின்ற ...... கழலோனே

கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
     கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா

செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
     திண்குயம ணைந்த ...... திருமார்பா

செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
     சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.


 யின்று நன்றில்வினை கொன்று
     நன்றுமயில் துன்றி ...... வரவேணும்


(சஞ்சரி யுகந்து)

தாமரை,கொன்றை, தும்பை, மகிழம் ஆகிய மலர்கள்  நிறைந்து  மணம் கமழும் கழல்களை உடையவனே !
அழுகிய பிணங்களைத் தின்னும் பேய், நாய், நரி, காக்கை, பருந்து முதலியவற்றின் கூட்டம் காணும்படி போர்க்களத்தில்  வீசும் ஒளியுடைய வேலை உடையவனே !
இனிய சொல்லுடைய எங்கள் குறமகள் வள்ளியை அணைந்த மார்பனே !
செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் மிகுந்த சிறப்புமிக்க சிங்கை நகரில் அமர்ந்து அருளும் பெருமாளே !
என்னுடைய தீய வினைகள் இன்றே அழியுமாறு  நன்மை தரும் மயில் மீதில் வரவேணும்.

தொங்குசடை மீது திங்களணி நாதர்
   மங்கைரண காளி         தலைசாயத்

தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
  என்றுநட மாடு                 மவர்பாலா

துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
  மங்களம தாக             அணைவோனே

கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
  அந்தமுனை வேல்கொ            டெறிவோனே

கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
  சிங்கைநகர் மேவு                பெருமாளே.


சந்திதொறு நாண மின்றியகம் வாடி
  உந்திபொரு ளாக             அலைவேனோ

சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
  தங்கள்வச மாகி            அலையாமற்

சுந்தரம தாக எந்தன்வினை யேக
  சிந்தைகளி கூர                       அருள்வாயே


தொங்கும் சடையின்மேல் சந்திரனைச் சூடிய பெருமான், மங்கையும் போருக்கு எழுந்தவளுமாகிய காளி  நாணமடைந்து தலைகுனியுமாறு நடனம் ஆடிய  சிவபெருமானின்  குமாரனே !
பெருமை  பொருந்திய  வேடர்களின் குலத்தில் வந்த வள்ளியை அணைந்தவனே!
கந்தனே ! முருகேசனே ! போரிட நெருங்கி வந்த அசுரர்கள் மடிய  கூரியவேலை எறிந்தவனே !
காஞ்சி ஏகாம்பரநாதர், கைலாசபதி, ஆகிய சிவனது  மைந்தனே ! கூரிய வேலாயுதத்தை உடையவனே ! சிங்கைப் பதியில் அமர்ந்த பெருமாளே !
காலையும் மாலையு,ம் வெட்கமில்லாமல் உள்ளம் சோர்வடைய, வயிறே காரியமாக அலைச்சல் படுவேனோ !
தினமும் மாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், அழகுபெற என்னுடைய வினைகள் தொலைந்து  ஒழிய, மனம் மகிழ்ச்சி பெற  அருள்புரிவாயாக.

இருவினையும் அகலவேண்டும்

முதல் பாடலில் கெட்ட வினைகள்  ( நன்று இல் வினை ) அழியவேண்டும் என்றார். இரண்டாவது பாடலில்   பொதுவாக  "எந்தன் வினையேக " என்கிறார். நல்வினை, தீவினை ஆகிய இரண்டுமே பிறவிக்குக் காரணமாகின்றன. ஆகவே இருவகை வினைகளும் அழியவேண்டும். இதற்கு முருகன் அருள் வேண்டும். "வினை யோட விடுங்கதிர் வேல் " என்பார். "வினைப்பகை யறுத்து நினைத்தது முடித்து மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக் கடலே " என்று வேண்டுவார். இந்த வினை நீக்க வேண்டுகோள் ஜீவர்களுக்கு முக்கியமானது. திருஞான சம்பந்தரும் பல பாடல்களில் வினை நீக்கம் பற்றியே பாடியிருக்கிறார்.


Palamalai near Coimbatore

120. ஊதிமலை
அருணகிரிநாதர் தரிசித்த 120 வது தலம் ஊதிமலை. இது தாராபுரம்-காங்கேயம்  வழியில் இருக்கிறது. இதற்கான இரு பாடல்கள் இருக்கின்றன.

வணங்க அருள் வேண்டல்

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
  ஆவுடைய மாது தந்த                                  குமரேசா

ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
  ஆளுமுனை யேவ ணங்க                     அருள்வாயே

பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
  பூரணசி வாக மங்க                       ளறியாதே

பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
  போகமுற வேவி ரும்பு                    மடியேனை

நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
  நீதிநெறி யேவி ளங்க                       வுபதேச


நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
  நீலமயி லேறி வந்த                          வடிவேலா


ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
  ஊழியுணர் வார்கள் தங்கள்                    வினைதீர

ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
  ஊதிமலை மீது கந்த                                 பெருமாளே.


எளிய பாடல்.  கடவுளை  வணங்கவும் அவன் அருள் வேண்டும். "அவனருளாலே அவன் தாள் வணங்கி " என்பார் மாணிக்கவாசகர். " ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த " என்று முதல் பதிகத்தின் முதல் பாடலிலேயே  பாடுகிறார் சம்பந்தர். அதனால் இங்கே முருகனை வணங்க அவன் அருளையே வேண்டுகிறார்.
பக்தி என்று சொன்னாலும் நமது வழிபாடு,  சாதனை முறைகள் மரபு வழியில் பெரியோர் உபதேசித்த படி இருக்கவேண்டும். நமது வழி வேத மரபில் வந்தது. அதனால் "ஓதுமறை ஆகமம் சொல் யோகமதுவே புரிந்து " என்று சொல்கிறார்.
இப்படிப் பல பாடல்களில் அருளை வேண்டுகிறார்.

இன்சொல் விசாகா க்ருபாகரா !
 நாளும் உன் புகழே பாடி
நான் இனி அன்புடன் ஆசார பூஜை செய்து
உய்ந்திட வீணாள் படாது அருள் புரிவாயே !

ஆவினன்குடி மீதிலங்கிய பெருமாளே !
கங்கையின் நீர் சொரிந்து
இரு பாத பங்கயமே வணங்கி
பூஜையும் சிலவே புரிந்திட  அருள்வாயே !

சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே !
விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே !

வெகுமலரது கொடு வேண்டியாகிலும்
ஒருமலர் இலை கொடு  மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே.
(கூந்தலூர் பாடல் )

ஒரு மலர், இலை என்பது கீதையில் வரும்
"பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஶ்னாமி "
என்ற சுலோகத்தை நினைவூட்டுகிறது.  [ பக்தியுடன் அர்ப்பணிக்கப்படும் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை நான் அருந்துகிறேன் ]
"புண்ணீயம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும் " என்பார் திருமூலர்.
இவ்வாறு நாம் செய்யும் வழிபாடு மரபுவழியில் வந்ததாக இருக்கவேண்டும்.
இப்படி மறை ஆகம வழியில் பக்தியோகம் செய்பவர்களின் வினை தீரும் 
என்கிறார் !
அடுத்த பாடலிலும் அருளையே வேண்டுகிறார்.

நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
  போதக மற்றெச் சகத்தை யுந்தரு
  நான்முக னுக்குக் கிளத்து தந்தையின்          மருகோனே

நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
  தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
  நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள்                      வடிவேலா

தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
  டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
 தோதிமி தித்தித் தனத்த தந்தவெ                          னிசையோடே


சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
  ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
  சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள்                 புரிவோனே

ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
  காரண பத்தர்க் கிரக்க முந்தகு
  ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட                  ரொளியோனே


ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
  காபர ணத்திற் பொருட் பயன்றரு
  ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள்                             பெருமாளே.


கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
  ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
  கூறு மிடத்துக் கிதத்து நின்றருள்                                 புரிவாயே


(கோதி முடித்து )

நாத நிலையில் (சிவ தத்துவத்தில் ) மனது நிலைக்கும்படி மகிழ்ந்து அருள்புரியும் ஞான குருவே! எல்லா உலகங்களையும் படைக்கும் பிரம்மனுக்குத் தந்தை என்று சொல்லப்பட்ட திருமாலின் மருகனே !
உன்னை நாடும் அடியேனுக்கு வந்த துன்பம் தீரும்படி திருவடியைத் தந்த கூரிய வேலனே ! நாதராம் சிவபிரான் "தகப்பன் சாமியே " என்று அன்புடன் அழைத்த வடிவேலனே !
தோதிமி தித்தி...என  பூத கணங்கள் நடனம் செய்து, நான் உயிரை விடும்போது என்மீது இரக்கம் கொண்டு,என்னை சுப மங்கள வாழ்த்து நிலையில் சேர்ப்பிக்கத்  திருவுள்ளம் கூடி, வந்து எனக்கு அருள்புரிந்தவனே!
ஓதப்படும் மந்திரங்களுக்கு உட்பொருள் என்றும், சிவ பக்தரிகளிடம் இரக்கமுள்ளவனென்றும், உயர்ந்த ப்ரணவ எழுத்துக்கு உயிர் நாடி என்றும் 
சொல்லநின்ற  பேரொளியானவனே !
ஒதியமரம் பூத்துக் குகையில் உதிர்க்கின்ற பொன் ஆபரணம்போல  அருமையான மோக்ஷ பலனைத்தரும்  பெருமாளே ! ஊதிமலையில்  மனம் உகந்து அமர்ந்தருளும் பெருமாளே !
திடம் இல்லாத மனதை ஒழித்து,, திடமுள்ள கூரிய மதியும் ஞானமும் கொண்ட குணத்தைப் பெற்று, உனது திருவிளையாடல்களைப் பேசும் இடத்தில்  இன்பமுடன் நான் நிற்கும்படி அருள் புரிவாயாக.

இது அருமையான உருக்கமான பாடல். பல அரிய கருத்துக்களைச் சொல்கிறார். பக்தியோக வழியில் பொதுவாக ஒன்பது படிகளைச் சொல்வார்கள். அதில் முதலில் வருவது  "ஶ்ரவணம் ". பகவானது பெயரையும் புகழையும் அருட்செயல்களையும் காதாரக் கேட்டு கருத்தில் வாங்கி இருத்துவது,  இது பக்தர்களுக்கு மிக மகிழ்ச்சி தரும் செயல். இப்படிப் பட்ட இடத்தில் தான் நிற்கவேண்டும் என்கிறார் அருணகிரி நாதர்.
இனிமை தரும் உன தடியவர் உடனுற
மருவ அருள்தரு கிருபையின்  மலிகுவ   தொருநாளே

என  திருமயிலைப் பாடலிலும் வேண்டுவார். 



A View of the Western Ghats, Gopan Madathil [Attribution]

பக்தர்களின் செயல்

இந்த நிலையை பாகவதம் வெகுவாகப் புகழ்கிறது.


तव कथामृतं तप्तजीवनं
     कविभिरीडितं कल्मषापहम् ।
श्रवणमङ्गलं श्रीमदाततं
     भुवि गृणन्ति ते भूरिदा जनाः 

தவ கதாம்ருதம் தப்த ஜீவனம்
கவி பிரீடிதம் கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்களம் ஸ்ரீமதாததம்
புவி க்ருணந்தி தே பூரிதாஜனா :


ஹே க்ருஷ்ணா ! தங்களுடைய  கதையாகிற அமிர்தம்  தாபத்தை அடைந்தவர்களுக்கு உயிர் அளிப்பது.  (வ்யாஸர், ஶுகர் போன்ற ) ஞானிகளால் கொண்டாடப்பட்டது. காம கர்மங்களைப் போக்கக்கூடியது. கேட்ட மாத்திரத்தில் மங்களங்களைக் கொடுக்கக்கூடியது. ஸகல ஐஶ்வர்யத்தையும் அளிக்கக்கூடியது. இக்கதையாகிற அமிர்தத்தை யார் சொல்கிறார்களோ அல்லது அனுபவிக்கிறார்களோ அவர்களே மஹாபாக்யசாலிகள். (புண்யம் செய்தவர்கள்.)
இதை கோபிகைகள் சொல்கிறார்கள்.
பகவான் விஷயம் சொல்பவர்கள், கேட்பவர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் மங்களம் தரக்கூடியது. அதனால் பக்தர்கள் கூடும் இடத்தில் பகவானைப்பற்றிய பேச்சுதான் இருக்கும். கீதையிலும் பகவான் இதைச் சொல்கிறார் :

सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते।।9.14।।


ஸததம் கீர்த்தயன் தோமாம்   யதன்தஶ்ச த்ருடவ்ரதா :
நமஸ்யன் தஶ்ச  மாம் பக்த்யா  நித்ய யுக்தா உபாஸதே .      9.14

உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள்  இடைவிடாது என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்துகொண்டும், என்னை அடையும் முயற்சியில் ஈடுபட்டும், என்னைத் திரும்பத் திரும்ப வணங்கிக்கொண்டும், எப்பொழுதும் என்னுடைய தியானத்திலேயே நிலைத்திருந்தும்  வேறு ஒன்றிலும் நாட்டமில்லத அன்புடன் என்னை வழிபடுகிறார்கள்.

मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।।10.9।।


மத் சித்தா மத் கதப்ராணா  போதயன்த : பரஸ்பரம்
கதயன்தஶ்ச  மாம் நித்யம் துஷ்யன் திச ரமன் தி ச        10.9

என்னிடமே மனதைச் செலுத்தியவர்களும், என்னிடமே உயிரை அர்ப்பணித்தவர்களுமான பக்தர்கள் , தங்களுக்குள்ளே என்னுடைய ப்ரபாவத்தை விளக்கிக்கொண்டும்,  என் குணங்களையும் ப்ரபாவத்தையும் பேசிக்கொண்டும் எப்பொழுதும் மகிழ்கிறார்கள். என்னிடமே இன்புறுகிறார்கள்.

இப்படிப்பட்ட இடத்தில் தான் நிற்கவேண்டும் என்கிறார்  அருணகிரியார்.


நாட்டு ரோஜா, http://thooddam.blogspot.com/